உலக அரசியலை அடக்கியாளும் ‘அங்குசம்’ மதம்

ஞாயிறு’ நக்கீரன்,டிசம்பர் 15, 2017.   உலக அரசியல் என்னும் யானைய இன்றளவில் அடக்கி ஆளும் அங்குசம் மதம் என்பதாக மாறிவிட்டது. இந்த நிலை, உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மருட்டலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த நூற்றாண்டில் தொடக்கத்தில் அரசியல் மறுமலர்ச்சி உலகளாவிய நிலையில் ஏற்பட்டது. அது முதல், மக்களின் அன்றாட வாழ்வில் பொதுமக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அரசியல் ஊடுறுவி நின்றது; இழையோடி இரண்டறக் கலந்து வெளிப்பட்டது.

ஆனால், உலக மயமாதல் என்னும் நிலை ஏற்பட்டவுடன் எல்லாம் தலைகீழாகி விட்டது. பொருளாதாரம், வர்த்தகம், கல்வி உள்ளிட்ட கூறுகளில் உலகமய சிந்தனை நிலைகுத்தி நின்றவரை பாதகமான விளைவு ஏதும் ஏற்படவில்லை. அதற்கேற்ப, அறிவியல் வளர்ச்சியும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப புரட்சியும் அதற்கு துணை நின்றது.

இந்த உலகமயம் என்னும் காட்டு யானையைப் பற்றி உலகில் எந்த நாடும் அக்கறைப் படவோ, அதைக் கட்டுப்படுத்தவோ நினைக்காததால், இது அரசியலிலும் நுழைந்துவிட்டது.  அரபு மண்டலத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பட்ட ஒரு மெல்லிய அரசியல் புரட்சி வளைகுடா மண்டலத்தையே பற்றிக் கொண்டது. அரபு உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் ஆயுத புரட்சியின் துணை கொண்டு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய ‘அரசியல் உலகமயம்’ அங்கெல்லாம் சமய உருமாற்றத்தையும் மளமளவென்று நிகழ்த்தி வருகிறது. உலகமயக் கூறு, அரசியலில் ஊடுறுவியதன் பக்க விளைவுதான் இதெல்லாம்!.

இப்படிப்பட்ட அரசியலை தற்போழுது மதம் ஆட்கொண்டு விட்டது; அதுவும் பன்னாட்டு அளவில்..; இந்த ஆபத்தான நிலைக்குக் காரணம், கல்வியில் மதம் கலந்து விட்டதுதான். முன்பெல்லாம், உயர்க்கல்வி நிலையங்களில் குறிப்பாக, பல்கலைக்கழங்கங்களில்  அரசியல், கலை, வர்த்தகம், பொருளாதாரம், தத்துவம் உள்ளிட்ட பாடங்களைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுத்து கல்வி பயில்வர்.

அதைப்போல மாணவர் அமைப்புகளும் சமூக, பண்பாட்டு, கலைக் கூறுகளுடன்தான் நிறுவப்படும். பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனையும் உலகளாவில்தான் பரிமாணம் பெற்றான். ஆனால், உலகமயம் .. .. உலகமயம் என்று பேசப்படும்  இற்றை நாட்களில் மதம், ஆன்மிகம் என்ற அடிப்படையில் மட்டுமே உயர்க்கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்கள் அணி பிரிகின்றனர். அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவர்களையும் ஆட்கொண்டுள்ள இத்தகையப் போக்கு  எதிர்கால சமுதாயத்திற்கு ஆபத்தானது.

இதன் நீட்சியாகத்தான், இன்றளவில் அரசியல் நடவடிக்கையிலும் மதம் கலந்து விட்டது. அத்துடன் அப்பட்டமாகவும் வெளிப்படுகிறது. கடந்த வார மையப் பகுதியில் உலக அரசியலை முறுக்கேற்றிய ஜெருசல விவகாரத்தில் மதம்தான் மையக் கருவாக நின்று நர்த்தனம் புரிந்தது.

இதோ, இந்த வாரத் தொடக்கத்தில் இலங்கை அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகதை எடுத்ததிலும் சமயம்தான் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. பெரும்பங்கென்ன? மொத்தப் பங்கையும் சமயம்தான் நிறைவேற்றியுள்ளது. சிங்களனுக்கும் சீனனுக்கும் என்ன தொடர்பு?

மா சே துங் நிறுவிய செஞ்சீனத்தின் கம்யூனிசக் கொள்கையா பெய்ஜிங்கையும் கொழும்பையும் இணைத்தது? இல்லவே இல்லை; தன்னை அடுத்திருக்கும் உலகின் பெரும் ஜனநாயகக் குடியரசுப் பட்டியலில் இரண்டாவது நாடும் துணைக் கண்டமுமான இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, தமிழீழ விடுதலைப் போர் முள்ளி வாய்க்காலில் நிலைகுத்தி நிற்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய இந்தியாவின் உற்றுழி உதவியையும் மறந்து பெய்ஜிங்குடன் கொழும்பை கைக்கோக்க வைத்தது எது?

பண்டைய குமரிக் கண்டத்தின் முக்கியப் பகுதியாக இருந்து பின்னர் பாடலிபுத்திர நகரத்தை(இன்றைய பாட்னா) மையமாகக் கொண்டு மௌரிய சாம்ராஜியம் செழித்த மண்ணில் இடைச் சங்கக் காலத்தில் உதித்த புத்தன் கண்ட சமயம்தான் அது. ஆன்மிகத்தில் முதன் முதலில் பகுத்தறிவு சிந்தனையை விதைத்த புத்தன்  கண்ட உண்மையான அந்த ஆன்மீக  நெறி, இன்றைய காலத்தில் பௌத்தம் என்று பெயரில் மொத்தமாக உருமாறி மனித இரத்தத்தை வெதுவெப்பு குன்றாமல் பச்சையாகக் குடிக்கும் மனித வெறியர்களை உருவாக்கும் பட்டறையாக மாறிவிட்டது.

இந்த மதம்தான் கொழும்பையும்  பெய்ஜிங்கையும் இணைக்கிறது. ஐநா மன்றத்திற்கு அன்று தலைமை வகித்த பான் கி மூனே சமய அடிப்படையில்தான் ஈழச் சிக்கலில் காய் நகர்த்தினார்.

அதைப்போல மியன்மாரின் ரொகிங்கியா இன மக்களுக்காக எழுந்த ஆதரவும் சமய அடிப்படையில்தான் அணிவகுத்தது. மலேசியத் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சாகிட் அமிடி, “மலேசிய அரசு ரொகிங்கியா மக்களுக்கு உதவுவது அவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல; மாறாக மனித நேய அடிப்படையில்தான்” என்று இதன் தொடர்பில் தெரிவித்த கருத்து நாமெல்லாம் சிந்தையில் கொள்ளத்தக்கது.

வட கொரிய விவகாரத்தில், அமெரிக்ககா, குறிப்பாக டிரம்ப் வலிய முன்வந்து தென் கொரியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதும் இதேவரிசையில்தான்; அதாவது  சமய அடிப்படையில்; ஜப்பானிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட கொரிய மண் ஒன்றாக இல்லாமல் வட கொரியா என்றும் தென் கொரியா என்றும் பிளவிபட்டதற்குக் காரணம் ரஷ்யாவும் அமெரிக்காவும்தான். கம்யூனிய சிந்தாந்தம் கொண்டவர்களை வட கொரியா என்ற பெயரில் ரஷ்யாவும் மறு பகுதியை தென் கொரியா என்ற பெயரில் கம்யூனிசத்திற்கு எதிரானவர்களைக் கொண்டு அமெரிக்காவும் ஒன்றுபட்ட கொரியாவை பங்கு போட்டுக் கொண்டன.

அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் தென் கொரியாவின் பக்கம் அமெரிக்கா நிற்பது ஒருபுறம் இருந்தாலும், தென் கொரியாவில் வாழும் பௌத்தர்களைவிட அதிகமாக இருக்கும் பாரம்பரிய-தீவிர போக்குகொண்ட கிறிஸ்துவர்களை கருத்தில் கொண்டுதான் இன்றைய அமெரிக்கத் தலைமை இப்படி தென் கொரியப் பக்கம் சாய்ந்துள்ளலாக ஆட்டம் போடுகிறது.

இனி உலக அளவில் எங்கெங்கு அரசியல் நடவடிக்கை நிகழ்ந்தாலும் அங்கங்கு சமயம் ஊடுறுவி நிற்கும்; அதுவும் மறைமுகமாக அல்ல; வெளிச்ச மேடையில் முகம் காட்டியபடி!

இத்தகையப் போக்கு நாளைய உலகிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அடுத்த நடைபெறப்போகும் அரசியல் நிகழ்வுகள் நமக்கு சுட்டிக் காட்டும்.