ஆகஸ்ட் 31, 1957- இல் மலாயா கூட்டரசு அமைந்தது. பல நாடுகள் இதில் இணைந்தன. இணைந்த நாடுகள் அரசமைப்புச் சட்டம் பெற்றிருந்தன. ஆனால் மலாயா கூட்டரசு எனும்போது அதற்கு அரசமைப்புச் சட்டம் கிடையாது. பொதுவாகவே, 1957ஆம் ஆண்டுவரை மாநில அரசமைப்புச் சட்டம் பேச்சுரிமை, சிந்தனை உரிமை, வழிபாடு உரிமை, போன்ற அடிப்படை உரிமைகளை உறுதிச் செய்யவில்லை. ஆனால், நாடெங்கும் வழிபாடு இடங்கள் இயங்கின. இன, மத துவேஷத்தைக் கட்டுப்படுத்தவும், தண்டிக்கவும் தண்டனைச் சட்டம் இருந்தது. எந்த மதத்தினரும் இகழப்படவில்லை, அவரவர் தங்களின் சமயத்தை, அதன் வழிமுறைகளைப் பேணி வாழ்ந்தார்கள்.
எல்லா சமயத்தினரிடமும் பரஸ்பர புரிந்துணர்வு காணப்பட்டது. எவரும் வழிபாடு இடங்களை தாக்கவில்லை. வழிபாடு இடங்களில் புகுந்து அங்கு இருக்கும் சிலைகளை, பொருட்களை சேதப்படுத்தவில்லை. பிற சமயங்களை இழிவுப்படுத்தவில்லை, அவற்றின் தத்துவங்களைக் கேலி செய்யவில்லை, அவை ஒழிக்கப்படவேண்டியவை என்று சொல்லவில்லை. பிற சமயங்களை மிரட்டவில்லை, அச்சுறுத்தவில்லை. இது 31.8.1957 தேதிக்கு முன் நிலவிய பெருந்தன்மையைக் காட்டியது.
இன்று, கூட்டரசுக்கான அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அது மலேசியாவுக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் வழிபாடு உரிமையைப் பாதுகாக்கிறது. இஸ்லாம், நாட்டின் சமயம் என்றபோதிலும் பிற சமயங்கள் இயங்குவதை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
அறுபது ஆண்டுகள் சுதந்திரம். சுதந்திரத்திற்கு முன்னும் அதற்குப் பிறகு சிலகாலமும் நிலவிய சமரச மனப்பான்மை பட்டுப்போகும் அளவுக்கு ஒரு சிலரின் மனநிலை மாறிவிட்டதானது எதைக் குறிக்கிறது? பெரும்பான்மை சமுதாயத்தில் இருக்கும் ஒரு சிலரின் (இவர்களை சிறுபான்மையினர் என்றும் சொல்லலாம்) போக்கு பெரும்பான்மையினரின் பெருந்தன்மையைக் கொச்சைப்படுத்தி வருவதை நாம் கவனிக்கவேண்டி இருக்கிறது.
கோயில்களை உடைப்பது, கோயில்களுக்குள் புகுந்து அங்குள்ள சிலைகளை உடைப்பது, பொருட்களைக் களவாடுவது, போன்ற நடவடிக்கைகள் பல சமயங்களிடையே புரிந்துணர்வை வளர்க்க உதவாது. மாறாக பாதிக்கும். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த புரிந்துணர்வுக்குச் சவால்விடும் அளவுக்கு இன்று மனநிலை மாறிவிட்டது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும் அல்லவா? அந்த முக்கியப் பணியை யாராவது மேற்கொண்டார்களா? வாயளவில் எதையாவது சொல்லிவிடுவார்கள்; அதோடு நின்றுவிடுவார்கள்.
ஆரம்ப பள்ளிகளில் இருந்து உயர்நிலை பள்ளிவரை ஒரு மதத்தின் அருமை பெருமைகளைப் போதித்து, பிற மதங்களைக் கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சுதந்திரத்திற்குப் பிறகு போற்றி, ஆர்வத்துடன் வளர்க்கப்படும் கொள்கை. அங்கு நடப்பது என்ன? பெரும்பான்மையினரின் சமயமே சிறந்தது, சிறுபான்மையினரின் சமயம் ஒதுக்கப்படவேண்டியது என்ற நஞ்சுகலந்த பகை, வெறுப்பு ஊட்டப்பட்டது, ஊட்டப்படுகிறது.
அப்படிப்பட்ட கருத்துகள் ஊக்குவிக்கப்பட்டன. ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளிகளில் எல்லா இன மாணவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா? அங்கே கவலைக்கிடமான இன, சமய வேற்றுமை வளர்வதை, வளர்க்கப்படுவதை நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். கண்டும் காணாதவர்களைப்போல் நடந்து கொள்கிறோம். என்றைக்கு பிற சமயங்களில் குறை காண்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் அது வெறுப்புணர்வைத்தான் வளர்க்கும். அப்படி வளர்க்கப்பட்ட, ஊக்குவிக்கப்பட்ட கல்விமுறை, பள்ளிக்கூட வாழ்க்கை ஆகியன கோயில் இடிப்பு, சிலை உடைப்பு சம்பவங்களை ஊக்குவிக்கின்றன என்றால் மறுக்க முடியுமா?
ஜொகூரில் நடந்த கோயில் உடைப்பு, அதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஷாஹிட் பிற மதங்களை மதிக்கவேண்டும் என்கிறார். அவர் சொல்வதில் நியாயம் உண்டு. “என் மதத்தை, என் மதக் கருத்துக்களை நீ ஏற்றுக்கொள் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், எனக்கு இருக்கும் வழிபாடு, சமய சுதந்திரத்திற்கு மதிப்பளி என்பேன். அது என் அரசமைப்பு உரிமை”. இப்படிப்பட்ட புரிந்துணர்வு வளர்வதற்கு அடிப்படையாக அமைவது என்ன? எல்லோரையும் மதிப்பது. எல்லா சமயங்களையும் மதிப்பது. மாற்று கருத்து இருக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது.
நான் உன் மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள துணிவு உண்டு, நீ என் மதத்தைத் தெரிந்து கொள்ள துணிவாயா? இந்தக் கேள்வியில்தான் பெரும் வித்தியாசமான மனநிலை வளரந்து பரஸ்பர புரிந்துணர்வுக்கு வித்திடும்.
எல்லா மதங்களிடமும் புரிந்துணர்வு, பிற மதங்களை மதிக்கும் தராதரம் ஆகியவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அந்த குணாதிசயங்களை பாலர் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மனிதனை மனிதனாக மதிக்கும் உயர்ந்த குணம் மிளிரும். பகைமை களைந்து, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணமுடியும்.
அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இல்லாத காலத்தில் சமய புரிந்துணர்வு பரவலாகவே காணப்பட்டது. இன்றோ, அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இருந்த போதிலும் சமய சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு இல்லையே என்ற ஏக்கத்தைப் போக்கவேண்டும்.
எல்லாம் சரி தான். ஆனால் நான் மேலாவன் என்று நினைக்கும் ஒருவனால் கீழானவனின் உயர்ந்தவைகளைப் பற்றி சிந்திக்க மாட்டான். மேலானவனின் வயிறு நிறைந்திருக்கும் வரை அவன் சிந்திக்கும் தனமையை இழந்து விடுகிறான்! அவன் வயிறை காயப்போட வேண்டும்! எப்படி?
நாம் நமது சமயத்தை நன்றாக கற்று உணர்ந்து, கடைபிடித்தால் மற்றவர்களின் ஏளனத்துக்கு உள்ளாக்கபடமாட்டோம். தன் இச்சைக்கு தகுந்தபடி சமய வழிபாட்டையும் வாழ்க்கை முறையும் கடைபிடித்தால்
மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?