வாருங்கள் அரசியலுக்கு.. மாணவர்களுக்கு கமல் அழைப்பு!

சென்னை : நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்ல வரவில்லை என்றும் நீங்கள் வரவேண்டும் என்று சொல்ல வந்துள்ளேன் என்று மாணவர்களை அரசியலுக்கு வருமாறு நடிகர் கமல் ஹாசன் அழைத்தார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கமல் கூறுகையில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்றுதான் சொல்ல வந்துள்ளேன்.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ளுங்கள். நான் தனியாக நிற்க மாட்டேன், நீங்கள்தான் நான். தலைவராக இங்கு வரவில்லை, தலைவர்களை பார்க்கவே இங்கு வந்துள்ளேன். அரசுக்கு மது விற்பதுதான் வேலையா.

உங்களுக்கு கிடைத்த கல்வி பிறருக்கு கிடைக்காவிட்டால் கோபப்படுங்கள். காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரை எனக்கு பிடிக்கும்.

அரசியல் தலைவர்கள் தங்களது ஏழ்மையை மட்டுமே சரி செய்து வருகின்றனர். நேர்மையாக இருக்க முடியுமா என்று கேட்கக் கூடாது, நேர்மையாக இருக்க முடியும் என்று நம்ப வேண்டும்.

சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து வரவேண்டும். கல்வி, சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தண்ணீர் வரவில்லை எனில் அதில் உள்ள அரசியலை அறிய முற்படுங்கள் என்றார் கமல்.

tamil.oneindia.com