தமிழ்வழிக் கல்விக்கு வழிவகுக்கும் தமிழர்களின் ஒரே காப்பகமாக இருக்கும் தமிழ்பள்ளிகளைக் காக்கும் பொருட்டு, சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்க்கல்விக்கு குரல் கொடுக்கும் ஒரு நிபுணத்துவ குழு இன்று அறிவித்துள்ளது.
அவற்றில் முக்கியமானது, இருமொழித் திட்டத்தை 2018-இல் அமுலாக்கம் செய்யும் அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகும். இவை இந்தத் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மலேசியக் கல்வி அமைச்சின் இயக்குனர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியவற்றின் மீது இவ்வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் என்கிறார் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
2018-ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் ஊடுருவி உள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பணிக்குழுவை அமைத்துள்ளதாக இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கா. ஆறுமுகம் கூறினார். அந்தக் குழு வெளியிட்ட விபரம் வருமாறு:
கடந்த ஆண்டு, 2017-இல் இருமொழித் திட்டத்தில் ஈடுபட்ட 45 தமிழ்பள்ளிகளுக்கு முறையாக தமிழ் அறவாரியம் வழியாக, அந்தத் திட்டங்களை கைவிடுமாறு ஆலோசனை வழங்கி கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர்ககளுக்கு காலக்கெடுவும் கொடுக்கப்பட்டது. ஒருசில பள்ளிகள் திட்டத்தை கைவிட்ட வேளையில் மற்றப்பள்ளிகள் அவற்றை தொடர்ந்தன.
இந்த வருடம் எங்களின் வழிமுறைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம், கல்விச் சட்டம் மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்கும். அவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்படும். அதன்படிதான் எங்களின் மனுவும் கோரிக்கையும் வாதங்களும் அமையும்.
தமிழ்மொழிவழி கல்வி வழங்கும் ஒரு கட்டமைப்புதான் தமிப்பள்ளிகள். அதில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் போது தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பு ஓர் ஆங்கில பள்ளியாக மாற்றம் காண்கிறது. காரணம், ஐந்து முக்கியமான பாடங்களில் மூன்று பாடங்கள் அதாவது ஆங்கிலமொழிப் பாடம், அறிவியல் மற்றும் கணிதம் ஆங்கிலத்திலும், மலாய் பாடம் மலாய்மொழியிலும் இருக்கும் தறுவாயில் தமிழ்மொழிப் பாடம் மட்டும்தான் தமிழில் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழ்மொழிவழி கல்வி வழங்கி வந்த நமது தமிழ்ப்பள்ளிகள் உருமாற்றமடைந்து ஆங்கிலப்பள்ளியாக உருவாக இயலாது. ஆனால், அவை கல்விக் கொள்கையின் கீழ் தேசியப்பள்ளியின் வடிவமைப்பை பெறும்.
உதரணமாக, தேசியப்பள்ளிகளில் 15 மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தை தேர்வு செய்தால், அந்தப்பாடம் பள்ளியின் அட்டவணையில் சேர்க்கப்படும். அப்படி நிகழும் போது இருமொழித் திட்டம் கொண்ட தமிழ்ப்பள்ளிக்கும் தேசியப்பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகள் மிகக் குறைவானதாக அமையும்.
எனவே, திட்டம் என்ற போர்வையில், தமிழ்ப்பள்ளியில் புகுத்தப்படும் இந்த இருமொழித் திட்டம், தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை உருமாற்றி, தமிழ்மொழிவழி கல்வி என்ற நிலைப்பாட்டை மாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும். அப்படி சட்டதிற்கு அப்பாற்பட்ட வகையில் உருமாற்றம் செய்யும் பணியை, அரசாங்கம், பெற்றோர்களின் தேர்வு என்ற வியூகயுக்கிதியைக் கொண்டு அரங்கேற்றம் செய்கிறது. இது நமது கைகளைக் கொண்டு நாமே நமது கண்களைக் குருடாக்கிக்கொள்வதாக அமைகிறது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் கற்பித்தலுக்கு ஒவ்வாத வகையில், இந்தத் திட்டம் மாணவர்களைத் தரம்பிரித்து அவர்களிடையே வேற்றுமை உணர்வையும் தாழ்வு மனப்பான்யையும் உருவாக்குவதால், இத்திட்டம் தரமான கல்வி சமத்துவமான வகையில் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்ற தேசியக் கல்விக் கோட்பாடுகளுக்கு முரணாக அமைகிறது.
மேலும், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் போதிக்க தமிழ் கற்ற ஆசியர்கள்தான் தேவை என்பதல்ல. அதை எந்த இனத்தவரும் மேற்கொள்ளலாம். அதேபோல், இருமொழித் திட்டம் வழியாக ஒரு பள்ளி உருமாற்றம் அடையும் போது, அங்கு தமிழ் என்பது ஒரே ஒரு மொழிப்பாடம் மட்டும்தான். எனவே, ஒரு தலைமை ஆசிரியராக ஒருவரை அமர்த்த முற்படும் போது அவர் தமிழ் கற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்பணியைச் செய்வதற்கு எந்த இனத்தவராலும் இயலும்.
இருமொழித் திட்டம் அமுலாக்கம் செய்யும் ஒரு தேசியப்பள்ளிக்கு யார் வேண்டுமானலும் தலையாசிரியராக போகலாம். அதேபோல் தமிழ்மொழிவழி கல்வி என்ற கட்டமைப்பை இழந்த தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தமிழர்தான் தலைமையாசிரியராக வரவேண்டும் என்பதில்லை.
மேலும், அறிவியல் மற்றும் கணிதம் என்பது அடிப்படையில் புரிந்து அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள். இவற்றை தமிழ்க் குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த மொழியில்தான் தரமான புரிந்துணர்வைப் பெற இயலும். எனவே, தமிழ்மொழியில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. நமது தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் அறிவியல் மற்றும் கணிதத்திறன் தேசியப்பள்ளிகளின் தேர்வு நிலைகளை அதிகமாக மிஞ்சியுள்ளன. நமது குழந்தைகளின் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் அடைவுநிலைகள் தேசியப்பள்ளிகளின் விகிதத்தைவிட அதிகமாக உள்ளன.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, நமது நாட்டில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் அதிகமாகப் பங்கேற்றவர்களும் பரிசுகள் பெற்றவர்களும் தமிழ்மொழியில் இப்பாடங்களைப் பயின்ற நமது தமிழ்ப்பள்ளி குழந்தைகளாவர்.
இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளை உருமாற்றம் செய்யும் இந்த இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் தலைமை ஆசிரியர்கள் அதை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் உயிர் தமிழ்மொழிவழிக் கல்வி. ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவோம், அதை மேம்படுத்தும் வழிமுறைகள் அதிகமாகவே அரசாங்க புத்தாக்கக் கொள்கைகளில் உள்ளன. அவற்றை அமுலாக்கம் செய்யலாம்.
தமிழ் எங்கள் உயிர் குழுவில், கா. ஆறுமுகம், செ. சில்வம், நா. இராசரத்தினம், ஆர். பாலமுரளி, வ. கௌத்தம், இலா. சேகரன், இரா. பெருமாள், ஜீவி காத்தையா, சி. பசுபதி, சி. தியாகு, தமிழிணியன், ஜெகா, சுப்பையா, கா. உதயசூரியன், தினகரன், சி. பெருமாள் உட்பட இன்னும் மாநில பிரதிநிதிகளும் உள்ளதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
இது சமுதாயத்தின் அடையாளமாக உள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு. இதற்கு தமிழ் ஆதரவாளர்கள் வரவேற்பும் ஆதரவும் நல்குமாறு, ‘தமிழ் எங்கள் உயிர்’ பணிக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இருமொழித் திட்ட அமுலாக்கம் கல்வி இலாக்காவின் ‘கொள்கை’ சம்பந்தப்பட்ட (policy matters) விடயமாகும். அரசாங்க கொள்கை சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் தலையிடாது என்பது வெள்ளிடைமலை. ஆகையால் வெறுமனே தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் பெற்றோரையும் பயமுறுத்தாது இருப்பது இக்குழுவுக்கு நற்பெயரை ஏற்படுத்தும்.
ஏன் இருமொழி பாடதிட்டத்தை தமிழ்ப் பள்ளியில் அமுல் படுத்தினீர்கள் என்று தலைமை ஆசிரியரைக் கேட்டால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைக் காட்டுவார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெற்றோரைக் கை காட்டுவார். பெற்றோரில் எத்தகைய மனப்பான்மையுடையோரை கேள்வி கேட்கிறோம். என்பதை பொருத்து பதில் கிடைக்கும்.
ஆகையால் தமிழ்ப் பள்ளி மீது சட்ட நடவடிக்கை என்பதை கை விட்டு தமிழ்ப் பள்ளி பெற்றோரை சந்திப்பதில் கவனம் செலுத்துங்கள். இருமொழி பாடதிட்டம் நடத்தப்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரையும் அவர்தம் நிர்வாகத்தினரையும் சந்தித்துக் கருத்தை தெரிவியுங்கள். சில இடங்களில் எடுபடாது போகும். அவ்வாறு கேட்கமாட்டாத பள்ளிகளைப் பட்டியலிடுங்கள். அப்புறம் அத்தகைய பள்ளிகள் மீது எத்தகைய நடவடிக்க்ககையை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கலாம்.
திட்டம் என்ற போர்வையில், தமிழ்ப்பள்ளியில் புகுத்தப்படும் இந்த இருமொழித் திட்டம், தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை உருமாற்றி, தமிழ்மொழிவழி கல்வி என்ற நிலைப்பாட்டை மாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும். அப்படி சட்டதிற்கு அப்பாற்பட்ட வகையில் உருமாற்றம் செய்யும் பணியை, அரசாங்கம், பெற்றோர்களின் தேர்வு என்ற வியூகயுக்கிதியைக் கொண்டு அரங்கேற்றம் செய்கிறது. இது நமது கைகளைக் கொண்டு நாமே நமது கண்களைக் குருடாக்கிக்கொள்வதாக அமைகிறது.
அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தான் சரியான முடிவாகும். தமிழ்ப்பள்ளியின் கட்டமைபை உருமாற்றம் செய்யும் தலைமை ஆசிரியரின் செயல் சட்டதிற்கு புறம்பானது. கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்வழியை மட்டுமே அனுமதிக்கிறது.
தேனீ அவர்களின் கருத்தில் பிழை உள்ளது. இருமொழி திட்டம் கொள்கை அல்ல. அது ஒரு திட்டம் மட்டுமே. அந்த திட்டம் ஒரு unlawful and illegal act of the Headmaster.
தலைமை ஆசிரியர் தான் இதன் முட்டுக்கட்டை.
“Unlawful and illegal act of the Headmaster”. தலைமை ஆசிரியர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இருமொழி பாடதிட்டத்தை கேட்டுப்பெற பெற்றோர் அனுமைதியுடன்தான் செய்ய முடியும் . அதை அவர்கள் பெ.ஆ.ச. கூட்டம் போட்டு அனுமதி வாங்கியாச்சு என்று ஆவணங்களைப் பக்காவாக வைத்துள்ளனர். மேலும் அவர் ஒர் அரசாங்க அதிகாரி. அவர் மீதும் கல்வி இலக்கா மீதும் அமைச்சர் மீதும் சேர்த்தே வழக்குத் தொடக்க முதலில் இக்குழுவுக்கு என்ன உரிமை இருக்கென்று காட்ட வேண்டும். அந்த முதல் தடத்திலேயே இக்குழு தோற்று விடும். ஆதலால் வீண் முய/ற்சியைக் கை விட்டு அதை விட தமிழ்ப்பள்ளி மாணவரின் பெற்றோரை அணுகும் முயற்சியை மேற்கொண்டால் நல்லது.
தேனீ உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை போல் உள்ளது உங்கள் பதிவு.
1. தலைமை ஆசிரியர் முட்டாள் என்பதல்ல நமது விவதம். அது போலவே இந்த நடைமுறையை முன்னெடுப்பவர்களும் முட்டாள்கள் அல்ல.
தலைமை ஆசிரியர்/ பெற்றோர் – கல்விச் சட்டம் சொல்லும் medium of instruction என்பதை மாற்ற உரிமை உள்ளதா? இல்லையா? இதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய இயலும்.
Locus standi – this is subject the test – lately the issue of locus standi was given a liberal interpretation. உங்கள் கருத்தின் படி இதில் பெற்றோர்களை இணைப்பது நல்லது.
பெற்றோர்கள் ஈடுபடுவது – முகவும் முக்கியம் என்பது சரி!
டிஎல்பி திட்டத்தை எதிர்ப்பவர்கள் டிஎல்பிஐ செயல்படுத்தும் தமிழ்ப் பள்ளிகளில் இன்னமும் தமிழ் மொழி ஒரு முன்மொழியாய் கற்றுக்கொடுக்கப்படுவதை புரிந்துகொள்வதில்லை என நான் நினைக்கிறேன். தமிழ் இலக்கியம் , திருக்குறள், கொன்றை வேந்தன் , ஆத்திச்சூடி , மற்றும் பல தமிழ் தத்துவங்கள் டி.எல்.பி.யை செயல்படுத்தும் தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் பகுதியாகும். மலேசியாவில் டிஎல்பிஐ செயல்படுத்தும் தமிழ்ப் பள்ளிகல் தமிழ் மொழி கற்கும் செயல்பாட்டினைக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது. மலேசியாவில் ஆரம்பப் பள்ளியில் தமிழில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பது மேல் கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பூஜ்யம் (0) மதிப்பை கொண்டு செல்லும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் , அறிவியல், மருத்துவம், பொறியியல், போன்ற துறைகள் ஆங்கிலத்தில் தான் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தமிழில் அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுக் கொடுக்கும்படி கூச்சலிடும் கும்பல்கள் “கிணற்றுத் தவலைகள் ” போல் உள்ளனர் என்று சொல்லலாம் . இவர்கள் உலகின் செயல்பாட்டினை சரியாக புரிந்துகொள்ளவில்லை அல்லது எனக்கு தெரியாத அரசியல் காரணங்களால் இப்படிக் கூச்சல் இடுகிறார்கள் என்று நினைக்கிறேன் . சுருக்கமாக சொன்னால் முன்னேற்றத்தை வழங்கும் கொள்கைகளை வரவேற்போம்!, வீழ்ச்சியை நோக்கும் சிந்தனைகளை வீழ்த்துவோம்!
மிகவும் சரியாக பதில். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் உலகம் எங்கும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வழியில் நாமும் பயணிக்க வேண்டும்.
“இதில் பெற்றோர்களை இணைப்பது நல்லது.”
இருமொழி பாடத்திட்டம் நடத்தப்படும் பள்ளி மாணவர் பெற்றோரை அழைத்து தலைமை ஆசிரியர் மீதும், அரசாங்கத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க தாங்களும் அந்த வழக்கில் ஒரு தரப்பினராக வர முடியுமா என்று கேட்டுதான் பாருங்களேன்! அப்புறம் தெரியும் இதில் உள்ள சிரமம். ஒரு சிறு பகுதி பெற்றோர் உடன் வந்தாலும் அவர் சொல் பெரும்பகுதி பெற்றோர் சொல்லுக்கு எதிராக அம்பலம் ஏறுமா?
வாயில் சொல்வது எளிது. செயல்படுத்த இந்த குழுவினர் மட்டும்தான் பாடுபட வேண்டும். மீதமுள்ள தமிழர் கை கட்டிக் கொண்டு பார்ப்பார் அல்லது நம்மைப் போல ‘Armchair General’ – ஆக இருந்து கொண்டு கருத்து கூறி கொண்டிருப்பார். பொது வாழ்வில் இப்படி பலதைப் பார்த்து அடிபட்டுள்ளோம்.
‘Locus Standi’ பற்றிய உச்ச நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகள் இன்னும் அசைக்கப்படாமல் உள்ளன.
#காலத்திற்கும் சூழ்நிலைக்கும் உலகம் எங்கும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வழியில் நாமும் பயணிக்க வேண்டும்.#
ஜெர்மானியர்களும், தென் கொரியர்களும், சப்பானியர்களும் இன்னமும் அவர்தம் தாய்மொழியில்தான் உயிர் கல்வி பெற்று பொருளாதாரத் துறையில் உலகளாவிய அளவில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தரமே! எதற்கு மாற்றம் வேண்டுமென்பது அவரவர் தேவையைப் பொறுத்துள்ளது. தாய்மொழியைப் போற்றாது அயலார் மொழியை அரவணைப்பது கள்ளக் காதலியை அரவணைப்பது போலாகும்.
தேனீ அண்ணா, தமிழ் மொழிமீது நம்பிக்கை கொண்டுள்ள உங்களின் கருத்து விவேகமானது. என்க்கு உச்சாகமாக உள்ளது. ஆறுமுகம் அண்ணாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆமாம், ஜேர்மனியர்கள், தென் கொரியர்கள் மற்றும் ஜப்பானியர்கள் இன்னும் தங்கள் சொந்த தாய்மொழியில் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் பொருளாதார வல்லரசுகளாக இருக்கிறார்கள் என்று நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். எனினும், தமிழ் மக்களைப் போலன்றி, அவர்கள் தங்கள் சொந்த நாட்டையும், தங்கள் சொந்த நாட்டிலிருந்தும் தங்கள் சொந்த மொழியை தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான மொழியாகப் பயன்படுத்த முடியும். மலேசிய தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக உள்ளனர். இந்த சிறுபான்மை குழு உயர் கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்றல் மொழியாக தமிழ் மொழியை திணிப்பதற்கு சாத்தியம் இல்லை. சுதந்திர அரசியல் மற்றும் நிர்வாகம் செய்யும் தமிழ் நாட்டில் கூட பொறியியல், மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான சம்பந்தமான பாடங்களை ஆங்கிலத்தில் கற்றுக்கொள்கின்றனர். அப்படியிருக்க மலேசியாவில் வாழும் நாம் எப்படி ஜேர்மனியர்கள், தென் கொரியர்கள் மற்றும் ஜப்பானியர்களிடம் நம்மை ஒப்பிடலாம்? நிரந்தர இல்லம் இல்லாத ஒருவன் யாரை காதலித்தால் என்ன ?
#தமிழில் அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுக் கொடுக்கும்படி கூச்சலிடும் கும்பல்கள் “கிணற்றுத் தவலைகள் ” போல் உள்ளனர் என்று சொல்லலாம் #
அறிவியலையும், கணிதத்தையும் நான் கற்றது தமிழ் மொழியில்தான். இன்று ஒரு பட்டதாரி. நிபுணத்துவமிக்க ஒரு தொழில் உள்ளேன். நான் என்ன கிணற்றுத் தவளையாகவா வாழ்கிறேன்? ஆங்கிலமும், மலாய் மொழி புலமையும் உண்டு. தமிழில் படித்தவன் என்ன தாழ்ந்தா போய்விட்டான்? கல்வியில் உயர் தாழ்வு என்பது மொழியில் அடிப்படையில் ஏற்படுவதில்லை. குறியும், கோளும் நேராகவும் தெளிவாகவும் இருந்தால் நமது தமிழ்ப் பள்ளி மாணவர் அவர்தம் குறிக்கோளில் வெற்றியடைவார். இது உறுதி.
விஜியனின் கருத்தில் ஆழமில்லை. தமிழ்ப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியலை கற்பதற்கு மாணவர்களுக்கு எந்த மொழியில் கற்பித்தால் புரியுமோ அந்த மொழியில்தான் கற்பிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்ல அடித்தளத்தை கொடுக்கும். ஆங்கில மொழி தேவையில்லை என்று யாரும் வாதிடவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கணிதம் அறிவியல் பாடங்களில் தேசிய பள்ளி மாணவர்களை விட தமிழ் பள்ளி மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளனர். அடிப்ப்டையில் புரியும் மொழியில்தா்ன் கணிதம் அறிவியலை குழந்தைகள் புரிந்து கொள்ள இயலும். ஆங்கிலம் தெரியாத புரியாத குழந்தைகளுக்கு அவற்றை புரிந்து கொள்ள இயலாது. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழத்தைகளுக்கு விஜியனின் வாதம் சரியாக இருக்கும். எனது குழந்தகளுக்கு இயலாது. நாங்கள்
தமிழ் மொழியில் பயிலும் போது பெருமை கொள்கிறோம், அதன் புரிதலில் மகிழ்வு கொள்கிறொம். அதனால் நாங்கள் முட்டால் ஆவோம் என யாராலும் முடிவு கட்ட இயலாது.
ஆங்கிலம் பயின்ற பிலிபின், தென்னாப்பிரிகா போன்ற நாடுகள் என்னாயின என்றும் யோச்னை செய்ங்க!
தமிழ்மொழி பற்றி அறியாத தெரியாதவர்கள் தமிழ்ப்பள்ளி பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதற்கு அருகதையற்றவர்கள். ஆங்கிலம் படித்த்வர்கள் ஆங்கிலம்தான் சோறு போடும் என்பவர்கள் தமிழுக்கு நல்லது செய்யாவிட்டால் பராவாயில்லை, துரோகம் செய்ய வேண்டாம்.
சேகரன், ஒருவருக்கு தமிழ் மொழி பற்றி தெரியுமா தெரியாத என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள்? இந்த விஷயத்தில் உங்கள் நிபுணத்துவம் சற்று உதவும். தமிழ் பள்ளிகளையும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோர் உண்மையான துரோகிகள் மற்றும் எமது தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க விரும்புவோர் உண்மையான துரோகிகள்.
எவரும் தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க விரும்பவில்லை.
இருமொழி பாடத் திட்டமென்று கூறி தமிழ்ப் பள்ளிகளை அழிக்காதீர் என்றுதான் கூறுகிறோம்.
‘KELAS BERCANTUM 2018’ – பன்மை வகுப்பு
குறைந்த எண்ணிக்கையுள்ள (மாணவர் எண்ணிக்கை 30-ஐ தாண்டினாலும்) அப்பள்ளிகளில் வகுப்புக்கள் இணைக்கப்பட்டு பாடம் நடத்த வேண்டுமென்ற மாநில கல்வி இலக்காவின் திட்ட அமுலாக்கத்தை உடனடியாக அமுல்படுத்த மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பளர்களுக்கு மாநில கல்வி இயக்குனரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப் பற்றி கல்வி துணையமைச்சர் கமலநாதன் எந்த ஒரு அறிக்கையும் விடாது இருக்கின்றார். இதனால் புதிய தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தேர்வு குறையும். மாணவர் கற்பித்தல் தரம் குறையும். பல தமிழ் பள்ளிகள் தாமாகவே அழிவைத் தேடிக் கொள்ளும். ம.இ.க. தொடர்ந்து மௌனம் காக்கும்!
தமிழ் பள்ளியில் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணித பாடம் போதிக்க மலாய் ஆசிரியர் நுளைக்கப் படுவார். தமிழ் மொழி பாட திட்ட நூல்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியருக்கும் அந்நூல்களை அச்சிடும் இந்திய பதிப்பாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடும். இருமொழி பாட திட்டத்தை வேண்டும் இந்தியர் இதைப் பார்த்து கை கொட்டி சிரிப்பார். நாம் தமிழ்ப்பள்ளி இறப்புக்காக அழ வேண்டும்!
கபார் சாமிக்கு என் பெயரை எப்படி எழுதுவது என்று கூட தெரியவில்லை. என் வாதத்தின் ஆழத்தை அவர் புரிந்துகொள்ள முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர் டிஎல்பி திட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். டிஎல்பி திட்டத்தின் படி தனது பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒரு குழந்தை கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் கற்றுக்கொள்கிறது.பெற்றறோர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், குழந்தைகள் தொடர்ந்து தங்கள் தாய்மொழியில் கற்றுக்கொள்வார்கள். நம் நாட்டில் டிஎல்பி செயல்படுத்தப்படுவது ஒருதலைப்பட்சமாக இல்லை. ஆகவே ஒரே பள்ளியில் டிஎல்பியை அமல்படுத்தும் மற்றும் டிஎல்பியை அமல்படுத்தாத வகுப்புகள் இரண்டுமே ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகலின் வீழ்ச்சி ஆங்கிலதின் பயன்பாடு காரணமாக இல்லை. அவர்களின் தற்போதைய நிலை அவர்களின் அரசியலமைப்பினாலும், தவறான நிர்வாகத்தினாலும் தான். ஏன் வெகுதூரம் செல்கிறீர்கள். சிங்கப்பூரை பாருங்கள். சிங்கப்பூரில் தமிழர்கள் தமிழ் மொழி கற்பது கட்டாயம். தமிழ் மொழியை தவிர்த்து மற்ற பாடங்கள் அனைத்துமே ஆங்கில மொழியில் தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது, கணிதமும் அறிவியலும் உட்பட . சிங்கப்பூரின் கல்வி உலகில் சிறந்த கல்வி திடடமாக பல ஆண்டுக்குளாக தொடர்ந்து இடம்பிடித்டுள்ளது. சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மலேசியாவில் வாழும் தமிழர்களை விட தமிழ் மொழியில் ஆற்றல் பெற்றுள்ளனர் என்று கூறினால் கூட மிகையாகாது. இதை கண்டு நாம் வெக்கப்படவேண்டாமா? ஆகவே அபத்தமான வாதங்கலை முன்வைக்காமல் புத்திசாலியான அண்டை நாட்டின் வழிமுறையை பின்பற்றி முன்னேறுவோம்!
விஜயன் அவர்களே, தங்கள் பெயரை தவறாக எழுதியதுக்கு மன்னிக்க வேண்டும். அதை பெரிய குறையாக கருதி எனது கருத்தை ஒதுக்க முயல்வது தவறு. தாங்கள் கூட காப்பார் என்பதை கபார் என்று எழுதிவிட்டீர்கள் அதனால் நீங்கள் எனக்கு பதில் அளிக்கும் தன்மையில்லை என்று சிறுபிள்ளைதனமாக சொல்ல மாட்டேன்.
சிங்கப்பூரில் தமிழ்ப்பள்ளிகள் இல்லை. சிங்கப்பூரின் தமிழ்க்கல்வி நிலையை இருவகையாக நோக்கலாம். ஒன்று தமிழ் வழிக்கல்வி: மற்றொன்று தமிழ்மொழிக் கல்வி: முன்னையது தமிழ் பயிற்று மொழியாக இருந்தநிலை: பின்னையது ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் தமிழ் தாய்மொழி நிலையில் பயிலப்பெறும் நிலை.
தமிழ்வழிக்கல்வி – தமிழ்வழிக்கல்விப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகள் என அழைத்தனர். சிங்கப்பூரில் முதல் தமிழ்ப்பள்ளி 1934இல் செயற்படத் தொடங்கியது. 1951இல் ஏறத்தாழ 20 தமிழ்ப் பள்ளிகளில் ஆயிரம் மாணவர் இருந்தனர். இவை அனைத்தும் தொடக்கப்பள்ளி நிலையில் தமிழ்மொழி வாயிலாகப் பலவகைப் பாடங்களைக் கற்பித்து வந்தன.
இந்நிலையில் 1960 இல் உயர்நிலையிலமைந்த தமிழ்ப்பள்ளியாக ‘உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி’ உருவாயிற்று. 1965 ஆம் ஆண்டு முதல் ஆங்கில. சீன ,மலாய்ப்பள்ளிகளின் இறுதிச் சான்றிதழுக்கு இணையாக உமறுப்புலவர் பள்ளி விளங்கியது.
இந்நிலையில் தமிழ் வாயிலாகக் கல்வி பயின்ற மாணவர் எண்ணிக்கை 1968இல் 1843 ஆக இருந்தது. ஆங்கிலத்தின் செல்வாக்குச் சிங்கப்பூர் மக்களிடையே படிப்படியாக வளர்ந்து வலுவுற்றதால் தாய்மொழிவழிக்கல்வி கற்பவர் தொகை குறைந்தது. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன. 1982இல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியும் மூடப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளே சிங்கப்பூரில் இல்லாத நிலை உருவாகிவிட்டது! (இணையத்தளம் கிடைத்தவை)
ஆனால் அது அரசு மொழிகளில் ஒன்றாக இருப்பதால் அது நிலைதுள்ளது.
உங்களை போன்றோரால் இங்கு தமிழ் பள்ளிகள் இல்லாமல் போகும் நிலை உருவாகும். மேலும் உங்கள் குழ்ந்தை தமிழ் மொழியில் அறிவியல் கணிதம் கற்றால் முட்டாள் ஆக மாற்றார்கள். அவர்களின் பன்மொழி திறனும் அதிகமாகும்.
நான் ஆங்கிலம் வேண்டாம் என்று வாதிடவில்லை. தமிழ்வழி கல்வியை அழிக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்பதுதான்.