-எம். சாமிநாதன், செப்டெம்பர் 7, 2017.
மலாயா (மலேசியா) பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று கடந்த ஆகஸ்ட் 31-துடன் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
மலேசியாவின் சுதந்திரம் தங்கத் தாம்பாலத்தில் தரப்படவில்லை. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட உயிர்களில் ஒன்று இந்நாட்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, பிரிட்டீஷ் பேரரசை ஆட்டம் காண வைத்த, அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் (பிஎம்எப்டியு) தலைவர் எஸ். எ. கணபதி. அவரைப் போல், இந்நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் தூக்கிலிடப்பட்டனர். பலர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நாடுகடத்தப்பட்டனர், சிறுவர்கள் உட்பட.
பிரிட்டனுக்கு எதிரான மலேசிய மக்களின் சுதந்திரப் போராட்டம் 1946 ஆம் ஆண்டில் தொடங்கவில்லை. அதற்கு முன்னதாக, பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக, பல்லினங்களையும் சார்ந்த இடதுசாரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமத்து மக்கள் ஆகியோர் பிரிட்டீஷ் எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினர். அதில் ஆயுதப் போராட்டமும் அடங்கும்.
ஏன் தீடிரென்று இந்த நினைவு அலைகள்?
கோலாலம்பூரில் இதுவரையில் நடக்காத சம்பவம் ஒன்று செப்டெம்பர் 1 இல், நடந்தேறியது.
அன்றைய தினத்தில், மலேசியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சிக் கோட்டையாக விளங்கிய கார்கோசாவில் (Carcosa) (தற்போது Carcosa Seri Negara) இந்த பிரிட்டீஷ் எதிர்ப்பு பற்றிய வரலாற்று கண்காட்சி நெகிரி செம்பிலான யாங் டி-பெர்துவான் பெசாரால் திறந்து வைக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டம் பற்றி இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கண்காட்சிகளோடு ஒப்பிடுகையில் கார்கோசாவில் நடத்தப்படும் இக்கண்காட்சி முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.
இந்தியப் பாட்டாளி மக்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியது மற்றும் அவர்கள் செய்த தியாகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தொழிற்சங்கத் தலைவர் எஸ். எ. கணபதி பிரிட்டீஷாரால் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டது சம்பந்தமான ஆவணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பிரிட்டனுக்கான இந்திய ஹைகமிஷனர் வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக பிரிட்டீஷ் பிரதமர் அட்லி, கணபதியின் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெறும்படி மலாயாவின் பிரிட்டீஷ் ஹைகமிஷனர் ஹென்றி கர்ணிக்கு பணித்திருந்த “டெலிகிராம்” இங்கே இடம்பெற்றுள்ளது.
இக்கண்காட்சியில் இன்னொரு முக்கியமான வரலாற்றுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 1941 இல், கிள்ளான் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம். இப்போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் சிஐஎஎம் என்ற இந்திய அமைப்பின் உறுப்பினர் ஆர்.எச்.நாதன். இவரது பெயர் பலருக்குத் தெரியும். ஆனால், அவரது படத்தை யாரும் பார்த்ததில்லை. அவரது படம் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
கிள்ளானில் உயிர் நீத்த சுங்கை செடு மற்றும் மிட்லேண்ட்ஸ் ஆகிய தோட்டங்களின் 5 தொழிலாளர்கள் – ஏழுமலை, கோனேரி, மாயாண்டி, அங்கப்பன், ரெங்கசாமி ஆகியோரின் பெயர்களும் இங்கே பதியப்பட்டுள்ளன.
மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் பற்றிய பல தகவல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி நடத்தப்படும் கார்கோசா பிரிட்டீஷ் ஆட்சியின் மன்னர் மாளிகை (King’s House) ஆகும்.
பெற்றோர்களே, ஆசிரியர்களே, இக்கண்காட்சி இந்நாட்டின் சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் நடத்திய போராட்ட வரலாற்றை திரும்பிப் பார்க்க நமக்கும். நமது இளஞ்சந்ததியினருக்கும் ஓர் அரிய வாய்ப்பை அளிக்கிறது. அவர்களை இக்கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நமக்காக, அவர்களுக்காக தூக்கில் தொங்கிய கணபதி, சுட்டுக்கொல்லப்பட்ட வீரசேனன் மற்றும் பல தியாகிகளை அவர்களுக்கு காட்ட வேண்டும்.
இக்கண்காட்சி கோலாம்பூர், ஜாலான் மெர்டேக்காவில் செப்டெம்பர் 1 லிருந்து 30 ஆம் தேதி வரையில் தினமும் காலை மணி 8.00 லிருந்து மாலை மணி 5
வரையில் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்படும்.
என்ன சொல்ல வருகிறீர்கள்? மகாதீர் இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று தானே! புரிந்து கொண்டால் சரி!
இப்படி ஒரு மிகச்சிறப்பான வரலாற்று கண்காட்சியை ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. நியாயத்துக்காக போராடிய எஸ்.ஏ.கணபதி, ஆர். எச்.நாதன் போன்ற தியாகிகளின் சரித்திரங்கள், நமது தமிழ் பள்ளி பாடபுத்தகத்தில் இடம்பெற்று இருந்திருக்குமானால், இன்று காட்டுமிராண்டித்தனம் பன்னும் நமது தமிழ் அரசியல்வாதிகள் தோன்றியிருக்க மாட்டார்கள் ! பிரிட்டீஷ் ஆட்சிக்கு பிறகு வந்த சரித்திரம் புரியாத இந்த அரசாங்கத்தால், இவர்கள் யாவரும் கம்யுனிச தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அதுவே அவர்களின் மத சம்மந்தப்பட்டவர்களானாள் “போராளிகள்” என்று செல்லமாக அழைத்திருப்பார்கள்!
இக்கட்டுரை தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் சிறப்பாக தொகுத்து இந்த கட்டுரையை எழுதி இருந்தால்
மிக சிறப்பாக இருக்கும் என்பது என் ஆவா. அது
கொஞ்சம் சிறப்பை கொடுத்து இருக்கும்
காரணம் இதன் கண்காட்சிக்கு செல்லும் வழி ரொம்ப பேர்களுக்கு தெரியது. காரணம் இது லே கார்டன் சார்ந்து இருபதோடு அனால் அவ் வழியே செல்ல முடியாது. குறிப்பாக பார்லிமென்ட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில் ஒரு குறுக்கு சந்து வழியாக இந்த பாதை ஒரு வழியாக செல்லும் வழி. கொஞ்சம் கடினம்தான் இருப்பினும் GPS (WAZE) பயன்படுத்தி அங்கு செல்லலாம். பிரிட்டீஷ் அரசியார் மலேசியா வந்த பொழுது கார்கோசாவில் இங்கு தான் தங்கியிருந்த தாக நண்பர் சொன்னார். இது எந்த அளவு உண்மை என்று தெரிய வில்லை. இந்த கார்கோசா மன்னர் மாளிகை (King’s House) என்பதோடு வரலாறு சிறப்பு மிக்க கட்டிடம் என்பது உண்மையே.