நாயகன் ஜெய், அவரது மனைவி அஞ்சலி, ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா என கூறுகிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், சமூக வலைத்தளம் மூலமாக ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைக்கிறார் ஜெய். இதற்காக, அந்த வீட்டை பற்றி ஆராய்ச்சி செய்ய மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்.
அங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழந்தையுடன் பப்பு விளையாடி வருகிறான். சில தினங்களில் ஜெய், அஞ்சலி இருவருக்கும் இந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலவுவதை அறிகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பப்பு உடம்பிற்குள் அந்த பெண் குழந்தையின் ஆவி புகுந்துக் கொள்கிறது. மேலும் ஜெய்யை அப்பா என்று அழைத்து அம்மா எங்கே என்று கேட்கிறது.
இறுதியில் அந்த குழந்தை ஜெய்யை அப்பா என்று அழைக்க காரணம் என்ன? அம்மா யார்? அந்த குழந்தையை ஆவியானதற்கு என்ன காரணம்? இந்த வீட்டில் இருந்து தப்பித்து, தன் கதையை எழுதி படம் இயக்கினாரா ஜெய்? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், சண்டை படங்களில் இதுவரை நடித்து வந்த ஜெய், முதல் முறையாக முழுநீள திகில் படத்தில் நடிக்கிறார். வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவியாக வரும் அஞ்சலி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி ஐயர் நடிப்பால் மனதில் பதிகிறார். யோகி பாபுவின் காமெடி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
வழக்கமாக பேய் படங்கள் என்றாலே வீடு, பழிவாங்குவது, பயமுறுத்துவது என அதே ஸ்டைலை பின்பற்றி இருக்கிறார் இயக்குனர் சினிஷ். ஆனால், திரைக்கதையில் ஓரளவிற்கு வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார்.
சமீபத்திய ஹாலிவுட் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் என துவக்கத்திலேயே இயக்குனர் சொல்லியிருப்பது சிறப்பு. படத்தில் வரும் காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய்ப் படத்தை நினைவூட்டுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
-tamilcinema.news