மலாக்கா முத்துக்கிருஷ்னன் அராஜகமாகத் தாக்கப் பட்டார்

muthukrishnanதமிழ் மலர் நாளிதழில் அரசியல் விமர்சன படைப்புகளை எழுதுபவரும், மூத்த எழுத்தாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்னன் (வயது 69) நேற்று கடுமையாக தாக்கப்பட்டதாக பெரித்தா டெய்லி என்ற இணைத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில், சில நபர்களால் அவர்  தாக்கப்பட்டார். இந்த அராஜகம் பேரக், புந்தோங்கில் நடந்தது.

காலையில் சிற்றுண்டி அருந்திக்  கொண்டிருந்த போது மூன்று நபர்கள் அவரிடம் சென்று தகாத வார்த்தைகளால் சாடினர். தேசிய முன்னணிக்கு எதிராக எழுத வேண்டாம் என்று மிரட்டிய அவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

Muthukrishnanஇந்த சம்பவத்தை தமிழ்மலர் நாளிதழின் நிருவாக ஆசிரியர் பெரியசாமியும் கடுமையாகக் கண்டித்தார். “பத்திரிக்கையாளர்கள் விமர்சன கண்ணோட்டம் உள்ளவர்கள், அதை ஏற்க மறுப்பவர்கள் சட்டத்தின் வழியும், மாற்று கருத்துக்கள் வழியும் தகுந்த நடவடிக்கயை எடுக்கலாம். அதை விடுத்து வன்முறையில் இறங்குவது அராஜகமாகும். இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டத்திற்குறியது”, என்றார்.

கடுமையான காயங்களுக்கு உள்ளான முத்துக்கிரு‌ஷ்னன், 16 தையல்கள் போடப்பட்டு, ஈப்போ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மலாக்கா முத்துக்கிருஷ்னன் பற்றிய தகவல்கள்  

மலேசியாவைச் சேர்ந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் பவனி வருகின்றார். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். பின்னர் கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர்.

மலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மூன்று நாட்கள் கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரைஞராகவும் செயலாற்றுகின்றார்.

2009 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார்.தற்சமயம் இவர் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். ‘கணினியும் நீங்களும்’ பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். மற்ற நேரங்களில் கணினி பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இவருடைய மனைவி ருக்குமணி முத்துக்கிருஷ்ணன். மலேசியாவில் முத்திரை பதித்த எழுத்தாளர்களில் ஒருவர். நிறைய வானொலி நாடகங்களை எழுதியவர். நான்கு பிள்ளைகள்.