நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தில் நாங்கள் இரத்த வியர்வை சிந்தி பண்படுத்திய நிலம் கெட்கோ குடியேற்றப் பகுதியாகும். இந்த நிலத்தைத் தற்காக்க எங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி நாளைய வாழ்க்கை இன்னதென்று தெரியாமல் அல்லல்படும் பேரவலத்தை விளக்க தலைநகரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கெட்கோ நிலக் குடியேற்றவாசிகள் நல நடவடிக்கைக் குழு சார்பில் ஜோன் கந்தியோஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் மந்திரி பெசாரே எங்களை நேரில் சந்தித்து அளித்த வாக்குறுதி நிலைநிறுத்தைப்படவில்லை என்றால், இனி யாரை நம்புவது? எங்கு நியாயம் பெறுவது? என்ற கருத்தை முன்வைத்து வரும் திங்கட்கிழமை 14-08-2017 இரவு 7:30 மணி அளவில் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், செண்டரல் விஸ்தா கட்டடத்தின் 10-ஆவது மாடியில் இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களின் எதிர்காலத்தை இந்த கெட்கோ குடியேற்ற நிலத்தை நம்பித்தான் தொடங்கினோம். இதை நெகிரி மாநில அரசும் ஏற்றுக்கொண்டுதான் 1990-ஆம் ஆண்டில் அப்போதைய மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் இசா அனைத்துக் குடியேற்றவாசிகளுக்கும் ஆளுக்கு எட்டு ஏக்கர் வீதம் நிலத்தை பகிர்ந்து அளிப்பதாக வாக்களித்துவிட்டு, பின் அதே நிலத்தை இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த தாமரை ஹோட்டிங்ஸ் என்ற நிறுவத்திற்கு மேம்பாட்டுப் பணிக்காக தாரை வார்க்கப்பட்டது எப்படி என்பதற்கு இதுவரை மாநில அரசு பதில் சொல்லவில்லை, மாநில ஆட்சிக் குழுவில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள மஇகா-வும் சொந்த சமுதாயத்தையே கைகழுவப் பார்க்கிறது.
தற்பொழுது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தாமரைக் குழுமத்தையும் இதன் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கிடையில், நாங்கள் வளர்த்த ரப்பர் மரங்களை கள்ளத் தனமாக வெட்டிச் செல்லும் வேலையில் தாமரை நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மில்லியன் கணக்கான மதிப்புடைய இந்த மரங்களைக் கடத்திச் செல்ல மாநில அரசும் காவல்துறையும் அதற்கு துணை போகின்றன. குறிப்பாக, குண்டர்தனத்தினரும் இதன் தொடர்பில் போலீசாருக்கு துணை நிற்கின்றனர்.
எல்லா வகையாலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களின் நியாயத்தையும் உரிமைப் போராட்டத்தையும் பற்றி அறிய அனைவரும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வதுடன் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஜோன் கந்தியோஸ் கேட்டுக் கொள்கிறார். மேல் விவரத்திற்கு : 017-6230052.
இக்கண்
ஜோன் கந்தியோஸ்
கெட்கோ நிலக் குடியேற்றவாசிகள் நல நடவடிக்கைக் குழு
கோலாலம்பூர்.
12-08-2017
உண்மை நிலவரம் தெரிந்து ஆகப்போவதென்ன? ஏமாற்றியவனும் தமிழன் ஏமாறியவனும் தமிழன்! இது தான் அரசாங்கத்தின் மிகப்பெரிய பலம்! ஆட்சிமன்றத்தில் இருந்தவனே காட்டிக் கொடுத்தான்! காட்டிக் கொடுக்கிறான்! இதுவே அரசாங்கத்தின் பெரிய பலம்! எது தெரிந்து என்ன பயன்? வாக்குச்சீட்டு தான் உங்கள் பலம்! அதனைப் பயன்படுத்துங்கள்! அவன் வரும் போது பல்லைக்காட்டுவதும் ஒன்றும் நடக்காத போது கண்ணைக் கசக்குவதும் இதுவே நமக்குப் பழக்கமாகி போய்விட்டது!