மாசாயில் இந்து சமயத்திற்கு ஆகமச் சிறுமை! ஆலய நிருவாகத்தினரே முழு பொறுப்பு!!

ஞாயிறு நக்கீரன், ஜனவரி 15, 2018.

ஆன்மிகம் என்பதே இறைநெறியைப் பின்பற்றி நன்னெறியில் வாழத்தான். உண்மை நிலை இவ்வாறிருக்க, அடுத்தவரின் நிலத்தில் அல்லது புறம்போக்கு நிலத்தில் இந்து ஆலயத்தை எழுப்புவது என்ன இறைநெறி, என்ன நன்னெறி என்று புரியவில்லை!

மொத்தத்தில் நிலத்தை வாங்காமல் ஊராரின் நிலத்தில்  வழிபாட்டுத் தலத்தை எழுப்புவதும் பின் கனரக இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளுவதும் உடனே சமய-சமூக முறுகல் நிலை தோன்றுவதும் என்றைக்குதான்  இந்த மண்ணில் முற்றுபெறும் என்று தெரியவில்லை.

அரசியல் சாசனப்படி இந்த நாட்டில் சமய சுதந்திரத்திற்கு முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளன. அதன் அடிப்படையில் மலேசிய மக்கள் இந்து சமயம் உட்பட பல சமயங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர். அந்தந்த சமயத்திற்கும் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ஆனால், இந்து சமய ஆலயங்கள் மட்டும் இப்படி காலமெல்லாம் உடைபட வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது?.

ஓர் ஆலயத்தை அகற்றுவதாக இருந்தாலும் வேறு இடத்திற்கு மாற்றுவதாக இருந்தாலும் அதை ஆகம முறைப்படித்தான் செய்ய வேண்டும். அதுவும், இந்து சமய ஆலயம் என்றால் இன்னும் கூடுதலான சமயக் கோட்பாடுகள் உள்ளன. அப்படி இருக்கும்பொழுது, ஜோகூர் மாநிலத்தில் மாசாய் பட்டணத்தில் உள்ள ஒரு தோட்டப்புறத்தில் இப்படி அதிரடியாக இயந்திரங்களைக் கொண்டு ஆலயத்தை இடித்துத் தள்ளுவதையும் காலணி அணிந்த கால்களுடன் வழிபாட்டு இறை உருவங்களை சிதைப்பதையும் காணும் இந்து பக்தர்களின் மனம் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறது.

இப்படிப்பட்ட நிலை தோன்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஆலயத்தை எழுப்பியவர்களும் அதன் தற்கால நிருவாகப் பொறுப்பாளர்களுமே முழு காரணம். சம்பந்தப்பட்ட ஆலயம் எழுப்பப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரரோ, மூன்றாந்தரப்பினரோ முன்வைத்த சமரத்தை ஏற்றுக் கொள்ளாமல் இங்கேயேத்தான் ஆலயம் இருக்க வேண்டும்; வேற்றிடத்திற்கு மாற்ற மாட்டோம் என்று அடம்பிடித்த பொறுப்பாளர்கள், எப்பாடு பட்டாவது.., எந்த எல்லைக்கும் சென்றாவது அந்த ஆலயத்தைத் தற்காத்திருக்க வேண்டும். தங்களால் அது முடியாத நிலையில், அடக்கமாக அந்த ஆலயத்தை வேறு இடத்திற்கு ஆகம முறைப்படி மாற்றி இருக்க வேண்டும்.

இப்படி எதையும் செய்யாமல், வல்லடித்தனமாக அடம்பிடித்து செயலற்றுக் கிடந்ததால், இப்பொழுது ஆலயம் உடைபடவும் பக்தர்கள் மனம் வேதனைப்படவும் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் அறிக்கை மேல் அறிக்கைவிடவும் என கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நிருவாகத்தினர் ஒதுங்கிக் கொண்டு கமுக்கமாக வேடிக்கைப் பார்க்கின்றனர்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றேவொன்றுதான்; ஆலயப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்குதான் அக்காரணம். அவர்களுக்கு சமயப் பற்று இருந்தாலோ அல்லது ஆன்மிக நெறியில் ஈடுபாடு இருந்தாலோ சமரச முடிவை ஏற்றுக் கொண்டு வேற்றிடத்திற்கு ஆலயத்தை மாற்றி இருப்பார்கள்.

அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் ஒப்புயர்வற்று எங்கெங்கும் நீக்கமற  நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடவும் வணங்கவும் எந்த இடத்திலும் வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம். உண்மை என்னவெனில், ஆலய பராமரிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் பலவகையாலும் அனுகூலம் அதிகாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் சமயத்தைப் பற்றியோ ஆன்மிக சேவையைப் பற்றியோ நிலத்திற்கு பாத்தியப்பட்டவர்களின் எண்ணத்தைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியும் கவலைப் படாமல் அங்கேயே நிலைகொள்ள சண்டித்தனம் புரிந்துள்ளனர்.

இப்படிப்பட்டவர்களை கண்டிக்காமலும் நிந்திக்காமலும் குறைந்தபட்சம் சுட்டிக் காட்டாமலும் ஆலயத்தை உடைத்தவர்களைச் சாடுவதும் திட்டுவதும் என்ன நியாயம் என்று தெரியவில்லை. இத்தகைப் போக்கு தொடர்வதால்தான், ஊராரின் நிலத்திலும் அடுத்தவரின் இடத்திலும் இப்படி வழிபாட்டுத் தலங்களை எழுப்பிக் கொண்டு கொஞ்சமும் மன்ங்கூசாமல் இப்படி குளிர்காய்வோரின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேப் போகிறது.

வேறு எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமாவது இப்படிப்பட்டப் பிரச்சினையை எதிர்நோக்குகிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை நிலை. அப்படியே இருந்தாலும் எங்கேயாவது எப்போதாவதுதான் இப்படி நடக்கும். இந்து சமய வழிபாட்டுத் தலதங்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட அவலமும் நெருக்கடியும் காலமெல்லாம் தொடர்வது ஏன்?

உண்மையான ஆன்மிகப் பணியையோ அல்லது சமயக் கடப்பாட்டையோ இலக்காகக் கொண்டிராமல் பெரும்பாலும் வர்த்தக நோக்கத்தில் இப்படி செயல்படுவோரைக் கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் மலேசிய இந்து சங்கமோ அல்லது மஇகா-வோ முனைப்புக் காட்டாமல், ஆலயம் உடைப்பட்டப் பிறகு மட்டும் வந்து அறிக்கை மேல் அறிக்கை விட்டு என்ன பயன்?  நாங்களும் இருக்கிறோம் என்று அவர்கள் தங்களின் இருப்பை வெளிப்படுத்தத்தான் உதவி புரியுமேயன்றி பயனேதும் விளையப்போவதில்லை.

இதன் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மோகன்ஷான்,  “சம்பந்தப்பட்ட ஆலயப் பொறுப்பாளர்கள் நில உரிமையாளரும் மேம்பாட்டாளரும் முன்வைத்த மாற்றுத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, வேறு இடத்திற்கு அவர்கள்  ஏன் மாறவில்லை என்று தெரியவில்லை” என்று சொல்லி இருக்கிறார். அதை அவர்களிடம் கேட்டு சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. இல்லாவிட்டால் எதற்கு இந்தப் பொறுப்பு?

அத்துடன் மஇகா தேசியப் பொறுப்பாளர்களில் ஒருவரும் மாநிலத் தலைவரும் இதன் தொடர்பில் நில உரிமையாளரையும் மேம்பாட்டாளரையும் சாடியுள்ளனரேத் தவிர, இந்த நிலைக்குக் காரணமான ஆலயப் பொறுப்பாளர்களை விட்டுவிட்டதுடன் கோழி தன் குஞ்சிகளை அரவணைப்பதைப் போல தற்காக்கின்றனர்.

“ஆலய உரிமையாளர் வெளிநாட்டுக்காரர்; மலேசிய மக்களைப்பற்றி அவருக்குத் தெரியாது. அதனால்தான் இப்படி செயல்பட்டுள்ளனர்” என்று  அசோகனும் “ஆலயத்தை இப்படி உடைத்தது இந்து சமயத்தையும் பக்தர்களையும் பொருட்படுத்தாத செயல்” என்று த. மோகனும் சுடச்சுட அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? யார் யார்?? என்பதைப் பற்றி வசதியாக புறந்தள்ளி விட்டனர்.

பாரம்பரியம் மிக்க இந்து சமயத்தை மதிப்பவர்களாகவும் உண்மையான ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் சமய சேவையில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து, அவர்கள் வழிபாட்டுத் தலம் அமைக்க விரும்பினால் அப்படிப்பட்டவர்கள் முதலில் இடத்தைக் கையகப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நிலை இருந்தால், இப்படிப்பட்ட நெருக்கடியெல்லாம் இந்து சமயத்திற்கும் வழிபாட்டு முறைக்கும் எழவேயெழாது!

மாறுவோம்!! மாற்றம் காண்போம்!!!

‘ஞாயிறு’ நக்கீரன்,