நேருவும் மலாயா இந்தியர்களும் – ‘ஞாயிறு’ நக்கீரன்

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப வசதியெல்லாம் அந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிராதபோதும், அன்றைய மலாயாவின் அரசியல், சமூக சூழலெல்லாம் உடனுக்குடன் இந்தியாவில் பிரதிபலித்தன.

குறிப்பாக, இளம் வயதிலேயே தொழிற்சங்கத் தலைவர்களாக உருவாகி மலாயாவாழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஏ.கணபதி தூக்கில் இடப்பட்டது, வீரசேனன் படுகொலை செய்யப்பட்டதெல்லாம் அன்றைய இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் வலுவாக பிரதிபலித்தன.

கணபதிக்காக தமிழக ஏடுகளில் தலையங்கம் தீட்டப்பட்டது; சிறப்புச் செய்திகளும் வெளியிடப்பட்டன. 1947-இல் இந்தியா விடுதலை அடைந்தபின் மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு  சுதந்திர வேட்கை பெருக்கெடுத்தது. கூடவே, அரசியல் மறுமலர்ச்சியும் மெல்ல முகிழ்ந்தது.

அதனடிப்படையில்தான் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியும் உதயமானது. இதன் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேருதான். பேரா, கோல கங்சாரில் தோன்றிய ஜான் திவி, கல்விமானாகவும் சமூகப் பற்றாளராகவும் விளங்கினார். அதேவேளை, மலாயாவின் சுதந்திரத்திலும் அதீத அக்கறைக் கொண்டிருந்ததால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். அத்துடன் நேருவுடனும் தொடர்பு ஏற்பட்டது.

அதன் அடைப்படையில்தான் இந்திய தேசிய காங்கிரஸின் சாயலில், அதன் ஒரு கிளையாகவே அன்றைய மலாயா இந்தியர் காங்கிரஸ்(மஇகா) தோற்றுவிக்கப்பட்டது.  மஇகா-வின் முதல் தலைவராக ஜான் திவிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியவரே நேருதான். அப்பொழுது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நேருதான் விளங்கினார்.

அப்படிப்பட்ட மஇகா, தற்பொழுது 70 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இன்றைய தலைவர்கள் அதன் தொடக்ககால வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றனரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரையும் அடுத்தப் பொதுத் தேர்தல் குறித்த பதற்றமும் அச்சமும் தொற்றிக் கொண்டுள்ள நிலையில், மஇகா என்னும் ஆலமரத்திற்கு விதைபோட்ட நேருவை இன்று எண்ணிப் பார்ப்பார்களா என்பது ஐயமே!

கடந்த நவம்பர் 14-ஆம் நாள் நேருவிற்கு பிறந்த நாள். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் தலைவர், பிரதமர், பகுத்தறிவாளர், சமதரும(சோசலிச)வாதி என்றெல்லாம் பல்வகையாலும் சிறந்து விளங்கிய நேரு, அரசியல் அடிப்படையில் ஏராளமான தவறுகளைச் செய்தார்.

காஷ்மீரில் பிரிவினைவாதம் இன்றளவும் தொடர்வதற்கு அவர்தான் காரணம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியை முதன்முதலாக கேரளத்தில் களைத்தவர் இவர்தான்.

தமிழக அரசியலைப் பொருத்தமட்டில், காமராசரைக் கொண்டாடிய நேரு, அண்ணாவை மிகவும் வெறுத்தார். அறிஞர் அண்ணாவைப் பற்றி இளப்பமாக எண்ணி இருந்த நேரு, அண்ணா இந்திய நாடாளுமன்ற மேலவையில் கன்னி உரை நிகழ்த்தியபோது, அவருக்கான நேரம் முடிந்ததும் அன்றைய மேலவைத் தலைவர், பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி மணி ஒலித்தபோது அதைத் தடுத்த நேரு, அண்ணா பேசி முடிக்கும்வரை இடையூறு செய்ய வேண்டாம் என்று தகவல் தெரிவித்துவிட்டு, உடனே தன்னுடைய அறைக்குச் சென்று அண்ணாவின் கருத்தாழமிக்க ஆங்கில சொற்பொழிவை இமைகொட்டாமல் கேட்டாராம் நேரு.

அண்ணா பேசி முடித்ததும், தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று தன்னுடைய உதவியாளரிடம் உடனே சொல்லி அனுப்பினார் நேரு. அண்ணாவைத் தேடி வந்த அவரின் உதவியாளருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பேசி முடித்ததும் சென்னைக்குத் திரும்ப புதுடில்லி விமான நிலையத்திற்கு விரைந்துவிட்டார் அண்ணா என்பதை அறிந்த நேரு, நேரத்தை அண்ணா எப்படி அளந்து பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து மேலும் வியப்பில் ஆழ்ந்தாராம்.

ஆசிய சோதி என்றும் சாமாதான புறா என்றும் அழைக்கப்பட்டவர் நேரு..