ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: மஇகா பதில் சொல்ல வேண்டும்!

2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கான காரணங்களை மஇகா தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, பிரதமர் நஜிப் அவர்கள் எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அறிவித்தார். அதன் வழி 2022 வாக்கில் மலேசிய இந்தியர்களின் கல்வி மற்றும் சமூக பொருளாதாரம் மேம்பாடடையும் என்றார்.

அதோடு,  கடந்த ஜூலை 11ஆம் தேதி, டெங்கிள் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் உரையாற்றிய பிரதமர் நஜிப், இத்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’.  மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல்திட்டம் இதுவாகும். சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்க எம்.ஐ.பி. ஒரு சிறந்த தளமாகும் என்று கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்புகள் இந்தியர்களிடையே ஒரு நம்பிக்கையை  ஏற்படுத்தியது. அதன் அடிப்டையில் 2018 பட்ஜெட்டில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.

இவை குறித்து கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் இயக்குனர் கா. ஆறுமுகம், தான் பலத்த ஏமாற்றத்தை அடைந்ததாகக் கூறினார். “எம்ஐபி வழி இந்தியர்களை, குறிப்பாக கீழ்மட்ட நாற்பது விழுக்காட்டினரை, 2022 க்குள் முன்னடைவு செய்ய வேண்டுமானால் கொள்கை அடிப்படையிலான திட்டங்கள் தேவை. அவை பற்றிய எந்தத் தகவலும் அவரது பட்ஜெட் உரையில் இல்லை”, என்றார்.

மேலும் விவரிக்கையில், “பட்ஜெட்டின்  மொத்த ஒதுக்கீடு ரிம280, 000 மில்லியன். அதில் ரிம46, 000  மில்லியன் மேம்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை, தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம 50 மில்லியன், தெக்குன் திட்டத்தின் கீழ் ரிம 50 மில்லியன், செடிக் அமைப்புக்கு ரிம 50 மில்லியன் மற்றும் அமனா சகாம் 1 மலேசிய வழி 1,500 மில்லியன் யுனிட்கள் ஒதுக்கப்பட்டு அதில் பங்கு கொள்ள சிறப்பு கடனுதவியாக ரிம 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது”, என்றார்.

கடந்த கால பட்ஜெட்டை விட இது மோசமாக இருப்பதாக கூறிய வழக்கறிஞருமான ஆறுமுகம், அமனா சகாம் 1 மலேசிய யுனிட்களை வாங்கும் நிலையில் ஏழ்மையில் வாழும் இந்தியர்கள் இல்லை. எம்ஐபி அறிக்கையின்படி  கீழ்மட்ட 40 விழுக்காட்டு  இந்தியர்களின் சராசரி குடும்ப வருமானம் ரிம 2,672 மட்டுமே. இதில் 227,000  குடும்பங்கள் உள்ளனர். மேலும், இவர்களில் 82 விழுக்காட்டினர் கடனாளியாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களால் எப்படி இந்த முதலீட்டை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். பணம் உள்ளவர்கள் மட்டும்தான் இதில் பயனடைய இயலும். இந்த ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு என அவர் சாடினார்.

“எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அமலாக்கம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 2 விழுக்காட்டு  பட்ஜெட் தொகையையாவது, அதாவது ரிம 5,600 மில்லியனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதைவிடுத்து சுமார் வெறும் ரிம 150 மில்லியனை ‘இந்தியர்கள் என்ற அடையாளத்தில் தமிழ்ப்பள்ளிக்கும், தெக்குன் நிதிக்கும் செடிக்-க்கும் ஒதுக்கீடு செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது”, என்கிறார் ஆறுமுகம்.

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’ , மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல் திட்டம் என்றும், இது சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்கும் எனவும் நஜிப் கூறியதை, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மஇகா, பிரதமரின் வாக்குறுதிக்கு ஏற்ற வகையில் என்ன ஒதுக்கீடுகள் கொள்கை அளவில் உள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

(சீரமைக்கப்பட்டது)