நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதாவின் தற்கொலை மரணம் தமிழ் சமூகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது (ஒப்புக்குக் கூட இந்த தேசத்தை உலுக்கிவிட்டது என்று சொல்ல வேண்டாம்…).
ஒரு ஏழைப் பெண்ணின் மருத்துவக் கனவு சிதைந்து சின்னா பின்னமாகி, கடைசியில் அந்தப் பெண்ணையே பலி வாங்கிவிட்டது என்பதை உணரும்போது, என்னடா பொல்லாத மருத்துவப் படிப்பு என்ற விரக்தி பலருக்கும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது. மாணவி அனிதாவின் மரணம் தமிழ் திரையுலகப் பிரமுகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ரஜினிகாந்த்
அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.
கமல்ஹாசன்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். கனவுடன் வாழ்ந்த பெண்ணை, மண்ணோடு மண்ணாக்கி விட்டோம். அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்து விட்டோம்.
சிவகார்த்திகேயன்
இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது… என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.
விவேக்
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது.
சூரி
படிப்பை இழந்தது நீயல்ல… இந்த தேசம் தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே!
இயக்குனர் சேரன்
ஏழைகளின் சார்பில் கண்ணுக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரமாயிரம் கனவுகளை அரை நொடியில் அழித்தாயோ அனிதா… செங்கொடி வழி நீயோ.
இயக்குனர் பாண்டிராஜ்
RIP போடுற வயசா இது? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விசயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.
இயக்குநர் பா. ரஞ்சித்
ஒரு தலைமுறையின் பெருங்கனவைச் சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.
இயக்குநர் ராம்
நீட் ஒரு அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா – இன்று இல்லை.. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதான் மரணம், அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.
ராகவா லாரன்ஸ்
அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி யோசிக்கவே வலிக்கிறது.
இயக்குநர் தங்கர் பச்சான்
அனிதா கேட்கிறார்! மாணவர்களின் குற்றமா? ஆட்சியாளர்களின் குற்றமா? தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா? மாணவர்களையா? நீதியைத் தரப் போவது யார்?
இயக்குநர் சீனு ராமசாமி
டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி. மாணவி அனிதாவின் துன்ப முடிவுக்கு இரங்கல் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள மிகச் சில திரைப்பிரபலங்கள் பட்டியல் இது. இந்தப் பட்டியல் பெரிது. கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகின் குரலாக இதனைப் பதிவு செய்கிறோம்!
இவர்கள் ஒவ்வொருவரும் நீட் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் எனக்கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
அம்மா ஆட்சி என்று தானே சொன்னார்கள்! இது தான் அம்மா ஆட்சி!
தமிழ் நாட்டில் நடப்பது பற்றி முன்பு கூறி இருந்தேன்– மிகவும் கேவலம். பதவிக்கும் கொள்ளை அடிக்கவும்தான் அங்கு– ஒழுங்காக ஏதும் நடக்காது. சமூக சிந்தனையும் சமூக நீதியும் அணு ஏழைகளுக்கு கிடைக்காது. அத்துடன் அங்குள்ள மாக்களே (மக்கள் அல்ல) எல்லாவற்றுக்கும் காரணம்– பணம் பெற்று வாக்கு போடுவதினால் வரும் வினைகள். கல்விக்கான சட்ட திட்டங்கள் நியாயமான வழியில் முறையில் வரை அறுக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ. நான் கூட மோடியின் பேரில் நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனால் வடக்கத்தியனின் புத்தியை காண்பித்து விட்டான். தமிழ் நாட்டில் இந்திக்கு பலமான எதிர்ப்பு இருந்ததினால் அவன் பண்ணிய அநியாயம் கண்டிக்கத்தக்கது– AIADMK -ஊழல் வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பலம் இழந்தும் ஆட்சியில் நீடிக்க வைத்துக்கொண்டிருக்கிறான்.
சும்மா புலுடா விடுகின்றார்க்ள் இந்த மாணவியை வெளி நாட்டு பல்கலை கழகத்திட்கு சென்று படிக்க உதவி இருக்கலாம் ..அங்குள்ள வெளிநாட்டு தூதரகங்கள் நிச்சயம் உதவி இருக்கும் ..பாவம் ஏழை குடும்பம் செய்வது தெரியாது ..மலேசியாவில் தகுதி இருந்தும் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்படட மாணவர்கள் வெளி நாட்டு உதவி பெற்று படிக்கின்றார்கள் வேறு நாடுகளில்