RUU 355: ஹாடி அரசமைப் புச் சட்டத்தை துச்சமென மதித்தாரா?

  • கி. சீலதாஸ்  (K. Siladass), நவம்பர் 19, 2017.

 

பாஸ்  கட்சி  தலைவர்  டத்தோ ஹாடி  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்த  இஸ்லாமிய  சட்டத்  திருத்த  மசோதாவானது  1965ஆம்  ஆண்டு  ஷரியா  நீதிமன்ற  குற்றவியல்  அதிகாரத்தில்  திருத்தத்தைக்  காண  முற்படுகிறது. இது RUU 355 என்றழைக்கப்படுகிறது.

இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  எல்லா  விஷயங்களிலும்  மாநில  ஆட்சியாளர்கள்  மட்டும்தான்  முடிவெடுக்க  முடியும்.  பினாங்கு,  மலாக்கா,  சாபா,  சரவாக்  மற்றும்  கூட்டரசுப்  பிரதேசங்களில்  மலாய்  ஆட்சியாளர்கள்  கிடையாது.  எனவே,  அந்த  மாநிலங்களின்  இஸ்லாம்  குறித்த  விஷயங்களில்  நாடாளுமன்றம்  சட்டம்  இயற்றலாம்.  அதோடு  ஆட்சியாளர்கள்  இல்லாத  அந்த  மாநிலங்களில் இஸ்லாமிய  விஷயங்களில் நாட்டின்  பேரரசர்  தலைமைப்  பொறுப்பு வகிக்கிறார்.  எனவே,  RUU 355  திருத்த  மசோதா  முறையாக  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டதா  என்ற  கேள்வி  எழுகிறது.

இஸ்லாம்  குறித்து  சட்டம்  இயற்ற மற்றும்  நடப்பில்  இருக்கும்  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  வேண்டுமானால்,  அது  கூட்டரசு  அரசமைப்புச்  சட்டத்தின்  38ஆம்  பிரிவுக்கு  இணக்கமானதாக  இருக்க வேண்டும்.

மலாய்  ஆட்சியாளர்களைக்  கொண்ட  மாநிலங்களில்  இஸ்லாம்  குறித்த  சட்டத்தை,  மரபை,  சமய  முறையை,  திருத்த வேண்டுமானால்  ஆட்சியாளர்கள்  மாநாடு,  அதாவது  ஆட்சியாளர்கள்,  ஒப்புதல்  அளிக்க  வேண்டும்.  இந்த RUU 355   திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டபோது அதற்கு ஆட்சியாளர்களின்  ஒப்புதல்  பெற்றிருக்காதது  ஒருபுறம்  இருக்க,  அதை  நிறைவேற்றியே  தீருவோம்  என்று  ஹாடி  பிடிவாதமாக  நடந்துகொண்டது,  நடந்துகொள்வது,  இஸ்லாமியர்  அல்லாதார்  இதில்  தலையிடக்கூடாது.  அவ்வாறு  தலையிட்டால்  நாடாளுமன்றத்தில்  அப்போது  சமர்ப்பிக்கப்பட்ட,  பிறகு  பின்வாங்கப்பட்ட  குடும்ப  மசோதாவை,  ஆதரிக்கமாட்டோம்,  என்று  அச்சுறுத்தியது   அனைத்தும்  சட்டத்தை  மதிக்காத  செயல்  என்பதை  புலப்படுத்துகிறது.

ஹாடி  இவ்வாறு  நடந்து  கொண்டபோது,  இஸ்லாமியர்  அல்லாத  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  பிரத்தியேக  விளக்க  நிகழ்ச்சிகள்  நடத்தியதையும்  நாம்  மறந்துவிடக்  கூடாது.  அதுமட்டுமா,  இஸ்லாமியர்  அல்லாத தேசிய  முன்னணியின்    நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  விளக்கம்  அளித்தது  யாவும்  சட்டத்தை  மதிக்காத  செயலாகும். இதையெல்லாம்  சிந்தித்துப்  பார்க்கும்போது ஹாடியின்  உள்நோக்கம்  என்ன?  ஆட்சியாளர்களைப்  புறக்கணித்து  செயல்பட  முடியும்  என்ற  நெஞ்சழுத்தமா?  அல்லது  அரசமைப்புச்  சட்டத்தை  துச்சமென  நினைத்தாரா?  எதுவாக  இருந்தாலும்,  அப்படிப்பட்ட  போக்கு  ஏற்றுக்கொள்ள முடியாதது  என்பது  ஒருபுறம்  இருக்க,  நிரந்தரமான  அரசமைப்புச்  சட்டத்திற்கு  மரியாதை  செலுத்த  மறுக்கும்  தரம்  கொண்டவர் ஹாடி என்று  முடிவு  கொள்ள  நேரிடும்.  இப்படிப்பட்டவர்களின்  கையில்  அரசியல்  அதிகாரம்  ஒப்படைக்கப்பட்டால்  என்னவாகும்?

அந்த RUU 355  மசோதா  இன்னும்  நாடாளுமன்ற  பட்டியலில்  இருப்பதானது  அது  விவாதத்திற்கு  எடுத்துக்  கொள்ளப்படும்  என்பதை  குறிக்கிறது.  சட்டத்தை  மதிக்காத  இந்த  நடவடிக்கையை  நாடாளுமன்றம்  அனுமதிக்கக்கூடாது  என்பதையே  மலேசியர்கள்  விரும்புவர்,  ஆதரிப்பர்.  ஹாடியின்  பிடிவாதமான  போக்கு  மலேசியவாழ்  பல்லின மற்றும்  பல  சமயங்களுக்கிடையே  நிலவும்  நல்லிணக்கத்திற்கு  ஊறு  விளைவிக்கும்  தரத்தைக்  கொண்டிருக்கிறது.  இதை  அவரும்  அவரைச்  சார்ந்தவர்களும்,  உணர்ந்தால்  நாட்டுக்கு  நல்லது.