ஓர் ‘அசாதாரண’ எம்.பி. வாழ்க்கையில் ஒரு நாள்

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜுக்கு, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் நீண்டதொரு வரலாறு உள்ளது.

இது 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது, சுங்கை சிப்புட்டில் உள்ள  ஒரு தோட்டப்பள்ளியில் தன்னார்வளராக தனது சேவையைத் தொடங்கினார்.

சமூகப் பணிகள் மற்றும் ஏழைகளை வளப்படுத்தல் ஜெயக்குமாரின் வாழ்க்கையில் அப்போதே முக்கியமான ஒன்று, அதுவும் தற்போது மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபின்பு அது இன்னும் அதிகரித்து போனது.

நாட்டில் பல அரசியல்வாதிகளின் அன்றாட வாழ்க்கை, மக்களிடையே வரவேற்பைப் பெற முட்டி மோதுவதிலும், பத்திரிக்கை அறிக்கைகள் மூலம் தங்களின் போட்டியாளர்களைச் சாடுவதிலும், புகைப்படங்களில் முகம் காட்டுவதிலும் கழிகின்ற போது, ஜெயக்குமாரின் வாழ்க்கை மாறுபட்ட வழியில் செல்கிறது.

ஜெயக்குமாரின் சோசலிசக் கொள்கைகள், அவரை நாசீச அரசியலில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கிறது. (நாசீசம் – வீண் தற்பெருமை, தற்செருக்கு, அல்லது சுயநலம்)

“நான் வழக்கத்திற்கு மாறான ஓர் அரசியல்வாதி. அரசியலில் மாற்று கலாச்சாரத்தைக் கொண்டு வரவே நான் அரசியலுக்குச் சென்றேன். நான் நவதாராளவாதப் பொருளாதாரத்தைப் பற்றி சொல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், மலேசியாகினி ஜெயக்குமாரை ஒருநாள் பின்தொடர்ந்து, அவரது பணியில் இருந்த முதலாளித்துவ எதிர்ப்பைக் கவனித்தது.

காலை மணி 11: லிம் கார்டன், ஈப்போ – ஜெயக்குமாரை அவரது வீட்டில் சந்தித்தோம். அன்றையப் பணிகள் அவருக்காக காத்துக்கிடந்தன, அடுத்த 12 மணி நேரத்திற்கு அவர் மிகவும் பிஸி. தேவையான ஆவணங்களை எடுத்து வைத்துகொண்டு, வெளியாக தயாராகிக் கொண்டிருந்தார்.

அன்று திங்கட்கிழமை. 2018 வரவு செலவுத் திட்ட விவாதம் முடிந்திருந்ததால், ஜெயக்குமார் நாடாளுமன்றம் செல்லவில்லை, அன்று அவர் பேசுவதற்கான நேரமும் இல்லை. அதுமட்டுமின்றி மக்கள் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது, எனவே ஜெயக்குமார் நாடாளுமன்றம் செல்லவில்லை.

அவரின் முதல் இடம் தைப்பிங், அங்கு சொக்சோ கட்டணம் செலுத்துவதில் ஒரு பிரச்சனை.

“இதுவெல்லாம் எனக்கு தொடர்புடைய பிரச்சனைகள் அல்ல,” என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “நான் ஒரு டாக்டராகதான் பயிற்சி பெற்றேன்.”

இருப்பினும், ஒரு வழக்கறிஞரை அமர்த்த வசதியில்லாதவர்கள் என்பதால், அவர்களுக்கு உதவ அன்று அவர் அங்கு வந்துள்ளார். நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு, அதன் பங்கீட்டாளர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இது அவருக்கு ஒரு வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

அவர் தனது ‘தொயோத்தா வியோஸ்’ காரின் பின்புறத்தில், தனது பிளேஸரை தொங்கவிடுகிறார், தனக்கு ஒரு ‘டை’ தேவைபடுமா என்று யோசிக்கிறார். “ஒருவேளை என்னைப் பார்த்து அவர்கள் பயப்பட, அல்லது, அவர்கள் நான் தீவிரமானவன் என்று நம்ப அது தேவை,” என்று அவர் நகைச்சுவை செய்தார்.

மதியம் 12 மணி : சொக்சோ அலுவலகம், தைப்பிங் – ஓர் இந்திய முஸ்லிம் உணவகத்தில் ஜெயக்குமார் எஸ்.மோகனலிங்கத்தைச் சந்தித்தார்.

அவர்கள் வழக்குத் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்ததோடு, விசாரணைக்கு முன்னதாக சிலவற்றைக் கலந்துரையாடினர்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில், மோகனலிங்கம், 32, சுங்கை சிப்புட்டில் ஒரு செம்பனை தோட்டத்தில், வேலையில் இருந்தபோது, தனது வலது காலில் கடுமையாக காயமடைந்தார். சில மாதங்களுக்குச் சொக்சோ உதவி தொகையைப் பெற்றபிறகு, அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சொக்சோ வழங்கியது.

அந்தத் தொகையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் மாதாந்திர சொக்சோ உதவிநிதி பெறுவதற்குத் தகுதியற்றவர் என்பதை, மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்திய பின்னர்தான் மோகனலிங்கம் அறிந்தார்.

படிப்பறிவு இல்லாத மோகனலிங்கம், இன்னும் முழுமையாக குணமடையாததால், முழுநேர வேலைக்குச் செல்ல முடியவில்லை; அதனால், தனது மனைவிக்கும் மூன்று பிள்ளைகளுக்கும் உணவளிக்கப் போராடினார்.

மூன்று பேர் கொண்ட குழுவுக்கு முன்பாக விசாரணை நடந்தபோது, சொக்சோ மருத்துவ வாரியம், மோகனலிங்கத்திடம் அத்தொகையை வழங்குவதற்கு முன்னர், அதுகுறித்த விவரங்களை முழுமையாக அவரிடம் விளக்கமளித்ததா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். மேல்முறையீடு தோல்வி அடைந்தது.

மனம் தளர்ந்தநிலையில், இவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல அவர் அறிவுறுத்தியதோடு, தான் அதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார்.

மாலை மணி 4 : கம்போங் முர்னி, தைப்பிங் – பிரதான சாலைக்குப் பின்னால் அமைந்திருந்த ஒரு புறம்போக்கு வீட்டை நோக்கி அவரின் கார் பயணித்தது, கே. கமலா தேவியைச் சந்திக்க. அவரின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள், பலமுறை வழி தவறி, வேறு பாதையில் சென்றுவிட்டார்.

கமலா தேவி, தனது 2 மகன்களுடனும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தனது 19 வயது மகளுடனும் வாழ்ந்து வருகிறார். இவர்களில் யாருக்கும் பிறப்பு ஆவணங்கள் இல்லை.

கமலாதேவியின் பிரச்சனையை ஜெயக்குமார் கடந்த 2 ஆண்டுகளாக கவனித்து வருகிறார். இந்தச் சந்திப்பு, தேசியப் பதிவு இலாகாவால், இவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக.

கமலாதேவியும் அவரின் உறவினரும், குடியுரிமை விண்ணப்பத்திற்கு ஆதாரமாக, மரபணு சோதனை (டி.என்.ஏ.) செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். அவர்களின் மற்ற அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தான் சில தேவாலயங்களுக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மாலை மணி 7.15 : சுங்கை சிப்புட் சேவை மையம் – ஜெயக்குமார் அலுவலகத்தின் துருப்பிடித்த, பெரியப் பெயர்ப் பலகை, பொது மக்களை வரவேற்றது. தாங்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்த பிரதிநிதியைச் சந்திக்க, மக்கள் அவருக்கு முன்னதாகவே, அங்கு வந்து, வரிசைப் பிடித்து காத்திருந்தனர்.

அடுத்த நான்கு மணிநேரங்களில், ஜெயக்குமார் சுமார் 50 பேரைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். சிலர் இங்கு வாடிக்கையாக வருகிறார்கள், மற்றவர்கள் அவரை முதன்முறையாகச் சந்திக்க வந்திருந்தனர்.

புதியதாக வந்தவர்களிடம், அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பற்றி கேட்டறிந்து, தனது உரையாடலைத் தொடங்குகிறார் ஜெயக்குமார்.

மருத்துவப் பரிந்துரைகள், வேலை வாய்ப்புகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கு நிதிஉதவி பெற சிபாரிசு கடிதங்கள், வீட்டு மின்சார, நீர் கட்டண பில்கள் உட்பட பல வேண்டுகோள்கள் அவர்முன் வைக்கப்படுகின்றன.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒருவர், பணம் கேட்டு சொக்சோவுக்குக் கடிதம் எழுத வந்திருந்தார். செமோர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் இருந்து, ஆறு விவசாயிகள் , ஒரு நிலப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவரின் உதவியை நாடி வந்திருந்தனர்.

ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஜெயக்குமார், அவற்றைக் கையாள, தன்னுடைய மூன்று முழுநேரப் பணியாளர்களையும் நியமிக்கிறார்.

இரவு மணி 11.15 : சுங்கை சிப்புட்டில் ஒரு காப்பி கடை – ஜெயக்குமாரின் மூன்று பணியாளர்களான – செங், ஷாஸ்னி மற்றும் நாகேன் அவ்வாரத்திற்கான தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டனர்.

அடுத்த நாள், செங் செமோர் விவசாயிகளுடன் மாநகர மன்றம்

ஜெயக்குமாருடன் நாகேன், செங் மற்றும் சாஸ்னி

செல்லவுள்ளார். ஷாஸ்னி சில குடும்பங்களின், மின்சார- நீர் கட்டணக் கடன்களின் ஒரு பகுதியைச் செலுத்திவிட்டு; மீதத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்துவார்.

நாகேன், போலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் ஒருவருக்கு மருந்துகள் வழங்க அனுமதி கேட்டு, அவரின் மனைவி சார்பில், சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதவுள்ளார்.

அதன் பிறகு, ஜெயக்குமார் சில பி.எஸ்.எம். இளைஞர்களுடன் அந்தக் காப்பி கடையில் இணைகிறார். 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்கிறார், மேலும், நாடாளுமன்ற விவாதத்தின்போது, அவர் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் அவர்களிடம் உண்டா எனப் பார்க்கிறார்.

வரவு செலவுத் திட்டத்தில், இளைஞர்களுக்குக் குறைவாக ஒதுக்கப்படுவதாக அவர்கள் குறைபட்டனர். மேலும், தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி பயிற்சி (TVET) வாய்ப்புகளை, உள்ளூர் இளைஞர்களுக்குத் தெரிவிக்க, ஒரு தகவல் அமர்வு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர். ஜெயக்குமார் அவர்களின் பரிந்துரைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

நள்ளிரவு : ஈப்போ – மீண்டும் ஈப்போவுக்குத் திரும்பும் வழியில், ஜெயக்குமார் நாளைக்கு மீண்டும் இன்னொரு வேலைப்பளுவான நாள் என்று கூறினார், ஆனால், அவர் அதை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈப்போ ஷரியா நீதிமன்றத்தில், மத மாற்று வழக்குத் தொடர்பாக, ஒரு பெண்ணுடன் தனது நாள் தொடங்கும் என்று அவர் கூறினார்.

அதன் பின்னர், ஜெயக்குமார் நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்க உள்ளார்.

நாளை : ஓர் அரசியல் ஜாம்பவானை வீழ்த்திய ஜெயக்குமார், 14-வது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் கடுமையான போட்டியைச் சந்த்திக்கும் என்று கணித்துள்ளார்.