மலேசியாவின் பிறப்பும், சோதனையும்

 

– கி.சீலதாஸ், செப்டெம்பர் 14, 2017.     

siladassஆகஸ்ட் 31, 1957இல்  மலாயா  கூட்டரசு  சுதந்திரம்  பெற்றது.  மலாயாவின்  தெற்குப்  பகுதியின்  நுணியில்  சிங்கப்பூர்  பிரிட்டிஷாரின்  கட்டுப்பாட்டிற்குள்  சுயாட்சி  நாடாக  இயங்கிக்  கொண்டிருந்தது.  சிங்கப்பூர்  முன்னொரு  காலத்தில்  ஜொகூர்  நாட்டின்  ஒரு  பகுதியாக  இருந்தது.  மலாயா  கூட்டரசு  அமைக்கப்பட்ட போது,  சிங்கப்பூர்  அதில்  சேர்த்துக்கொள்ளப்படவில்லை.  அதே  காலகட்டத்தில்  புருணை  நாடு  பிரிட்டிஷாரின்  பாதுகாப்பில்  இருந்தது.  வடக்குப்  போர்னியோ,  சரவாக்  ஆகிய  நாடுகள்  சிங்கப்பூர்  உட்பட  பிரிட்டிஷ்  காலனிகளாகவே  இருந்தன.  சிங்கப்பூரை  மலாயா  கூட்டரசோடு  சேர்த்துக்கொள்ளாததற்குக்  காரணம்  அந்த  நாட்டில்  பெரும்பான்மையினர்  சீனர்கள்.  சிங்கப்பூரை  மலாயாவோடு    இணைத்தால்  மலாய்க்காரர்களின்  பெரும்பான்மை  பாதிப்புறும்  என்ற  அச்சம்  பலமாகவே  இருந்தது.

இனப்  பிரச்சினை  ஒருவகையில்  இருந்தாலும்,  இரண்டாம்  உலகப்  போருக்குப்  பின்னர்  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சியின்  செல்வாக்கு  எல்லோருடைய  கவனத்தை  ஈர்த்தது  எனலாம்.  இதற்குக்  காரணம்  என்னவெனில்,  இரண்டாம்  உலகப்  போருக்கு  முன்பு  பிரிட்டிஷ்  மலாயாவில்  எந்த  அரசியல்  கட்சியும்  தலையெடுக்கமுடியவில்லை.  மலாயா  கம்யூனிஸ்ட்  கட்சி  மட்டும்  பல  இனங்களைக்  கொண்ட  கட்சியாக  1930ஆம்  ஆண்டிலிருந்து  இயங்கியபோதிலும்  அதற்கு  சட்டபூர்வ  அனுமதி  மறுக்கப்பட்டது.

ஜப்பானியர்கள்  மலாயாவை  ஆக்கிரமித்த  போது  அந்த  ஆக்கிரமிப்பாளர்களை  எதிர்க்கும்  இயக்கத்திற்கு  மலேசிய  கம்யூனிஸ்ட்  கட்சி   முழு  ஒத்துழைப்பு  நல்கியதால்  பிரிட்டிஷார்  மலாயாவுக்குத்  திரும்பியதும்  மலேசிய  கம்யூனிஸ்ட்  கட்சி  இயங்க  அனுமதிக்கப்பட்டது.  இந்த  அனுமதி  நெடுங்காலம்  நீடிக்கவில்லை. மலேசிய  கம்யூனிஸ்ட்  கட்சி  தடை  செய்யப்பட்டு  ஆயுதப்  போரில்  இறங்கியது.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்  மலாயாவின்  சுதந்திரத்திற்கு  முன்னமே  மலேசிய  கம்யூனிஸ்ட்  கட்சியுடனான  பாலிங்  (Baling)  பேச்சுவார்த்தை  பலனளிக்கவில்லை.

மலாயா  சுதந்திரம்  பெற்றுவிட்டபோதிலும்  மலேசிய  கம்யூனிஸ்ட்  கட்சியின்  போராட்டம்  தளர்ந்துவிடவில்லை.  அது  தலைமறைவு  இயக்கமாக  செயல்பட்டு  பல  அமைப்புகளில்  ஊடுருவியது.  குறிப்பாக  சிங்கப்பூரில்  அதன்  வலிமையைக்  குறைத்து  மதிப்பிடுவது  தவறு  என்ற  கருத்து  பரவலாகவே  இருந்தது.  சிங்கப்பூரில்  மக்கள்  செயல்  கட்சி (மசெக)  ஆட்சியில்  இருந்தபோதிலும்  அந்தக்  கட்சியினுள்  பலமான  கம்யூனிஸ்ட்  ஊடுருவல்  இருந்ததை  அக்கட்சியின்  பொதுச்  செயலாளர்  லீ  குவான்  யூவால்  மறுக்க  முடியவில்லை.  மெள்ளவும்  முடியவில்லை  விழுங்கவும்  முடியவில்லை  என்ற  நிலையில்  இருந்தார்  லீ  குவான்  யூ.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்தான்  சிங்கப்பூரை  மலாயாவோடு  இணைத்து  கம்யூனிஸ்ட்டுகளின்  செல்வாக்கை  முறியடிக்க  முடியும்  என்ற  கருத்துக்கு  அன்றைய  மலாயாவின்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  உடன்பட்டார்.  ஆகவே,  மலாயா,  சிங்கப்பூர்,  புருணை,  வட  போர்னியோ (இப்போது  சாபா),  சரவாக்  ஆகிய  நாடுகள்  இணைந்து  மலேசியா  காணலாம்  என்றார்  துங்கு.  இந்த  அறிவிப்பைத்  தொடர்ந்து  லீ  குவான்  யூ  துங்கு  அப்துல்  ரஹ்மானைச்    சந்தித்துப்  பேச்சுவார்த்தை  நடத்தினார்.  மலேசியா  வடிவம்  பெறுவதற்கான  பூர்வாங்க  உடன்பாடு  காணப்பட்டது.  புருணை,  வடபோர்னியோ,  சரவாக்  இணைவதால்  சிங்கபூரின்  சீனப்  பெரும்பான்மை  மலாயாவிலுள்ள  மலாய்க்கார  பெரும்பான்மைக்குச்  சவாலாக  இருக்காது  என்று  நம்பினர்.

இந்த  மலேசியா  அறிவிப்பானது  பலவிதமான  கருத்துகளுக்கு  இடமளித்தது.  பெரும்பான்மையான  இடதுசாரி  அரசியல்  இயக்கங்கள்  இந்த  மலேசியா  ஏற்பாட்டை  ஆதரித்தன.  அதே  சமயத்தில்  வட  போர்னியோ,  சரவாக்  மக்களிடையே  கருத்து  வேறுபாடு  துளிர்விடத்  தொடங்கியது.  அவர்கள்  சுதந்திர  நாட்டை  காண  விரும்பினர்.  அவர்களின்  சாதகமான  ஒப்புதலைப்  பெறும் பொருட்டு லீ  குவான்  யூ மற்றும்,  துங்கு  அப்துல்  ரஹ்மான் பெரும்  முயற்சி  செய்தனர்.  இறுதியில்  எதிர்த்தவர்களில்  பலர்  மலேசிய  அமைப்பை  ஆதரித்தனர்.  இதற்கிடையில்   இந்தோனேசியாவும்  பிலிப்பைன்ஸூம்  மலேசியாவை  எதிர்த்தன.  இதைத்  தொடர்ந்து  முன்பு  மலேசியாவை  ஆதரித்த  இடதுசாரி  கட்சிகள்  தங்கள்  முடிவை  மாற்றிக்கொண்டு  மலேசியாவை  எதிர்த்தனர்.  எழுந்தப்  பிரச்சினைகளை  களையும்  பொருட்டு  ஐக்கிய  நாடுகளின்  ஆய்வு  குழு  வட  போர்னியோ,  சரவாக்  ஆகிய  மாநிலங்களின்   மக்களை  சந்தித்து  ஓர்  அறிக்கையை  வெளியிட்டது.  ஐக்கிய  நாடுவின்  அறிக்கை  தயார்  நிலையில்  இருக்கும்போதே  துங்கு  அப்துல்  ரஹ்மான் மலேசியா  16.9.1963இல்  பிரகடனப்படுத்தப்படும்  என்று  அறிவித்தார்.

அதே  சமயத்தில்  புருணை  மலேசியாவில்  இணையாது  என்ற  அறிவிப்பை  வெளியிட்டது.  ஆனால்  அந்த  நாட்டில்  அஸஹாரி  ஆரம்பித்த  ஆயுதப்  புரட்சி  தோல்வியில்  முடிந்தது.

16.9.1963இல்  மலேசியா  அமையும்  என்ற  அறிவிப்பானது  சட்ட  நடவடிக்கைக்கும்  வழிகோலியது.  10.9.1963இல்  கிளந்தான்  அரசு  மலாயா  கூட்டரசு  மற்றும்  அதன்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  மீது  சட்ட  நடவடிக்கை  எடுத்தது.  அந்த  வழக்கில்,  பிரிட்டன்,  வட  போர்னியோ,  சரவாக்,  சிங்கப்பூர்  கண்ட  மலேசிய  ஒப்பந்தம்  செல்லுபடி  ஆகாது  என்றும்  அந்த  உடன்பாடு  கிளந்தான்  அரசை  கட்டுப்படுத்தாது  என்றும்  முறையிட்டது.

11.9.1963ஆம்  திகதியில்  கிளந்தான்  அரசு  ஒரு  விண்ணப்பத்தை  நீதிமன்றத்தில்  சமர்ப்பித்தது.  அதில்,  வழக்கு  முடியும்  வரை  மலாயா  அரசும்  துங்கு  அப்துல்  ரஹ்மானும்  மலேசிய  சட்டத்தை  அமல்படுத்துவதைத்  தடுக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையை  முன்  வைத்தது.

மலாயாவின்  தலைமை  நீதிபதி  தாம்ஸன்  வழக்கை  14.9.1963ஆம்  திகதி  மாலை   ஐந்து  அளவில்  விசாரிக்கத்  தொடங்கினார்.  சம்பந்தப்பட்ட  எல்லோருடைய  நன்மையக்  கருதி  இந்த  வழக்கை  15.9.1963  நள்ளிரவுக்குள்  ஒரு  தீர்ப்பை  நல்க  வேண்டியது  தவிர்க்க  முடியாததாகும்  என்றார்  தாம்ஸன்.

கிளந்தான்  அரசின்  முறையீடு என்ன?  மூன்று  புது  பிரதேசங்களை  சேர்ப்பதால்  நாட்டின்  பெயரை  அதன்  ஒப்புதல்  பெறாமல்  மாற்றப்பட்டுவிட்டது.  கிளந்தான்  அரசு  இந்த  மாற்றத்தைக்  குறித்து  ஒப்புக்கொள்ளவில்லை.  அதன்  ஒப்புதலும்  பெறப்படவில்லை.  அதோடு,  இந்த  புது  அமைப்பால்  மலாயா  கூட்டரசு  உருமாற்றப்படுகிறது.  கூட்டரசு  நாடாளுமன்றம்  தமது  அதிகாரத்தை  மீறிவிட்டது  என்பதே  கிளந்தான்  அரசின்  வாதம்.  மலாயா  கூட்டரசின்  அரசமைப்புச்  சட்டம்  நாடாளுமன்றம்  எல்லா  விதமான  வெளிவிவகார  விஷயங்களிலும்  பிறநாடுகளுடன்  உடன்பாடு  காணும்  பொருட்டு  ஒப்பந்தம்  செய்யும்  அதிகாரம்   உண்டு,  எனவே,  கிளந்தானின்  வழக்கு  தள்ளுபடி  செய்யப்பட்டது.  கிளந்தான்  அரசுக்கு  ஆறுதல்  தருமானால்  வரலாற்றின்  தீர்ப்புக்கு   அவர்களின்  முறையீடு  செய்யும்  உரிமை  எதனாலும்  மறுக்கப்படமுடியாது  என்றார்  தலைமை  நீதிபதி  தோம்ஸன்.  குறிப்பிட்ட  நாளில்  16.9.1963இல்  மலேசியா  பிறந்தது.

இந்தச்  சோதனைகள்  நடந்து  கொண்டிருக்கையில்  ஆப்பிரிக்க – ஆசிய  நாடுகளின்  தேசியவாதிகள்,  இடதுசாரிகள்,  கம்யூனிஸ்டுகள்  மலேசியாவை  எதிர்ப்பதில்  உற்சாகமாக  இருந்ததையும்  நாம்  மறக்கமுடியாது.  மலேசிய  ஒரு  நவீன  காலனி  என்று  குற்றம்  சாட்டப்பட்டது.  இவற்றை  எல்லாம்  சமாளிக்க  வேண்டியிருந்தது.   எனவே,  மலேசியாவின்  பிறப்பு  சுகப்  பிரசவமாக  இருக்கவில்லை  என்பதும்  வரலாறு.

மலேசியாவை  எதிர்த்த  இந்தோனேசியா  இந்த  அறிவிப்புக்குப்  பிறகு  மலேசியாவுடன்  ஒத்துழையாமை  இயக்கத்தை  ஆரம்பித்தது.  சில  இந்தோனேசியர்கள்,  மற்றும்   மலாயா  குடிமக்கள்  இந்தோனேசியாவில்  ஆயுதப்  பயிற்சி  பெற்று  மலாயாவுக்குத்  திரும்பி  போர்  புரிய  தீர்மானித்திருந்ததை  முறியடித்தது  இராணுவம்.

அரசியல்  கருத்து  வேறுபாடுகள்  காரணமாக  9.8.1965இல்  சிங்கப்பூர்  மலேசியாவிலிருந்து  பிரிந்து  குடியரசாக  மாறியது.  ஆகஸ்ட்  1966இல்  இந்தோனேசியாவும்  மலேசியாவும்  சமாதான  உடன்பாட்டில்  கையெழுத்திட்டன,  இருநாடுகளுக்கு  இடையே  இருந்த  பகைமை  முடிவுக்குக்  கொண்டுவரப்பட்டது.

மலேசியா  பிறப்பின்  போது  பல  சோதனைகளுக்கு  உட்படுத்தப்பட்டது.  அவற்றை  எல்லாம்  சமாளித்துவிட்டது.  இப்போது  ஆதற்கு  ஐம்பத்து  நான்கு  வயதாகிவிட்டது.  அதன்  ஆயுள்  கெட்டி  என்றே  சொல்லலாம்!