தரம் தாழ்கின்ற திரைப்படத் தரமொழிகள் (விமர்சனங்கள்)

உணர்வுகளைப் பிழிந்து உயிரை உருக்கி உழைப்பைக் கொட்டி ஒரு படத்தை எடுத்து முடிக்கிறது ஒரு படக்குழு. ஆனால், அதன் முதற்பிரதியைக் கண்ணுறும் ஒருவர் ஒரேயொரு சொல்லால் அந்தப் படத்தை இழிவுபடுத்திச் சென்றுவிடுவார். அத்தகைய ‘சினிமாப் பண்டிதர்கள்’ கோடம்பாக்கமெங்கும் ஏராளமாக இருக்கின்றார்கள். அவர்கள் பழைய பத்திரிகையாளர்களாக இருப்பார்கள், முன்னாள் திரைப்பட முயற்சியாளர்களாக இருப்பார்கள், தோற்றுப்போன திரைப்படக்காரராக இருப்பார்கள், ஆக்கவழியில் எதையும் கிள்ளிப்போடாத வாய்ச்சொல் வீரர்களாக இருப்பார்கள். நல்லவிதமாக ஒரு சொல்லைச் சொல்வதற்கு எப்போதுமே முன்வராதவர்கள் அவர்கள். ஆனால், ஒரேயொரு சொல்லால் கோடானு கோடியில் முதலீடு செய்து எடுத்த படத்தை முடித்துக் கட்டிவிடுவார்கள்.

உரிய படக்குழுவிடம் அச்சொற்களைக் கூறுவதோடு அவர்களின் பரப்புரை நின்றுவிடாது, காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டே இருப்பார்கள். முன்னைக்கும் சற்றே கூடுதலாய் விரித்துச் சொல்லத் தொடங்குவார்கள். நல்ல தொடக்கத்தோடு வெற்றிகரமாய் ஓடவேண்டிய ஒரு படம் ஓடாமல் போவதற்கான முதற்சுழியை இவர்களே இடுவார்கள். ஆளவந்தான் திரைப்படத்தைப் பற்றி ஒருவர் கூறிய எதிர்ப்பொருளால் அப்படத்தை வாங்க முன்வந்திருந்த ஒரு வடநாட்டார் பின்வாங்கியது பேரிழப்பில் முடிந்தது என்று தயாரிப்பாளர் தாணு வரலாற்றுச் சுவடுகளில் குறிப்பிடுகிறார். பூட்டாத பூட்டுகள் திரைப்படம் மகேந்திரனின் மற்றெல்லாப் படங்களைப் போன்றேதான் இருந்தது. அது தோல்வியுறக் காரணம் அப்படம் குறித்துத் தோன்றிய எதிர்மறைத் தரமொழிகளே (விமர்சனம் = தரமொழி).

படம்வெளியாகி அதைக் கண்ணுறும் தரங்கூறி (விமர்சகர்கள்) தம் தரமொழியை அதே நாளில் இணையத்தில் வெளியிடுகிறார். அந்நாள் முழுக்க அப்படம் குறித்த உரையாடல்களே இணைய வெளியின் உடனடி எழுத்தாக, உடனடிக் காணொளியாக இருக்கின்றன. ‘படம் எப்படி?’ என்று கேட்பதற்கென்றே இங்கொரு கூட்டமும் இருக்கிறது. அங்கே படத்தைப் பற்றிக் கூறப்படும் ஒற்றைச் சொல் அப்படத்தை முடித்துக் கட்டிவிடுகிறது. ‘போர், செம அறுவை, பிளேடு, குப்பை’ என்று ஈவிரக்கமில்லாத சொற்களோடு அவை வெளிப்படுகின்றன. தரமுரைக்கும் ஒன்று தரந்தாழாதபடி தரமாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு வேண்டாவா என்ன ?

ஒரு படத்திற்கான தரமொழியைப் பெற முற்காலத்தில் பத்திரிகைகளைத்தாம் சார்ந்திருந்தோம். சென்ற வாரம் வெளியான படத்திற்கு மறுவாரம் தரமொழிகள் வெளியாகும். ஒரு படத்தை ஒருவாரம் திரையரங்கில் விட்டுவைக்க இது போதுமானதாக இருந்தது. இதழ்களும் ஓரளவுக்குப் பொறுப்போடே எழுதின என்று சொல்ல வேண்டும். விகடனும் குமுதமும் கல்கியும் வாரத்திற்கு ஓரிரண்டு படங்களை மதிப்பிட்டு எழுதின. விகடனில் பெறப்படும் மதிப்பெண்கள் அப்படத்தின் விளம்பரங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. குமுதத்தில் பால்யூ என்னும் திரைப்பட நிருபர் தனியாக இயங்கினார்.

அவை தவிர்த்து நாளிதழ்களில் வெளியாகும் தரமொழிகள் நம்பத் தகுந்தவையாகவே இல்லை. ஒரு படத்தைத் தாழ்த்தி மதிப்பிட்டு தினத்தந்தியில் ஒரு வரிகூட எழுதப்படமாட்டாது. ஏனென்றால் தினத்தந்தி என்னும் நாளிதழ் திரைப்பட விளம்பரங்களாலேயே பணம் ஈட்டுகிறது. தன்னுடைய ஒரு விற்பனைப் பிரிவு போலவே திரையுலகை அந்நாளிதழ் கருதுகிறது. படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகுதான் நாளிதழ் விளம்பரங்கள் உள்ளங்கை அளவுக்குச் சுருங்கின. எண்பதுகளில் இரட்டைத்தாளளவு (அதை டபுள் ஸ்பிரெட் என்பார்கள்) முழுமைக்கும் ஒரு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டார்கள். உன் படத்துக்குப் பெரிய விளம்பரமா, என் படத்துக்கு அதைவிடப் பெரிய விளம்பரத்தைப் பார் என்கிற மட்டத்தில் அந்தப் போட்டி நிலவியது. அந்நாளிதழில் அன்றாடச் செய்திகளை எங்கே எங்கே என்று தேடும்படி திரைப்பட விளம்பரங்கள் மொய்த்தன.

இது கட்டுப்பாடற்றுப் போவதோடு சிறு தயாரிப்பாளர்களின் குரல்வளையை இறுக்குகிறது என்றுணர்ந்த தயாரிப்பாளர் சங்கம் நாளிதழ் விளம்பரத்திற்கு அளவுக் கட்டுப்பாடு விதித்தது. என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் தினத்தந்திதான் திரைப்படங்களுக்கான நாளிதழ் விளம்பரச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தினகரனிலும் திரைப்பட விளம்பரங்களைக் காணலாம். தினமலரிலோ தினமணியிலோ காண்பது அரிதினும் அரிது. அதனால்தான் தினமலர் நாளிதழ் திரைப்படம் சார்ந்த எதிர்மறைச் செய்திகளை தயங்காமல் முந்தி வெளியிடுகிறது. வாரமலர் துணுக்கு மூட்டையில் அதன் எள்ளலுக்கு ஆளாகாத திரைப்புள்ளியே இல்லை எனலாம். தினமணி திரைத்துறை சார்ந்த அக்கறையைக் காட்டுவதில்லை.

இந்நிலையில் தொலைக்காட்சிகள் மக்களின் முதன்மையான ஊடகமாக மாறத் தொடங்கின. தொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியில் வாரம் ஒரு படத்துக்குத் தரமொழி கூறப்பட்டது. முதற்பத்து (டாப் டென்) என்ற நிகழ்ச்சியும் விரும்பிப் பார்க்கப்பட்டது. அதில் அப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் பட்டியலிடப்பட்டன. புதுப்பாடல்கள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டன. புதுப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் தரப்பட்டன. தொடக்கத்தில் இவை படத்தின் தன்மை சார்ந்தே நடந்தன. ஆனால், காலம் செல்ல செல்ல தொலைக்காட்சிக்கு ஒரு திரைப்படத்தை விற்பது பெரிய வருமானம் ஆனது. ஒரு தொலைக்காட்சிக்கு விற்கும் படத்தின் சிறு துண்டுகூட பிறிதொன்றில் காட்டப்படக்கூடாது என்ற நிலை தோன்றியது. தொலைக்காட்சி நிறுவனங்கள் படத்தயாரிப்புச் சந்தையின் மூக்கை நுழைத்தன. தான் தயாரிக்கும் படத்திற்கேற்ப உரையாடல்களை உருவாக்கும் உள்ளடி வேலையில் ஈவிரக்கமின்றி இறங்கின. தகாத படத்தையும் உயர்த்திப் பிடிக்கும் போக்கு தொடங்கியது. நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன.

இன்றைக்கு வெளியாகின்ற ஒரு படத்தைக் குறித்து அந்தப் படக்குழு ஒரு தொலைக்காட்சியில் கூடி உரையாடுகிறது. அது ஒரு கட்டண விளம்பர நிகழ்ச்சி என்பதுகூட மக்களுக்குத் தெரியாது. அப்படத்தின் சிறப்பு கருதி அத்தொலைக்காட்சி அந்நிகழ்ச்சியை நடத்துவதாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு படத்தைக் குறித்த போலியான நற்சொல் உருவாக்கப்படுகிறது.

இன்னொரு முனையில் ஒரு படத்தைக் குறித்த ஈவிரக்கமற்ற இணைய மதிப்பீடுகள் தோன்றுகின்றன. இவை இரண்டும் மோதிய பின் இணையத் தனியாள்களின் சொற்களே வெற்றி பெறுகின்றன. அவர்களால் ஒரு படத்தை ஒரே சொல்லால் வீழ்த்திவிட முடிகிறது. இவற்றுக்கு நடுவில் காசுறை வாங்கிக்கொண்டு கனிவாய் மலர்கின்ற ஊடகத்தினரும் இல்லாமலில்லை. அண்மையில் வெளியான ஒரு பெரிய திரைப்படத்தைப் பற்றிய காணொளித் தரமொழியை வழங்கியவர் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளானார் என்று அறிகிறோம். இன்றைக்குத் திரைப்படத் தரமொழிகளின் இயல்புத் தன்மை முற்றிலுமாகக் குலைந்து தடுமாறிக்கிடக்கிறது. ஒரு திரைப்படத்தை நோக்கி அதன் பார்வையாளனை ஆற்றுப்படுத்தும் நல்ல வரிகளைக் கூறுவோர் யாரென்று தேடினால் ஒருவருமே தென்படவில்லை.

-கவிஞர் மகுடேசுவரன்

tamil.filmibeat.com