‘ஞாயிறு’ நக்கீரன் – வெண்வண்ண வட்டத்தை உள்ளடக்கிய பச்சை வண்ணக் கொடிகள் படபடக்க தனிப்பெரும் செல்வாக்கோடும் எழுச்சியோடும் விளங்கிய பாஸ் கட்சிக்கென்று ஒரு தனி மரியாதை தேசிய அளவில் பிரதிபலித்தது. 14 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணியையே பொதுத் தேர்தல்களில் மண்டியிட வைத்து மாநில ஆட்சிகளை தன்னந்தனியாகக் கைப்பற்றிய அந்தக் கட்சியின் வரலாற்றை இம்மலைத்திருநாட்டில் வேறு எந்தக் கட்சியாலும் விஞ்ச முடியாது.
அப்படிப்பட்டக் கட்சி, அண்மைக் காலத்தில் கடைப்பிடிக்கும் தவறானப் போக்கால் மெல்லக் கரைந்து வருகிறது. கடந்த பதின்மூன்றாவது பொதுத் தேர்தலிலேயே தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு இருந்தும் ஹுடுட் சட்டத்தை மட்டும் வல்லடியாகப் பற்றிக் கொண்டு தேர்தல் களத்தை எதிர்கொண்ட அந்தக் கட்சி தானும் தோற்று, தான் சார்ந்த அணியையும் தோற்கச் செய்துவிட்டது.
இந்தத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தாம் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, தேசிய முன்னணி வெல்ல வேண்டும்; குறிப்பாக நஜிப் பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக நம்பிக்கைக் கூட்டணியின் வாக்கை சிதறச் செய்யும் நோக்குடன், தீபகற்ப மலேசியாவில் மட்டும் நூறு இடங்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக அது பறைசாற்றியிருக்கிறது. இதன்வழி, பாஸ் நஜிப்பின் கைப்பாவையாக மாறிவிட்டது பளிச்செனத் தெரிகிறது.
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை மட்டும் ஒற்றை இலக்காகக் கொண்ட இந்தக் கட்சி, தேசிய முன்னணியில் நேரடியாக இடம்பெறாமல் இருப்பதன்வழி, மசீச-மஇகா கட்சிகளையும் வாயடைக்கச் செய்துவிட்டு, தற்பொழுது தேசிய முன்னணி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரணி ஓட்டுக்களைப் பிரிக்கும் நோக்கில் தனி ஆவர்த்தனம் புரிகிறது.
தீபகற்ப மலேசியாவில் ஏறக்குறை நூறு இடங்களில் போட்டி இடுவதாக அறிவித்துள்ள பாஸ் கட்சி, தன்னுடைய எதிர்காலத்தை கொத்தாக அடகுவைத்துவிட்டு, விரைவில் நாடு காணவுள்ள பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவதிலும் அதன்வழி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு மறைமுக ஆதரவு அளிப்பதிலும் உறுதியாக இருக்கிறது.
அதேவேளை, மும்முனைப் போட்டி குறித்து நம்பிக்கைக் கூட்டணியின் நம்பிக்கை வேறு விதமாக இருக்கிறது; அது எந்த அளவிற்கு கைக்கூடும் என்பது உறுதியாகத் தெரியவைல்லை. மலாய் வாக்கு வங்கி மூன்று கூறுகளாகப் பிரிந்தால், அதில் நம்பிக்கைக் கூட்டணிக்குக் கிடைக்கும் மலாய் வாக்குடன் சீன, இந்திய வாக்குகளையும் இணைத்து சுதந்திர மலேசியாவில் முதல் முறையாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் வெல்லலாம் என்று கணக்கு போடுகிறது. மொத்தத்தில், மும்முனைப் போட்டி ஏற்பட்டால், அது தங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
ஆனால், தேசிய முன்னணியின், குறிப்பாக அதன் தலைமையின் எண்ணமோ வேறு விதமாக பிரதிபலிக்கிறது. நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சியை விலக்கி வைத்துவிட்டால், அதன் வாக்கு பலம் தேசிய அளவில் சிதையும். அந்தச் சூழலில், தேசிய முன்னணி அலுங்காமல் குலுங்காமல் பதவியை தற்போதைய நிலையைவிட இன்னும் வலுவான நிலையில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.
தேசிய முன்னணியின் இந்தக் கணக்கு சரியா அல்லது தப்புக் கணக்கா என்பதை தேர்தல் முடிவு நாட்டுக்குத் தெரிவிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாஸ் கட்சியின் எதிர்காலம் தேசிய அளவிலும் நடுநிலை சிந்தனையாளர் மத்தியிலும் அதலபாதாளத்திற்குச் செல்லும்; 14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின், மலாய் சமுதாயத்தின் மத்தியில் அந்தக் கட்சியைப் பற்றிய மதிப்பீடு மலையில் இருந்து மடுவில் விழுந்த கதையாகிவிடும். அதன் வீச்சும் வீரியமும் மங்கிவிடும். பாஸ் கட்சிக் கொடியின் பச்சை நிறம் மங்கிவிடும்; அதிலுள்ள வெண்வட்டத்தில் சாம்பல் படியும்.
‘தான் தலைமை ஏற்றுள்ள கட்சி வளர வேண்டும்; மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதைவிட இன்னோர் அரசியல் அணி அல்லது கட்சி பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்; இன்னார் பதவிக்கு வர மறைமுகமாக பங்களிக்க வேண்டும்’ என்னும் மனப்பான்மையில் செயல்படும் கட்சி வளர்ச்சி காண்பதற்கு மாறாக தளர்ச்சி அடைவதுடன் அரசியல் அரங்கில் இருந்தே மெல்ல அகன்றுவிடும் என்பதற்கு அக்கரைச் சீமையின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்(மதிமுக) விஜயகாந்தின் தேமுதிக-வும் சரியான சான்றுகள் ஆகும்.
மதிமுக வளர வேண்டும் எனபதைவிட திமுக தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே கடந்த இருபது ஆண்டுகளாக அரசியல் நடத்தி வருகிறார் அதன் தலைவர் வைகோ. குறிப்பாக, ஸ்டாலின் முதல்வராகக் கூடாதென்பதை தான் வாழ்நாள் இலக்காகக் கொண்டு வைகோ அரசியல் புரிவதால்தான் இன்று மதிமுக, யானை பூனையான நிலைக்கு ஆளாகிவிட்டது.
அதைப்போல, தமிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவராக செம்மாந்து திகழ வேண்டிய விஜயகாந்த், தன்னுடைய கட்சி இன்னும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தும், ஸ்டாலின் பதவிக்கு வரக்கூடாதென்று வஞ்சகமாக காய் நகர்த்தினார் கடந்த ஆண்டு. விளைவு, அவர் போட்டியிட்ட காட்டு மன்னார்கோயில் தொகுதியில் வைப்புத் தொகையையே இழந்துவிட்டு அவமானத்திற்கு ஆளானார்.
ஏறக்குறைய மதிமுக, தேமுதிக கட்சிகளைப்போல தான் வெல்ல வேண்டும் என்பதைவிட இன்னொரு தரப்பாரின் வெற்றிக்காக வழிவகுத்துக் கொடுத்துவிட்டு, அரசியலில் தற்கொலை முடிவை எடுத்துள்ள பாஸ் கட்சி அடுத்தப் பொதுத் தேர்தலுக்குப் பின் மலாய் சமூகத்தின் இளப்பமான பார்வைக்கு ஆளாகும் என்பது மட்டும் திண்ணம்.
இப்படிப்பட்டப் பாதியில்தான் பாஸ் கட்சி தன்னுடைய சூழ்ச்சி அரசியல் பயணத்தை கமுக்கமாக அரங்கேற்றி வருகிறது. அதன் அடுத்தக்கட்ட நிலையை, அடுத்தப் பொதுத் தேர்தல் முடிவு நிர்ணயிக்கும்.
வரப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பின் காணப்போகும் அரசியல் காட்சிகளை முன்கூட்டியே கூறிவிடுகிறேன், குறித்துக் கொள்ளுங்கள். வெறும் இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற இடங்களோடு பாஸ் கட்சி மூட்டைகட்டிவிடும். அதன் கிளந்தான் மாநிலமும் அம்னோவிடம் பறிபோய்விடும். பெர்சத்து (மகாதிமிரின் கட்சி,) அமானா, இரு கட்சிகளும் காணாமல் போய் விடும். ஐந்து முதல் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பி.கே.ஆர், தவளை கோணத்தில் கத்திக் கொண்டிருக்கும். 20 முதல் 25 நாற்காலிகளுடன் டி.ஏ.பி. ஓரளவு பேர் போட்டு விடும். அதன் தற்போதைய 37 இடங்களில் சபா, சரவாக்கில் தலா ஒன்றும், கெலாங் பாத்தா, கூலாய், பக்ரி, குளுவாங், ரவுப், கம்பார்,புருவாஸ், தைப்பிங்,சிரம்பான், பத்து காவான், ஆகிய தற்போதைய 12 தொகுதிகளை டி,ஏ.பி. கைவிட நேரிடும். மேலே நான் குறிப்பிட்டது நடக்கக் கூடாது என்பதையே நான் விரும்புகிறேன், ஆனால், இதுதான் நடக்கப் போகிறது என்பது கசப்பான உண்மை. மீண்டும் சொல்கிறேன், “குறித்துக் கொள்ளுங்கள்.”
உண்மைதான் singam அவர்களே ! ஆமாம் சாமி போடுகிறேன் என்று என்ன வேண்டாம், எதிர்க்கட்சிகளுக்கு வேகம் இருக்கிறது ஆனால் விவேகம் இல்லை. இது ஏறக்குறைய ”
வரும் ஆனால் வராது ” கதைதான்.அதனால்தான் சொல்கிறேன் வேதா ஏற்கனவே பலதடவை மூக்கு உடைந்துவிட்டது,மீண்டும் மீண்டும் அதை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்பதுதான் என் யோசனை !
ஜால்ராவுக்கு ஜால்ரா…
இந்திய அரசியல் குறிப்பாக தமிழக அரசியல் வேறு; நம் நாட்டு அரசியல் வேறு. இரண்டையும் ஒன்றாக ஒரேத் தட்டில் வைத்து எடைப் போட முடியுமா? பாஸ் கட்சி இந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டும்; கிளந்தான் மாநிலத்தை தேசிய முன்னணியுடன் இழந்தால் இன்னும் ரொம்ப நல்ல சேதிதான்!
“இலவசம்” “இலவசம்” “இலவசம்” என்பதில் மட்டும்
தமிழக அரசியலும் நமது மலேசிய அரசியலும் ஒன்றிணைந்திருக்கிறது.
அங்கு மக்களுக்கு இலவச பொருட்கள் !
இங்கு மக்களுக்கு இலவச பணம் !