பாடம் கற்பித்த சூர்யா! ரசிகரின் காலில் விழுந்தார்…

நேற்று மாலை ‘தானா சேர்ந்த கூட்டம்’  திரைப்படத்தின்  விளம்பரத்திற்காக சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அந்தப்  படத்தின் கதாநாயகன் சூர்யா, கதாநாயகி கீர்த்தி சுரேஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் என்று பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொதுவாக பிரபலங்கள் என்றால் அவர்களின் விசிரிகள் எல்லாம் அவர்களை பெற்றோர் அல்லது கடவுளுக்கு ( நாத்திகர்களுக்கு அல்ல) இணையாக பாவித்துக்  கும்பிடுவர். சிலர்  அவர்களை நேரில் பார்த்தால் பட்டென்று காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடத்திய ரசிகர் கூட்டத்தில் கூட ரசிகர்கள் பட்டென்று காலில் விழுந்தனர். ‘என் காலில் விழவேண்டாம்’ என்று அவர் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு விழுந்தனர் ரஜினி ரசிகர்கள். அதேபோல உத்தம வில்லன் படம்வெளியாகும் போது கமல் ரசிகர் ஒருவர் அவர் காலில் விழ முயற்சி செய்ய அதை அவர் தடுக்கப்போகும் காணொளி  ரசிகரை கமல் அடிப்பது போன்று பதிவாகி வைரலானது. கமலும் ‘நான் அடிக்கவில்லை எனக்குப்  பொதுவாக காலில் விழுவதும் பிடிக்காது, விழுபவர்களையும் பிடிக்காது, ஆகையால் அவரை தடுத்தேன்’ என்றார். அரசியலில் கூட காலில் விழும் கலாச்சாரம் உண்டு. சில அமைச்சர்கள் குனிந்த நிலையிலேயே இருப்பர்( அவர்கள் யாரென உங்களுக்கே தெரியும்). இப்படித் தான்   ரசிகர்கள் சிலிர்த்து சில்லறையை விடுவார்கள். ஆனால் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ விழாவில் நடிகர் சூர்யாவுடன் ஆட வந்த ரசிகர்கள் பட்டென அவர்கள் காலில் விழ, இவரும் சற்றும் யோசிக்காமல் பதிலுக்கு  அவர்கள் காலில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கூச்சம் பார்க்காமல் காலில் விழுந்து பாடம் சொன்ன சூர்யாவுக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. ‘ இனி அவரின்  காலில் விழுந்தால்  மீண்டும் நம் காலில் விழுவார், அது அவருக்கு அசிங்கம்’ என்று சூர்யா ரசிகர்கள் காலில் விழுவதை  நிறுத்துவார்கள்.  ரசிகர்களுக்கு நல்ல பாடம் சொல்லித் தந்திருக்கிறார் சூர்யா.

-nakkheeran.in