டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரான வெ.பொன்ராஜ், சினிமா உலகத்தை கந்துவட்டி நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கான வழிமுறையை, அங்கு நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். சினிமா தொழிலைக் காக்க வேண்டுமென்றால், தியேட்டர்களை அரசுடைமையாக்குங்கள்; திரைப்படத்துறையினரை பங்குதாரர்கள் ஆக்குங்கள் என்கிறார். இதுகுறித்த அவரது பதிவு இதோ –
ஊழல் பணத்தில் ஊழலை எதிர்க்கும் சினிமா!
சினிமாவை பைனான்சியர்கள் இயக்குகிறார்கள். அவர்களை ஊழல்வாதியின் பணம் இயக்குகிறது. ஊழல் பணத்தில் ஊழலை எதிர்த்து படம் எடுக்கிறார்கள்; முதல்வர் அவதாரமும் எடுக்கிறார்கள் நடிகர்கள். ஊழல்வாதிகளுக்கும் கந்துவட்டியில் தன்னைக் காத்திட தெரியாத அட்டைக்கத்தி நடிகர்களுக்கும் ஓட்டு போட மக்களை தயார் செய்கிறது ஊடகம். இதில் தற்கொலை பண்ணி செத்தவன் இளித்த வாயன். தற்கொலை பண்ண வைத்தவனை வள்ளல் என்று போற்றுகிறார்கள் அதே சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள். பணம் பாதளம் வரை மட்டுமல்ல, தமிழர்களின் மண்டையை மலுங்கடிக்கும் வரையிலும் பாயும். ஊடகங்கள் அந்த வேலையை கச்சிதமாக செய்யும். இத்தனை அக்கிரமத்தையும் பண்ணியவனுக்கு அரசு வெண்சாமரம் வீசும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
யாரிடம் பணப்புழக்கம் இருக்கிறது?
GVஐ மறந்தது போல் அசோக்குமாரும் மறக்கப்படுவார். கந்துவட்டி சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் தொடரும். ஏனென்றால், இது ஒரு சம்பவம், ஒரு உயிரிழப்பு அவ்வளவே. கருப்புப்பணத்தை மோடி ஒழித்த லட்சணம் இதுதான். ஒழுங்காக சிறு தொழில் செய்து பிழைத்தவனும், அவனை நம்பிய அப்பாவி அன்றாடம் காய்ச்சிகளும்தான் நாளும் சாகிறார்கள். இன்றைக்கு பணப்புழக்கம் யாரிடம் இருக்கிறது? கட்-அவுட் வைத்து ஊரெங்கும் விழா கொண்டாடி, மக்களுக்கு தினமும் ரூ 250 கொடுக்கும் அரசியல்வாதியிடமும், ஊழல் பணத்தை வைத்து கந்து வட்டி தொழில் நடத்தும் கயவர்களிடமும்தான் பணப்புழக்கம் இருக்கிறது.
ட்வீட் ரட்சகர்களின் அட்டகாச மவுனம்!
சினிமா பிரபலங்களும், மக்களை காக்க அவதாரம் எடுப்பவர்களும் “ ஐயோ! இது கந்து வட்டி இல்லை, (அடி வாங்கியவர்களுக்கு ஞாபகம் வருமா? இல்லையா?) பைனான்ஸ் தொழில், அவர்கள் அழிந்தால் சினிமா தொழிலே அழிந்துவிடும் என்று ஒரு புறம் கூப்பாடு போடுகிறார்கள். தினமும் ட்வீட் செய்யும் அனாதை ரட்சகர்களோ இன்னொருபுறம் அட்டகாச மவுனம் காக்கிறார்கள். இவர்கள் தான் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பவர்கள் என்று காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
கழுத்தை நெறிக்கும் அரசு வங்கிகள்!
இன்றைக்கு அரசு வங்கிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, பெரும் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து, சாதாரண மக்களை ஏமாற்றும் அரக்கர்களாக மாறிவிட்டன. விற்ற கரும்புக்கு 4 வருடமாக கூலி கொடுக்காத கரும்பாலைகள் இருக்கின்றன. அதை விவசாயிகளுக்கு கிடைக்கும்படி செய்யாத கையாலாகாத அரசாங்கம் இங்கே இருக்கிறது. உற்பத்தி செய்து விற்ற கரும்புக்கு 4 வருடமாக வட்டியே தரவில்லை. அசலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை. ரூ. 3 லட்சம் கடன் கொடுத்த அரசு வங்கியோ, வட்டியோடு ஒரு சில தவணைகளைக் கட்ட தவறிய அப்பாவி திருவண்ணாமலை விவசாயியை, அடியாட்களை வைத்து அடித்துக் கொலையே செய்துவிட்டது. கந்து வட்டி கொலைக்கும், அரசு வங்கி கொலைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? அரசு விவசாயிகளின் உழைப்பைத் திருடாமல் இருந்திருந்தால், ரூ. 4 லட்சம் கிடைத்திருத்தால், ரூ 3 லட்சம் கடன் கட்டியிருப்பான். செத்த விவசாயி குற்றவாளியா? கடமையை செய்ய தவறிய அரசு குற்றவாளியா? அடியாட்களை வைத்து கொலை செய்த அரசு வங்கி குற்றவாளியா?
அரசியல்வாதிகளின் தைரியம்!
இன்றைக்கு சினிமா தயாரிப்பாளர் தற்கொலைக்காக, நான்கு நாட்கள் ஊடகங்கள் விவாதிக்கின்றனர். ஆனால் கொலை செய்யப்பட்ட விவசாயி குறித்தோ, ஒரு நாள் செய்திதான். அதுவும் டிவியில் ஒரு ஸ்க்ரோலிங் செய்தியாகத்தான் வருகிறது. சாதாரண மனிதனுக்கு அவ்வளவுதான் மதிப்பு. ஆனால் அவன் வாக்கைப் பெற்று அவனையே கொல்கிறார்கள். இத்தகையோர் செய்வது வெற்று அரசியல் என்பதை தெரியாதவர்களாக இருக்கிறார்கள் அப்பாவி மக்கள். இவர்களை சாதியாலும், இனத்தாலும், மதத்தாலும், பொழுதுபோக்காலும் பிரித்து அரசியல் நடத்துகிறார்கள். இது எதுவுமே, இடைத்தேர்தலில் எதிரொலிக்காது என்ற தைரியம் அரசியல்வாதிகளுக்கு உண்டு.
அரசியல்வாதி – அரசு – அரசு வங்கி – கந்துவட்டி – அப்பாவி – இவர்களை மயக்கத்திலேயே வைத்திருக்கும் சினிமா – ஊடகங்கள் – மக்களிடம் இருந்து வாங்கும் பணம் – அவர்களின் சொத்து – கோடிகளில் புரளும் புது செல்வந்தர்கள் என, இது ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலாக இருக்கிறது.
சினிமா தொழில் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட வேண்டுமா?
* தியேட்டர்களை அரசுடைமை ஆக்குங்கள்.
- வினியோக உரிமையை அரசு-திரைப்பட கூட்டமைப்பு அதிகாரத்தின் கீழ் கொண்டு வாருங்கள்
மின்னனு நிர்வாகத்தின் மூலம் தியேட்டர் வசூலை ஒழுங்குபடுத்துங்கள், கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.
நடிகர்களையும், இயக்குனர்களையும், கதாசிரியர்களையும், பாடலாசிரியர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களையும் படத்தயாரிப்பில் பங்கதாரர்கள் ஆக்கிட சட்டம் கொண்டு வாருங்கள். அப்போதுதான் கற்பனைத் திறன் மக்களை கவரும் வகையில், திரைப்படம் வெற்றி பெறும் வகையில் உருவாகும்.
நடிகர்கள் சம்பளத்தின் 50 சதவீதத்தை, சினிமா தயாரிப்பில் கட்டாய முதலீடு பண்ண வையுங்கள். லாப/நட்டத்தில் பங்கு கொடுங்கள், செலவைக் குறையுங்கள்.
அறிவு சார் சொத்துரிமை கதைக்கும், வசனத்திற்கும், இயக்கத்துக்கும், இசைக்கும், பாடல்களுக்கும் ராயல்டி கொடுக்க சட்டம் இயற்றுங்கள். செலவைக் கட்டுப்படுத்துங்கள்.
கேபிள் டிவி டிஜிட்டல் ஆகிவிட்டது. இனி இன்டெர்நெட்டின் மூலம் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்.
அரசும் – உயர்ந்த சம்பளம் வாங்கும் நடிகர்களும் இணைந்து ஒரு நிதியத்தை உருவாக்கி, மேற்கண்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு படம் எடுக்கும் கூட்டமைப்பிற்கு, 6-12 % வரை கடனோ, முதலீடோ கொடுக்க வழி வகை செய்ய வேண்டும்
இது போல் பிற சிறு மற்றும் குறுந்தொழில்கள் காக்க, வங்கிகளின் ஒட்டு மொத்த லாபத்தில் 10 சதவிகிதத்தில் வரும் பணத்திற்கு, மேட்சிங் கிராண்ட் அரசு கொடுத்து, அதை சிறு மற்றும் குறும் தொழில்களை காக்க 4% வட்டிக்கு அரசு கடன் கொடுத்திட சட்டமியற்ற வேண்டும்.
இதை அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமா? சிறு மற்றும் குறுந் தொழில்களைக் காத்திட அரசு முன் வருமா? இதனை செயல்படுத்துவதற்கு சினிமாதுறையினர் முன்வருவார்களா? தெரியவில்லை? இவர்கள் இதைச் செய்வதற்கு முன்வரவில்லை என்றால், அதற்கான வழி வகையை நாம் ஆராய வேண்டும் என்கிறார் பொன்ராஜ்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
-nakkheeran.in