முன்பு எப்போதும் இல்லாத அளவு பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் இருவரும் சேர்ந்து இந்து ஆலயங்களில் இறங்கித் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் கோலசிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பத்துமலை கோவில் உரைகள் உலக மகா நகச்சுவையாக இருந்தது என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
வாழ்க்கை என்னும் ஓடத்தைத் தொடக்கும் புது மணத்தம்பதிகள் ஒன்று பட்டு உறுதி பூண்டு ஒரு முன்னேற்ற இலக்கை நோக்கி வாழ்க்கை ஓடத்தை உத்வேகத்துடன் செலுத்த உறுதி எடுப்பது உலக இயல்பு. ஆனால் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாகக்கூடி வாழ்ந்து விட்ட தம்பதிகள் தாங்கள் தேன் நிலவுக்குப் போகிறோம் பின்பு அதைச் செய்யப் போகிறோம், இதை முடிப்போம் என்று கூறினால் அது உலக மகா நகச்சுவையாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இவர்கள் ஆலயங்களில் நடத்திய அரசியல் கூத்து!
பிரதமர் உரையில் குறிப்பிட்டுள்ளபடி ஓரிரு நாள்களில் இவரிடமிருந்து இந்தியச் சமுதாயம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. கடந்த தேர்தலில் இவருக்கு மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கிப் பார்ப்போம் என்ற ரீதியில் வாக்களித்தவர்களை ஏமாற்றி விட்டு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கேட்பதுதான் வேடிக்கை!
மிக எளிதாகத் தீர்க்கக் கூடிய பல விவகாரங்களுக்குத் தீர்வின்றி இழுத்தடிக்கப்பட்டதுடன் இந்தியச் சமுதாயத்தின் வேதனைக் குரல் பாரிசான்– அம்னோ- ம.இ.கா– தலைவர்களால் மேடை தோறும் ஏளனம் செய்யப்பட்டது.
குறிப்பாக, அடையாளப் பத்திரமின்றி நான்காம் தர குடிமக்களாக வாழும் இந்தியர்களின் அவல நிலை குறித்து அக்கறையுடன் கேள்வி எழுப்பியவர்களிடம், எங்கே அந்த மூன்று லட்சம் என்று கிண்டல் செய்யக் காட்டிய ஆர்வத்தை அடையாளப் பத்திரமற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவோ அவர்களின் இன்னல்களைத் தீர்க்க நஜிப்பின் அரசோ, தேசியப் பதிவு இலாகாவோ, மஇகாவோ அக்கறை காட்டவில்லை.
கடந்த தேர்தலுக்கு முன் இந்தியர்களின் பிரச்சனை என்ன? எப்படித் தீர்வு காண்பது என்ற ஒப்பந்தத்தை எவருடனும் கையெழுத்திட்டதாவது பிரதமருக்கு நினைவு உள்ளதா? அதிலும் நீங்கள் கையெழுத்திடவில்லை என்று நழுவி விடுவீர்களா? சரி, அவர் வந்தார், இவர் போனார் என்பது உங்கள் இருவரின் பிரச்சனை.
ஆனால், அவர் குறிப்பிட்டுத் தீர்வு வேண்டியதும், அதனை நம்பி கடந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போட்ட இந்தியர்களுக்கு என்ன பதில்? அந்த உடன்பாட்டில் எதனைத் தீர்த்தீர்கள், எதைச் சாதித்தீர்கள்? அதனைக் கைவிட்ட மாதிரி இனியும் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கைவிட மாட்டீர்கள் என எப்படி நம்புவது என்று கேட்கிறார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மேலும், கடந்த தேர்தலுக்கு முன் காப்பாரிலும், கோல லங்காட், பூலாவ் கேரியிலும் அங்குள்ள தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயின? அதற்கு 5 ஆண்டுகள் போதவில்லையா? சைம்டார்பி மத்திய அரசாங்கத்தின் துணை நிறுவனம். அங்குள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வீட்டுடமை திட்டத்தை அரசாங்கம் ஏன் தோட்டங்களிலும் அமல் செய்யக்கூடாது?
பகாங் மாநிலம், உங்கள் பாரிசான் ஆட்சியில்தானே இருக்கிறது, உங்கள் சொந்த மாநிலத்தில் அதுவும், ம.இ.கா வின் தொகுதியான கேமரன் மலையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் இந்தியர்கள் விவசாயம் செய்யும் நிலத்திற்குத் தானே பட்டா கேட்கின்றனர். அவர்களை 40 ஆண்டுகளாக இழுத்தடிப்பது யார்? உங்கள் கண்களுக்கு அவர்கள் இந்தியர்களாகத் தென்படவில்லையா? அல்லது அவர்களின் அறுவடை இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு, இங்கு விலைவாசி குறைவிற்கு உதவாதா?
இந்தியர்கள் நலன் பற்றி, சமயச் சுதந்திரம் பற்றி பத்துமலையில் பேசும் துணைப் பிரதமர் அவரின் அதிகாரத்திலுள்ள உள்துறை அமைச்சு இந்தியர்கள் விவகாரத்தில் எண்ணற்ற குழறுபாடுகளை செய்து வருவதை அறியாதவரா?
போலீஸ் காவலில் நடக்கும் மரணம், அடையாளப்பத்திரம், குறிப்பாக இந்திரா காந்தி குழந்தை விவகாரத்தில் போலிஸ் படை முன்னாள் தலைவருக்கு ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை?. இரண்டு வித நீதிமன்றங்களின் தீர்ப்பைக் காரணமாக்கி இந்தியர்களின் விவகாரங்களில் குளிர்காயும் வேடதாரிகள் எல்லாம் பத்துமலை முருகன் முன் இந்தியர் நலம் குறித்துப் பேசவே அருகதையற்றவர்கள் என்பதை நாம் அறிவோம் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் .
உங்களின் இந்தப் பத்து ஆண்டுகால ஆட்சியில், அன்னியர்களின் கூடாரமாக இந்நாடு மாறி வருகிறது. தொழில் திறனற்ற துறைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை, போதிய ஊதியமில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு உணவில்லை என்ற நிலையிலிருப்பதை அறிவீர்களா?
உங்கள் ஆட்சிக்காலத்தில் நமது ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாகச் சுமார் 25 விழுக்காடு குறைந்து விட்டது, நாட்டில் உணவு பொருட்களின் விலை விஷம் போல் ஏறிவிட்டது. காரணம் உணவு பொருட்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதே, என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
அரசாங்கத்தின் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையால், பல அன்னிய நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை மீட்டுக் கொண்டு வெளியேறுகின்றன. அதனால் மேலும் பல மலேசியர்கள் வேலைகளை இழந்து வருகின்றனர், அவர்களுக்கு என்ன தீர்வு, அதற்கும் தேர்தல் வரை காத்திருக்க வேண்டுமா?
உங்கள் முதலீட்டுக் கரமாக விளங்கும் 1எம்டிபி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது முறைகேடு, துஸ்பிரயோகம், மலேசிய மக்களிடமிருந்து திருடப்பட்ட செல்வம் மீது பல உலக நாடுகளில் வழக்குகள் உண்டு, அதனால் உங்கள் அரசாங்கத்தைக் கொள்ளையர்கள் அரசு என்று வர்ணிக்கப்படும் பொழுது ஒரு முன்னேற்றகரமான, நயமான, நம்பிக்கையான அரசை உங்களால் எப்படி வழங்க முடியும்? நமது நாட்டுக்கும், நாணயத்திற்கும் எப்படி மதிப்பு கிடைக்கும் என்று கேட்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
தல சுத்துது’பா! ம.இ.கா. காரன் பிழைத்துக் கொள்வான்! அவனுக்கு செனட்டர், அமைச்சருக்கு உதவியாளன், அவனுக்கு மேலே ஒரு வேலை, இப்படியெல்லாம் இருக்கும் போது நம்மைப் பற்றி நாம் தான் கவலைப்பட வேண்டும்! வெகு சீக்கிரம் கமலநாதனும் “இரு மொழித் திட்டம்” என்பது எதிர்கட்சிகள் தான் பரிந்துரைத்தன என்பார்! நாங்கள் செய்ய மாட்டோம் என்பார்!
சார் , அவனுங்க கோவில்ல பொய் சொன்னாலும் , சுடுகாட்டுல பொய் சொன்னாலும் நாங்க அவனை நம்புவோம். ஆனா, உங்களத்தான் ஐயா நம்பமாட்டோம், ஏன்ன நீங்க தமிழன், நாங்க கூடி அடிப்பதும் , கூடி தூத்துவதும் தமிழனத்தான். மற்ற இனத்து கிட்ட எங்க பப்பு வேவாதே?