சென்னை: சமூக அவலங்கள் மீது விஜய்க்கு உண்டான கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என்று அவரது தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனம் குறித்து பாஜகவினர் அன்றாடம் ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். எனினும் விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
விஜய்யின் வசனங்கள் அனைத்தும் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாக இருப்பதாக சில கூறி வருகின்றனர். இந்நிலையில் மெர்சலுக்கான எதிர்ப்பு குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளரிடம் கூறுகையில் சமூக அவலங்கள் மீதான விஜய்யின் கோபமே மெர்சல் படம்.
எம்ஜிஆர், காமராஜரை போல் விஜய்க்கு சமூக அக்கறை உள்ளது. அரசியல் ஆர்வம் என்பதை காட்டிலும் விஜய்க்கு சமூகத்தின் அவலங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. விஜய் ஒரு காந்தியவாதி. அவரது கோபத்தை அவரது சினிமா மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் கத்தியை எடுத்துக் கொண்டு வீதியில் நின்று போராட முடியாது. அதனால் அவரது ஆயுதம் சினிமா. மக்களுக்கு நல்லது செய்ய ஒரு போராளி தலைவனாகவும் இருந்து நன்மை செய்யலாம். அதற்காக அவர் பதவிக்கு வர வேண்டும் என்றில்லை.
அவரை நம்பியுள்ள இளைஞர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு அவர் தலைவனாக வேண்டும். பின்னர் மாற்றத்தை தர வேண்டும். இதை பதவியிலிருந்து கொண்டு செய்வாரா இல்லை அமைப்பின் மூலம் செய்வாரா என்பது எனக்கு தெரியாது. அரசியல் ஆர்வத்துக்கும் சமூக அக்கறைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.