ஆபத்தான  மௌன கலாச்சாரம்

– கி. சீலதாஸ், அக்டோபர் 29, 2017.

 

மௌனவிரதம், மக்களின்  மௌனப்புரட்சி, பொன்னான மௌனம் போன்ற சொற்றொடர்கள்  நமக்குப்  பழகப்பட்டவைகளாகும். மௌனவிரதமானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில், நிர்ணயிக்கப்பட்ட  நேரத்தில்  பேசாமல்  இருப்பதைக்  குறிக்கும்.  உண்ணாவிரதம்  போல்  மௌனவிரதம்  மேற்கொள்ளப்படுவதும்  இயல்பு.

மௌன  குழுமத்தைச்  சேர்ந்ததுதான்  பொன்னான  மௌனம்.  சிலர்  முரட்டுத்தனமாகப்  பேசுவார்கள்,  நடந்துகொள்வார்கள்.  பிடித்த  முயலுக்கு  மூன்று  கால்  என்ற  விதண்டாவாதத்தில்  ஆர்வம்  காட்டுவார்கள்.  இது  அன்றாடம்  காணப்படும்  காட்சி.  கணவன் – மனைவி,  உறவினர்கள்,  நெருங்கிய  நண்பர்கள்  போன்றோரிடம்  சில  வேளைகளில்  மௌனம்  காப்பதை  பொன்னானக்  காரியமாகக்  கருதுவார்கள்.  இவ்வாறு  காக்கப்படும்  பொன்னான  மௌனம்  நன்மை  பயக்கும்.

மக்களின்  மௌனப் புரட்சியானது  மக்களின்  உண்மை   உணர்வை  வெளிப்படுத்தாத  அமைதிப்  புரட்சியைக்  குறிக்கிறது.  அதாவது,  ஆர்ப்பாட்டம்  ஏதும்  இல்லாமல்,  தங்களின்  உணர்வுகளைப்  பகிரங்கப்படுத்தாமல்  தருணம்  வாய்க்கும்போது  தங்களின்  புரட்சிகரமான  முடிவை  வெளிப்படுத்துவார்கள்.  உதாரணத்திற்கு,  நாட்டில்  பல  பிரச்சனைகள்  எழுந்து  மக்களின்  நிம்மதியைக்  கெடுத்து  விடுகிறது.  எதிர்க்க  முடியாது;  எதிர்த்தால்  பல  கொடுமைகள்,  தொல்லைகள்  நேரலாம்.  ஆனால்  தேர்தல்  வருகிறது.  அதுவரையில்  கிணறில்  கிடக்கும்  கல்லைப்போன்று  வாழந்த  மக்கள்  தங்களின்  உணர்வுகளை  வாக்குச்  சீட்டுகளின்  மூலம்  காட்டிவிடுவார்கள்.  இதன்றி,  கொடுமையான  ஆட்சியை  நீக்கும்  பொருட்டு  தீவிரச்  செயலில் இறங்கினால்,  அமைதியாக  இருந்த  மக்கள்  அந்தச்  செயலுக்கு  ஆதரவாகச்  செயல்படுவார்கள்.  இதையும்  மௌனப்  புரட்சி  எனலாம். ஜனநாயகத்தில்  இப்படி  எல்லாம்  நடக்க  வாய்ப்பு  உண்டு..

மேலே  குறிப்பிடப்பட்ட  மௌனவிரதம்,  மௌனப்புரட்சி,  பொன்னான  மௌனம்  போன்றவை  நன்மையானவை,  இவற்றிற்கு மாறாக,  புதுவிதமான  ஒரு  கலாச்சாரம்  வடிவம்  பெறுகிறது.  அது  மௌனக்  கலாச்சாரம்.  இதன்  பூர்வீகம்  எங்கே  கருத்தரித்து  அடைகாக்கப்பட்டு  நடைமுறையில்  பயன்படுத்தப்படுகிறது?  அது  பெரும்பாலும்  அரசு  அலுவலகங்கள்  அரசு  நிர்வாகத்துறைகளில்  காணப்படும்   அணுகுமுறையாகும்,  பொருளகங்கள்  மற்றும்  பொதுவாகவே  அதிகாரமுள்ளவர்களால்  கையாளப்படும்  மெத்தனமான  அணுகுமுறை  எனலாம்.

ஒருவர்  தமது  தேவைகளை  மனுவாகத்  தயாரித்து  அரசு  இலாகாவுக்கு  அனுப்புவார்.  மனுகிடைத்தது.  பரிசீலிக்கப்படும்  அல்லது  நிராகரிக்கப்பட்டு விட்டது  என்ற  தகவல்  வராது. அதே  மனுதாரர்  அரசு  இலாகாவுக்கு  நேரில்  சென்று  தம்  மனுவைத்  தாக்கல்  செய்ய  முயன்றால்  அங்கிருக்கும்  குட்டி  நெப்போலியன்கள்  மனுவை  மேலோட்டாமாகப்  பார்த்துவிட்டு  “இது  ஏற்றுக்கொள்ளமுடியாது”  என்று  சொல்லிவிடுவார்கள்.  ஏற்றுக்கொள்ள  மறுப்பதற்கான  காரணம்  என்ன?  என்று  கேட்டால்  காரணத்தைச்  சொல்லமாட்டார்கள்.  அப்படியே  ஒரு  காரணத்தைச்  சொன்னாலும்  அது  தெளிவாக  இருக்காது.  மூஞ்சில்  அடித்தது  போல்,  “இந்த  மனுவை  ஏற்றுக்கொள்ள  முடியாது!”  அதையே  கிளிப்பிள்ளைபோல்  சொல்லுவார்கள்.  பாமர மக்களும்  அதை  ஏற்றுக்கொண்டு  மேலே  என்ன   செய்வது  என்று  அறியாமல்  வேதனைப்படுவார்கள்.  அதே  மனுதாரர்  பலமுறை  அதே  இலாகாவுக்குச்  சென்று  மனுதாக்கல்  செய்ய  முயன்றால்  அதிகாரிகளின்  பதிலில்  மாற்றம்  இருக்காது. அந்த  மனுதாரர்  துணிவோடு  சட்ட   நடவடிக்கை  எடுத்தால்  “அப்படி  ஒரு  மனு  எங்கள்  அலுவலகத்தில்  சமர்ப்பிக்கப்படவில்லை”  என்று சொல்ல தயங்கமாட்டார்கள்.   கூச்சமில்லாமல்  பொய்யுரைப்பர்.  அது  கொடுமையான  நிலை  எனலாம்.  ஆனால்  அவ்வாறு  சொல்லமாட்டார்கள்,  நடந்துகொள்ளமாட்டார்கள்  என்று  நம்ப  வேண்டாம்.  இப்போதெல்லாம்  ஒரு  கடிதம்  எழுதுவதற்கு  தயங்கும்  அதிகாரிகளைத்தான்  பார்க்கிறோம்.  அவர்களுக்கு  மக்களின்  குறையைத்  தீர்க்கும்  எண்ணம்  கிடையாது.  அதிகாரத்தில்  இருக்கும்  மமதையில்  பொதுமக்களின்  பிரச்சினைகளைக்  கவனிப்பதில்  மெத்தனம்  மிகுந்து  காணப்படுகிறது.

பொருளகங்கள்,  அதிகாரிகள்,  அதிகாரப்  பொறுப்பில்  இருப்பவர்கள்  ஏன்  இவ்வாறு  நடந்து  கொள்கிறார்கள்  என்பதை  ஆராய்ந்து  பார்க்கும்போது;  ஒன்று,  தம்முடிவை  எதிர்ப்பவர்  யார்  என்கின்ற  அகங்காரமாக  இருக்கலாம்,  அல்லது  எழுந்துள்ள  பிரச்சினைக்குத்  தீர்வு  காணமுடியாத  நிலையாக  இருக்கலாம்,  அல்லது   பேசாமல்  இருந்தால்  பிரச்சினையை  மறந்துவிடுவார்கள்  என்ற  நம்பிக்கையாகவும்  இருக்கலாம்.  மொத்தத்தில்  சொல்ல  வேண்டுமானால்  இது  பொறுப்பற்ற  மனோபாவத்தை  காட்டுகிறது.  இது  ஒரு ஆபத்தான  கலாச்சாரம்.  ஆபத்தான  மௌன  கலாச்சாரம்.    தனியார்  நிறுவனங்கள்கூட  ஆதாயத்தைக்  கவனத்தில் கொண்டு  நீங்கள்  அனுப்பும்  கடிதங்களுக்குப்  பதில்  தரமாட்டார்கள்.  காரணம்,  அப்படிப்பட்டச்  செயல்  இலாபத்தைக்  கொடுக்காது.  பதில்  கடிதம்  எழுத  வேண்டும், நேரம்  பிடிக்கும்.  அந்த  நேரத்தை  வருவாய்  தரும்  காரியத்தில்  செலுத்தலாம்.  இப்படிப்பட்டச்  செயல்களைத்தான்  “மௌனம்  கலாச்சாரம்”  என்று  சொல்லலாம்.  எனவே,  அரசு இலாகாவாகவோ  அல்லது  எவருடனாவது  முக்கியமானத்  தகவல்  தெரிவிக்கவோ,  அறிய  விரும்புவோர்   அதை   கடிதமாக  எழுதி  தபால்  நிலையம்  மூலமாக  அனுப்பி,  அனுப்பியதற்கான  சான்றைப்  பத்திரமாக  வைத்துக்கொள்வது   எக்காலத்துக்கும்   நல்லது,  உதவும்.

இலாபத்தில்  குறிப்பாக  இருப்போர்,  சுயநலத்தில்  கவனமாக  இருப்போரிடம்  நாம்தான்  கவனமாக  நடந்து  கொள்ளவேண்டும்.  தூய்மையான  நிர்வாகம்  என்று  பறைசாற்றுவதால்  பலனில்லை. தூய்மையான  மனதோடு  தங்கள்  பொறுப்புகளை  நிறைவேற்றினால்தான்  அதிகாரிகள்  தங்கள்  கடமைகளைச்  செவ்வெனச்  செய்தார்கள்  என்று  சொல்லலாம்.