50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு பாரிசான் அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை, சுப்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்!

 

-மு. குலசேகரன். செப்டெம்பர் 26, 2017

dr subraநடந்து முடிந்த 71 ஆவது மஇகாவின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிரதமருக்கு நன்றி கூறுகையில் அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்: . அதாவது அப்துல் ரஹ்மன், அப்துல் ரசாக், ஹுசேன் ஓன், மகாதீர், படாவி ஆகிய முன்னாள் பிரதமர்களில் எவரும் இந்தியச் சமூகத்திற்கு செய்யத் தவறியதை பிரதமர் நஜிப் செய்துள்ளார். அவ்வாறு கூறியதன் வழி அதற்கு முன்பு இந்தியர்கள் நலனுக்கு வேறு எந்தப் பிரதமரும் பாடுபடவில்லை என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். 1957 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பாரிசான் அரசாங்கம் இந்தியர்களை ஏமாற்றி விட்டது என்பதை தலைவர் சுப்ராவின் வாக்குமூலமே நமக்கு தெரியப்படுதுகிறது.

இதையேத்தான் எதிக்கட்சியைச் சேர்ந்த நாங்களும் பல முறை சொல்லி வருகிறோம். அதற்கு பதிலாக, ஆளும் கட்சியாகிய நீங்கள் எங்களைக் கண்டித்தும் வசைபாடியும் வந்துள்ளீர். இப்பொழுது மக்களுக்கு நீங்களே இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள். இது மஇகாவின் சாதனை என்றால் மிகையாகது.

ஒவ்வொரு மஇகா பேராளர் மாநாட்டிலும் அப்போதையப் பிரதமரை துதிபாடுவதே மஇகா தலைவர்களுக்கு ஒரு முக்கியமான கடமையாக போய்விட்டது. சாமிவேலு காலத்தில் அவர் மகாதீரையும் படாவியையும் இந்தியச் சமூகத்தின் ரட்சகர்கள் என்பது போல கூறி வந்துள்ளார். இந்த துதிபாடும் படலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி என்ன இந்தியச் சமூகம் நஜிப் ஆட்சியில் வளர்ச்சி அடைந்து விட்டது? எந்த ஆய்வை வைத்து தலைவர் சுப்ரா இப்படி ஆணித்தரமாக கூறுகிறார்? 1960-70களில் இந்தியர்கள் அரசாங்க துறைகளில் 17% சதவிகிதம் இருந்தார்கள். இன்று அது 4% க்கும் குறைவு. இதுதான் வளர்ச்சியா?

அன்று கடற்படை தளபதியாக தனபால சிங்கம் என்று ஒருவர் இருந்தார். இன்று அது போல் யாரும் உள்ளனரா?

அன்று ராமா ஐயர் மலேசிய விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார். இப்பொழுது அது போன்ற வாய்ப்புகள் இந்திய வம்சாவளியினருக்கு கிடைக்குமா? 1970களில் போலிஸ் துறையில் உயர் அதிகாரிகளில் பலர் இந்தியர்களாக இருந்தார்கள். இன்று உள்ள அனைத்து இந்திய அதிகாரிகளும் “துணை” உயர் அதிகாரி என்கிற அடைப்பொழியுடன் ஓய்வு பெருகிறார்கள். இது என்ன இந்த சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கின்றதா?

எத்தனை பல்கலைக்கழகங்களில் இந்தியர்கள் அங்குள்ள பல்வேறு துறைகளுக்கு தலைமை தாங்குகிறார்கள் ? மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைக்கு பேராசிரியர் தனராஜ் 70களில் தலைவராக இருந்தார். அதன் பிறகு ஓர் இந்தியர்கூட அவ்விடத்தை நிரப்பத் தகுதி பெறவில்லையா?

அன்று எத்தனையோ இந்தியர்கள் பல்வேறு அமைச்சுகளில் தலைமை இயக்குனர்களாகவும் தலைமைச் செயலாளர்களாகவும் பெரிய பொறுப்புகளில் இருந்தார்கள். இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இந்தியர்களாக இருக்கின்றார்கள்.

சுங்க இலாகாவிற்கு தலைமை அதிகாரியாக ஓர் இந்தியரை நியமிக்க பல எதிர்புக்களுடன் போராட வேண்டி இருந்ததாக பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். இதன் வழி ஒரு குறிப்பிட்ட இனத்திற்குத்தான் மலேசிய அராசாங்கத் துறைகளில் வாய்ப்பு உள்ளது என்பதனை பிரதமரே சொல்லாமல் சொல்லுகிறார். திறமை, கல்வி அடைவு நிலை, அனுபவம் இங்கே பின்தள்ளப்படுவது கண்கூடு. சுகாதார அமைச்சராக நீங்கள் இருக்கும் அமைச்சிலேயே ஓர் இந்தியரை தலைமை இயக்குனராகவோ தலைமைச் செயலாளராகவோ நியமிக்க முடியவில்லையே? ஏன்?, ஏன்?, ஏன்? இதே போல, முன்பு சுகாதார அமைச்சில் பல இந்திய மருத்துவர்கள் உயர் பதவி வகித்து வந்துள்ளார்கள். அதைக்கூட உங்களால் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லையே? ஏன்? ஏன்? ஏன்?

இந்தச் சூழலில் இந்தியச் சமூகம் முன்னேறியுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும், இல்லையா?

இந்திய வியூகத் திட்டத்தைப் பற்றி பெருமையாக பேசும் சுப்ரா, அதனை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து அதற்கு வேண்டிய சட்டப் பாதுகாப்புக் கொடுக்க முயற்சித்திருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாளை வேறொருவர் பிரதமராக வந்தால் இந்த வியூகத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு இல்லை. இந்தியர்களின் பிரச்சனைகளை எதிர்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அறிந்திருக்கும் போது, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெறுவதில் ஏன் தயக்கம்? ஏன்? ஏன்? ஏன்?

எந்தத் திட்டங்கள் போட்டாலும், எந்தப் பிரதமர் வந்து அதனை மஇகாவின் மாசபையில் அறிவித்தாலும் அவை அரசாங்கக் கொள்கைகளாக உருமாற்றம் காணாத வரையில், அத்திட்டங்கள் செயலாக்கம் காணப்போவதில்ல என்பது மட்டும் உறுதி. இதை மஇகா இன்னும் புரிந்துகொள்ளாதது ஏன்? ஏன்? ஏன்? .