ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 31, 2018 – மலேசியாவின் மாண்பிற்கும் பெருமைக்கும் சிறப்பு சேர்ப்பது, காலங்காலமாக இந்த மண்வாழ் மக்கள் போற்றிப் பாதுகாக்கும் இன இணக்கமும் சமய சகிப்புத் தன்மையும்தான். இந்த இரண்டுக்கும் நடுவே அடையாளம் காண முடியாத ஒரு மெல்லிய நெருடலை கடந்த பத்து ஆண்டு காலமாக ஏற்படுத்தியவர் கே.பத்மநாதன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தவர்.
பிள்ளைகள் தந்தையையும் தாயையும் பிரிந்து வாழ வேண்டிய இடர்மிகு துயரை ஏற்பத்திய தந்தை இவர்; வாழ வேண்டிய வயதில் தன் மனைவியை நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்க வைத்த கணவர் இவர்.
தாம்பத்யம் ஒரு சங்கீதம் என்ற திரைப்படத்தை ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்குமுன் பார்த்தேன்.
கலப்பு மணம், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட தம்பதியர்தான் அத்திரை ஓவியத்தின் நாயகனும் நாயகியும். இருவரில் ஒருவர் இந்து, மற்றவர் கிறிஸ்துவர். அவர்களின் மண நாளன்று கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் தன் வாழ்க்கைத் துணையை பெருமாள் ஆலயத்திற்கு அர்ச்சனைத் தட்டுடன் அழைக்க, இந்து சமயத்தைச் சேர்ந்த மற்றவரோ மெழுகு வர்த்தியுடன் தேவாலயத்திற்கு தன் இல்வாழ்வுத் துணையைக் கூப்பிட, அங்கே சலசலப்பு எழுகிறது.
இப்படியே வாயாடி-வாயாடி வாசல்படி வரை வந்த அவர்கள் தங்களுக்குள் வழக்காட ஆரம்பித்ததால் சத்தம் அதிகமாகி கூட்டம் கூடி விட்டது.
கடைசியில் விசாரித்தால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதில்தான் இப்படி மல்லுக்கு நிற்கின்றனர் என்பதை அறிந்த அத்தனை பேரும் இன்பம் பொங்க புன்னகை சிந்தினர். இதுதான், கணவன்-மனைவிக்கிடையிலான இலட்சணம்.
ஆனால், இங்கே மு.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர், தன் மனைவிக்கு பச்சைத் துரோகம் புரிந்துள்ளார். இது, சாதாரண துரோகம் அல்ல; தேசிய அளவில் பிரதிபலித்த பச்சை துரோகம்.
இந்த நாட்டின் நீதித் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் இடையே முறுகல் நிலையையும் அது தோற்றுவித்தது. பத்மநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், ஏதோ ஒரு சூழலில் வேற்று மதத்திற்கு மாற விரும்பியதில் தவறில்லை; அவரின் அந்த விருப்பத்தை மறுக்க எவருக்கும் உரிமை இல்லைதான்.
ஆனால், அத்தகைய உரிமையை அவர் அந்த நேரத்தில் இழந்திருந்தார். காரணம், அப்போது அவர் தனி மனிதரில்லை. அவரை முற்றும் முழுதாக நம்பி ஒரு பெண் வாழ்க்கைப்பட்டிருக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று மக்களைப் பெற்றிருந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் இரு பெண்கள், ஓர் ஆண் என மூன்று பிள்ளைகளைப் பற்றியோ, தன் மனைவி இந்திராவைப் பற்றியோ அவர் கவலைப் படவில்லை. தன் வசதிக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவர், முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற புதுப் பெயருடன் மதம் மாறிவிட்டார்.
“அதற்கு முன்பே அவர் முறையற்ற வகையில்தான் வாழ்ந்து வந்தார்” என்று திருமதி இந்திரா காந்தி, கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குன்றாத நிலையில், செம்பருத்தியுடன் தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். “தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ்ந்த அவர், தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்படும் அளவிற்கு வாழ்ந்துள்ளார். இப்படிப்பட்டவர், திடிரென்று தனக்குத் தெரியாமல் மதம் மாறியதுடன் அன்றி, பிள்ளைகளையும் எனக்குத் தெரியாமலும் மறைத்தும் மதம் மாற்றி விட்டார்”, என்றும் இந்திரா சொன்னது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்பில்தான், புத்ரா ஜெயா உச்சநீதி மன்றத் தலைவர் டான்ஸ்ரீ சுல்ஹிப்ளி அகமட் மக்கினுடின் தலைமையில் டான்ஸ்ரீ ரிச்சர்ட் மாலாஞ்சும், டான்ஸ்ரீ ஜைனுன் அலி, டான்ஸ்ரீ அபு சமா நூர்டின், டான்ஸ்ரீ ரம்லி அலி ஆகிய நால்வர் என ஐவரும் ஒருமுகமாக ஜனவரி 29-ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், வயது குறைந்த பிள்ளைகளை மதம் மாற்றும் பொழுது, தாய்-தந்தை இருவரும் சம்மதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இதற்கிடையில் உயர்நீதி மன்றமும், ஷரியா நீதி மன்றமும் வழங்கிய தீர்ப்புகளால் நிலை குலைந்து விடாமல், நிதானமாக வழக்காடி நீதிமன்றத்தில் ஒரு முத்திரைத் தீர்ப்பைப் பெற்று தேசிய அளவில் சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார் இந்திரா காந்தி. குறிப்பாக, ஒன்பது மாதக் குழந்தையாக இருந்த மூன்றாவது பெண் பிள்ளையை ரிடுவான் அபகரித்த நிலையில், அந்தப் பிள்ளையை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் இந்திராவிற்கு சாதகமாக தீர்ப்பு அளித்தாலும், தேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் சிவில்-ஷரியா நீதிமன்றங்களை காரணம் காட்டி இந்திராவை அலைக்கழித்தது, குறிப்பிடத்தக்கது.
இதைவிடக் குறிப்பிடத்தக்கது, இந்திராவின் முன்னாள் கணவரான ரிடுவானையும் இந்திராவின் பெண் பிள்ளையையும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே அவர் தன் பதவிக் காலத்தை நிறைவு செய்ததுதான்.
பேராக், ஜெலப்பாங்கைச் சேர்ந்த திருமதி மு. இந்திரா காந்தி, தன்னுடைய வாழ்கைப் பயணத்தில் வேலையை இழந்து வேறு வேலையையும் பெற முடியாமல் களைத்து, சோர்ந்து வழக்காடி இந்த வெற்றியைப் பெற்றதில் ஜசெக தேசிய உதவித் தலைவரும் ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரனின் பங்கு மிகமிக குறிப்பிடத்தக்கது.
“வழக்குக் கட்டணமாக ஒரு வெள்ளியைக்கூட குலா பெறவில்லை” என்று மனம் நெகிழ்ந்து செம்பருத்தியிடம் சொன்னார் இந்திரா. பத்திரிகையாளர்களுக்கும் அனைத்து ஏடுகளுக்கும் நன்றி தெரிவித்த இந்திராவின் முகத்தில் ஒரு பெருமிதம் பளிச்சிட்டது.
இந்த சூழலில், இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமது ரிதுவானும், மகள் பிரசன்னா தீக்ஷாவும் மலேசியாவில்தான் இருக்கின்றனர் என்றும் அவர்களை விரைவில் கண்டு பிடிப்போம் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபூசி ஹருண் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்பில் அடுத்தடுத்த நகர்வுகளை நாமும் அடுத்தடுத்து கவனிப்போம்.
ஆனால், ஒன்றை இங்கு மறவாமல் குறிப்பிட வேண்டும். வருகின்ற பொதுத் தேர்தலுக்கும் இந்தத் தீர்ப்புக்கும் எதுவும் உள்ளதா? மதவாத அரசியல் கட்சிகள் இதை எப்படி கையாளும் என்பதையும் அதற்கு அம்னோவின் பதில் என்னவாக இருக்கும் என்பதுதான்.