“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினைகளை ஓரிரு நாள்களில் தீர்க்க முடியாது; ஆனால், தீர்க்க முடியும்; இது நிஜம்” என்று கோலசிலாங்கூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இதை வழிமொழியும் விதமாகத்தான், பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் வரும் பெருநாளில் (பொதுத் தேர்தலில்) தேசிய முன்னணியை இந்தியச் சமுதாயம் முழுவதுமாக ஆதரித்தால், அதற்கான பிரதிபலன் உண்டு என்று பறை சாற்றியுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி, டெங்கிள் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் உரையாற்றிய பிரதமர் நஜிப் மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’ , மலேசிய இந்தியச் சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல் திட்டம் என்றும், இது சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமுதாயத்தை உருவாக்கும் என்றார்.
அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு சார்பற்ற பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தாலும் மானியக் கணக்கை வாசிப்பதுதான் தலைவர்களின் பணி என்றாகிவிட்ட தற்போதைய நிலையில், நாடு விடுதலை அடைந்த நாள் முதல் இன்று வரை அதிகாரக் கட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ம.இ.கா-வால் இன்று இந்தியர்களுக்கு முன்பு உள்ள மானியங்களை விட இப்போது அதிகம் கிடைப்பதற்கான காரணம் 2008-இல் நிகழ்ந்த அரசியல் மாற்றம்தான்.
இருத்தும், இடம் பெயர்ந்த தோட்டப் பாட்டாளிகளின் அவலம், அடையாள ஆவண சிக்கல், வீட்டுடைமைப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைச் சிக்கல்கூட, 60 ஆண்டு சுதந்திர மலேசியாவில் முழுதாக தீர்த்து வைக்க முடியாத சூழலில், இதைத் “தீர்க்க முடியும்; இது நிஜம்” என்று கூறிய பிரதமர், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதைச் செய்யாதது ஏன்?
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு ரிம280, 000 மில்லியன். அதில் ரிம46, 000 மில்லியன் மேம்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை: தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம50 மில்லியன், தெக்குன் திட்டத்தின் கீழ் ரிம50 மில்லியன், செடிக் அமைப்புக்கு ரிம50 மில்லியன் மற்றும் அமனா சகாம் 1 மலேசியா வழி 1,500 மில்லியன் யுனிட்கள் ஒதுக்கப்பட்டு அதில் பங்கு கொள்ள சிறப்பு கடனுதவியாக ரிம500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமனா சகாம் 1 மலேசியா யுனிட்களை வாங்கும் நிலையில் ஏழ்மையில் வாழும் இந்தியர்கள் இல்லை. எம்ஐபி அறிக்கையின்படி கீழ்மட்ட 40 விழுக்காட்டு இந்தியர்களின் சராசரி குடும்ப வருமானம் ரிம 2,672 மட்டுமே. இதில் 227,000 குடும்பங்கள் உள்ளனர். மேலும், இவர்களில் 82 விழுக்காட்டினர் கடனாளியாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இவர்களால் எப்படி இந்த முதலீட்டை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்? பணம் உள்ளவர்கள் மட்டும்தான் இதில் பயனடைய இயலும். இந்த ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு; இதில் பயன் பெருபவர்கள் பணம் உள்ளவர்கள் மட்டும்தான்.
எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அமலாக்கம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 2 விழுக்காட்டு பட்ஜெட் தொகையையாவது, அதாவது ரிம5,600 மில்லியனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதைவிடுத்து சுமார் வெறும் ரிம150 மில்லியனை ‘இந்தியர்கள் என்ற அடையாளத்தில் தமிழ்ப்பள்ளிக்கும், தெக்குன் நிதிக்கும் செடிக்-க்கும் ஒதுக்கீடு செய்துள்ளது வேடிக்கையாகவே உள்ளது.
“மலேசிய இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை ஓரிரு நாள்களில் தீர்க்க முடியாது; ஆனால், தீர்க்க முடியும்”, இது நிஜம் என்ற கூற்றை எப்படிதான் நம்புவது?
ஓரிரு நாள்களில் தீர்க்க முடியாது என்பது நமக்கும் தெரியும், இந்த வருடம் தீர்வுக்கான நிதியை பட்ஜெட் வழி ஒதுக்கீடு செய்யாமல் மீண்டும் நம்மை நம்ப சொன்னால் நம்பி விடுவோம் என்ற நம்பிக்கை அவரிடம் இருப்பது வேடிக்கையாக அமைந்துள்ளது.
போன முறை இதே போன்று 600 மில்லியன் shares அரசாங்கம் இந்தியர்களுக்கு தந்த பொழுது , 75 % shares அந்நியர்கள் வாங்கினார்களே, அதை மறந்து விடடீர்களா ? மீதம் 25 % என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாத நிலையில் , 1500 மில்லியன் ஷேர் எதற்கு ? 13 வது பொது தேர்தலில் “நம்பிக்கை” என்று கூறினீர்களே அதற்கு தும்பிக்கையை முளைத்து விட்ட்து ! 1997 லில் 97 பில்லியன் கடனாக இருந்த ஒரு நாடு , இன்று 697 பில்லியன் கடனில் இருக்கும் பொழுது , எதற்கு shares ? உங்கள் கடனை இந்தியர்கள் அடைக்கவா ? சரி உங்கள் வாதத்திற்கே வருகிறேன் ! ஒரு RM 1000 வெளிக்கு ஷேர் வாங்கினால் என்ன நடக்கும் ? ஒரு தாளில் அச்சிட்டு தருவீர்கள் ! அந்த பணத்தால் அப்போதைக்கு எதுவும் நடக்காது எங்கள் வாழ்வில் ! பிறகு காலப்போக்கில் , நீங்கள் ஒதுக்கிய 500 மில்லியனை நாங்கள் திரும்ப கட்டி அடிப்போம். அதனால் யாருக்கு என்ன லாபம் ? எப்படி பார்த்தாலும் , உடனடி நிவாரணம் என்று எதுவும் இல்லை , பிறகு எதற்கு இந்த திடடம் ?
உண்மைதான் பிரதமர் அவர்களே.. இந்தியர்களின் பிரச்சனைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாதுதான் இருந்தாலும் சில பிர்ச்சனைகளில் நீங்கள் நேரடியாக உங்களின் [பவர் } பிரதமர்க்கான சக்தியை பயன் படுத்தி தீர்வு கண்டிருக்கலாம் குடியுறிமை , அரசு துறையில் வேலை ,கல்வி இட ஒதிக்கீடு இப்படி சொல்லிக்கொண்டு போனாலும் இந்திரா காந்தி பிள்ளைகள் மத மாற்று விசியத்தில் நீங்கள் மவுனம் சாதித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.இன்னொன்று தமிழர்களை ஏமாற்றிய தலைவர் ஒருவரை தொகுதி மக்களே தூக்கி எறிந்து விட்டனர் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர் ஆக்கி அழகு பார்த்துக் கொண்டிருப்பது மக்களுக்கு குறிப்பாக தமிழர்கள் விரும்பவே இல்லை எப்படி இருந்தாலும் அதன் விழைவுகள் தேர்தலில் காணப்போகிறீர்கள்…