ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 27, 2017. மஇகா-வின் தமிழ்வழிக் கல்விக்கான துரோகம் தொடர்கிறது. டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ பாதுகா கோமளா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து தற்பொழுது டத்தோ ப.கமலநாதன், இருமொழிவழிக் கல்விக்கு இடையறாது ஆதரவு அளிப்பதன்வழி தமிழ் மொழிக்கல்விக்குக் கோடரிக் காம்பாகத் திகழ்கிறார்.
புத்தாயிரத்தாம் ஆண்டு தொடக்கக் காலத்தில் அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கில மொழிவழி கற்பிக்க அந்நாளைய பிரதமர் துன் மகாதீர் முயன்றபோது, அதற்கு மலேசிய இந்திய சமுதாயத்தில் குறிப்பாக, தமிழர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு அலையைப் பற்றி கவலைப் படாமல் ஆதரவு அளித்தார் மஇகா-வின் அப்போதையத் தலைவர் சாமிவேலு.
கல்வி அமைச்சில் துணை அமைச்சராக விளங்கிய கோமளாவும் அதே நிலையைத் தொடர்ந்தார். தற்பொழுது, தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிக் கல்விக்கு நிமிர்ந்து நின்று ஆதரவு அளிப்பதன் மூலம், கமலனாதனும் அந்த வேலையை வஞ்சகமில்லாமல் மேற்கொள்கிறார்.
உலகின் மூத்த மொழியும் செம்மொழியுமான தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாய்மொழி பாதுகாப்பிற்காக மஇகா இதுவரை ஓர் அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ள மஇகா, நாடு விடுதலை அடைந்தது முதல் ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக் கொண்டு அதிகார சுகத்தை அனுபவிப்பதில்தான் முனைப்பு காட்டுகிறதே ஒழிய, தமிழ் மொழி பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் ஒரு வாரியத்தைக் கூட இதுவரை அமைக்கவில்லை.
அறிவியல் பாடத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு செம்பு, துத்தநாகம், பௌதீகம், இரசாயனம், வளர்சிதை மாற்றம், ஒட்டுக் கட்டுதல், ஒட்டுண்ணி, சாறுண்ணி, கிரியாவூக்கி போன்ற சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை; இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தைத் தொடரும் மாணவர்களுக்கும் இதேநிலைதான்.
அதைப்போல, கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை அரைக்கால், வீசம், இலட்சம் என்ற சொற்களெல்லாம் என்னவென்றேத் தெரியாது; தமிழில் இலட்சம் என்ற சொல்லிருக்க ‘நூறாயிரம்’ என்றால்தான் புரிகிறது. கணித வாய்ப்பாட்டையே தமிழில் சொல்வதில்லை. மற்ற மொழிகளில்தான் மனப்பாடம் செய்கின்றனர். உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழ்ப்பள்ளிகளில் கணித-அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் பயிற்றுவித்தால், இவ்விரு பாடங்கள் தொடர்பான தமிழறிவு காலப்போக்கில் மங்கிவிடும்.
இப்படிப்பட்ட நிலையில், இருமொழிக் கொள்கை தமிழ்ப் பள்ளிகளுக்கு வேண்டாம் என்று மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் எதிர்ப்பலையைப் பற்றி இதுவரை மஇகா-வைச் சேர்ந்த ஒரு தலைவர்கூட பொருட்படுத்தவில்லை; கருத்து சொல்லவும் இல்லை. ஆனால், இந்த இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவான நிலையை மேற்கொள்வதுடன், அதை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து செயலையும் கல்வித் துறை துணை அமைச்சரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான கமலநாதன் மேற்கொண்டு வருவது அப்பட்டமான தமிழ்த் துரோகமாகும்.
மஇகா-வில் இளைஞர் பிரிவும் மகளிர் பிரிவும் இருக்க, பூனை புலியைப் போல தன்னுடம்பில் சுடு போட்டுக் கொண்டதைப் போல, புத்ரி-புத்ரா பிரிவுகளை அம்னோவைப் போல அமைத்துக் கொண்டது. நாட்டில், குறிப்பாக தலைநகரில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் மஇகா-வின் புத்ரா-புத்ரி பிரிவினரின் சார்பில் ஒருவரும் கலந்து கொள்வதில்லை. ஒரு நூல்கூட வாங்குவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மொழி பாதுகாப்பிற்காக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எங்கே உதிக்கப்போகிறது!
எது எவ்வாறாயினும், தமிழ்ப்பள்ளிகளில் கணித-அறிவியல் பாடங்களுக்கு இருமொழிக் கொள்கை என்பது எதிர்காலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கமலநாதன் நடுநிலையுடன் உணர்ந்து, இனியாவது தன் நிலையை பரிசீலனை செய்வது, மலேசியவாழ் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் நன்மை அளிக்கும்.
ம இ க ..மடையர்கள் இயக்கம் கழகம்
இன்னும் சாகலையாக்கும்
நா சொல்ல வந்த காம்பு அந்த காம்பு