-கி.சீலதாஸ். ஜனவரி 2, 2018.
இந்தியாவின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி எதிர்ப்பின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதை விமர்சித்த நாளிதழ்கள் “ராகுல் காந்திக்குப் பட்டாபிஷேகம்” என்று பிரகடனப்படுத்தின.
இந்த ராகுல் காந்தி யார்? இவர் நேரு குடும்பப் பரம்பரையைச் சேர்ந்தவர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவர் மகாத்மா காந்தி என்பது பிழையானக் கருத்து. 1921ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அந்த இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு காரணியாக இருந்தவர்களில் பிரதானமானவர் வெள்ளைக்காரரான எலன் அக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) இந்திய காங்கிரஸ் அமைப்பு கருதரிக்க ஆதரவு தந்தவர் அன்றைய இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி டஃபவின் பிரபு (Lord Duffevin). அவரின் ஒப்புதலோடு மற்றும் பல இந்தியப் பிரமுகர்களோடு இணைந்து 1885-இல் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. அதன் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர் அக்டேவியன் ஹியூம். 1919-1920; 1928-1929 ஆகிய இரு கட்டங்களில் மோதிலால் நேரு காங்கிரஸின் தலைவராக சேவையாற்றி உள்ளார்.
மோதிலால் நேரு ஒரு பிரபல வழக்கறிஞர். இவரின் மகன் ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்; இவரின் மகள் இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர்; இவர் அவரது காவலர்களால் கொல்லப்பட்டார். இவருக்குப் பின் நேரு பரம்பரை வாரிசுகளில் ஒருவரான ரஜீவ் காந்தி 1984ஆம் ஆண்டில் பிரதமரானார். 1989ஆம் ஆண்டில் அவர் கொல்லப்பட்டார். 2004ஆம் ஆண்டில் நடந்தப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நடுவண் ஆட்சியைக் கைப்பற்றியது. காலஞ்சென்ற ரஜீவ் காந்தியின் மனைவி சோனியா பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்பினர்.. அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரியவில்லை. சோனியா இத்தாலியைச் சேர்ந்தவர். நேரு குடும்பத்தின் ஓர் அங்கமாகிவிட்ட அவர் பிரதமர் ஆகும் தகுதியை பெற்றுவிட்டார் என்று பெரும்பான்மையான இந்தியர்கள் நம்பினர். ஆனால், சோனியா விவேகத்துடன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தில் அவருக்கு நிறைய அதிகாரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருடைய அனுமதியின்றி நடுவண் அரசு இயங்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. அவர் முடிசூடா அரசி.
இப்பொழுது ராகுல் காந்தி கேள்விக்குரிய முழு நேர அரசியலில் இறங்கிவிட்டாராம். காங்கிரஸ் கட்சியினர் ஒருமனதாக எந்த எதிர்ப்பும் இன்றி அவரைக் கட்சியின் தலைவராக்கிவிட்டனர். இதைத்தான் தகவல் ஊடகங்கள் “பட்டாபிஷேகம்” என்று சொல்கின்றன.
சுற்றிவளைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது நிலவிய கருத்து என்ன? அது வெள்ளைகாரர்களோடு இணைந்து ஒற்றுமையோடு செயல்படும் இயக்கமாக விளங்கியது. நேரு குடும்பத்தினர் மேற்கத்திய – வெள்ளைக்கார பண்பாட்டில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர் வெள்ளைக்காரர்களோடு இணைந்து செயல்பட ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். இன்று அந்த பரம்பரையைச் சேர்ந்த இத்தாலியரை தாயாகக் கொண்ட ராகுல், காங்கிரஸ் தலைவர். அதுமட்டுமல்ல, இந்தியாவின் பிரதமாராக வரவேண்டும் என்று கனவு காண்கிறார். தம் தாய் பிரதமராக முடியவில்லை என்பதில் சட்டச் சிக்கல் இருந்திருக்கும். ராகுலுக்கு அப்படிப்பட்டத் தடைகள் ஏதும் இல்லை. ஆனால், தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்ள துணிந்தவரை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் அது அரசியல் கட்சிகளின் சொந்த நலனைப் பொறுத்து இருக்கும். இந்தியர்கள் பிறநாட்டவர்கள் அல்லது மேற்கத்திய நாட்டு உறவு கொண்டவர்கள் இந்தியாவை ஆளுவதில் எந்தக் குறையும் காணாதவர்கள். இதுவும் இந்தியர்களின் தனிச்சிறப்பு போலும். சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா?
பொதுவாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்கள், குடும்ப அரசியலுக்கு ஆதரவு தருவது ஒரு மரபாகவே மாறி வருகிறது. அதனால்தான் என்னவோ ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸிற்கு தலைமை ஏற்பதை மன்னராட்சியில் வழங்கப்படும் பட்டாபிஷேக பண்பாட்டிற்கு மதிப்பளிப்பதுபோல் நடந்துகொள்கின்றனர். இந்தியா கடைபிடிப்பதாகச் சொல்லப்படும் ஜனநாயகத்தில் பட்டாபிஷேகமானது குடும்ப அரசியலுக்கு முடிசூட்டுவதாகும். இது கட்சியின் மீது ஒரு குடும்பத்துக்கு இருக்கும் செல்வாக்கு உடும்புப்பிடியைக் குறிக்கிறது.
ஜனநாயக் கோட்பாட்டில் மக்கள் விருப்பத்திற்கு மட்டுமே உரிமை உள்ளதே அல்லாது குடும்ப அரசியலுக்கும் தனிப்பட்ட கட்சிக்கும் இடம் இல்லை. குடும்பம் அல்லது தனிப்பட்ட கட்சி அரசியல் சர்வாதிகாரத்துக்கு முடிசூட்டுவதாகும். என்றைக்கு மக்கள் வாரிசு அரசுக்கு மதிப்பு அளிக்கிறார்களோ அன்றே ஜனநாயகம் பட்டுவிட்டது என்று சொல்லலாம். இந்நாட்டு இஸ்லாமிய கட்சியான பாஸ் ஒரு முஸ்லிம் அல்லாதவர் பிரதமராக முடியாது என்பதோடு அப்படிப்பட்டவர்களில் திறமை உடையவர்களுக்கு மற்றப் பொறுப்புகளைத் தரலாம் என்கிறது. இது முஸ்லிம் அல்லாதாரை இரண்டாந்தர குடிமக்களாக கருதும் மனோபாவமாகும். இந்த நாட்டு மக்கள் இப்படிப்பட்ட இனத்துவேஷ கருத்துகளுக்கு இடம் அளிக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.
ஒரு காலத்தில் துன் டான் சியூ சின் மற்றும் துன் வீ.தி.சம்பந்தன் இடைக்காலப் பிரதமர்களாக சேவையாற்றியுள்ளனர். அது துங்கு அப்துல் ரஹ்மானின் சகாப்தம். அதுபோல் இனிமேலும் இந்த நாட்டில் நடக்குமா என்பதை இன்றைய அரசு சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது சந்தேகமே. ஜனநாயகத்துக்குப் புறம்பாகச் செயல்படத் தூண்டும் கலாச்சாரம் பலமடைகிறது. அப்படிப்பட்ட போக்கு நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதை நல்காது.