‘ஞாயிறு’ நக்கீரன, பெப்ரவரி 3, 2018 – ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியவில்லை என்றால், நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற ஒரு தேசிய அமைப்பு எதற்காக என்று பிஎஸ்எம் என்னும் மலேசிய சோசலிசக் கட்சி வினா தொடுத்துள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்டு வரும் தேசிய முன்னணிக்கு மட்டும்தான் நாட்டை தொடர்ந்து வழிநடத்தும் ஆற்றல் உண்டு என்று தொடர்ந்து மார்தட்டி வரும் தேசிய முன்னணி, தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இப்படி அதிகமாக முழக்கம் செய்கிறது. ஆனால், உண்மையில் தேர்தலைக் கண்டு தொடை நடுங்கிக் கிடக்கும் நிலைதான் தேசிய முன்னணியிடம் தென்படுகிறது என்று செம்பருத்தி இணைய ஏட்டிடம் இதன் தொடர்பில் பிஎஸ்எம் தேசியச் செயலாளர் ஆ.சிவராஜன் கருத்து தெரிவித்தார்.
ஏழை நாடான வங்காள தேசம் போன்ற நாடுகளில்கூட சொல்லி வைத்தபடி, அந்தந்த அரசியல் சட்டத்திற்கு ஏற்ப எவ்வித தடுமாற்றமும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கு முறை தேர்தல் நடத்தப்பட்டு, அதன்படி தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்களையும் ஜனநாயக முறையையும் மதிக்கும் விதமாக அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆனால், இங்கு அப்படியா நடக்கிறது?. தேசிய முன்னணி தலைமை என்ன நினைக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் விதாமாக, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு நடக்கும் சப்பாணியைப் போலவும் சவலைப் பிள்ளையைப் போலவும் மலேசியத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தல் 2013 மே 5-ஆம் நாளில் நடைபெற்றது. அதன்படி, இந்தப் பொதுத் தேர்தல் வரும் மேத் திங்கள் 5-இல் நடைபெற வேண்டும். இதில், ஆளும் அரசாங்கத்தின் சில நிருவாக நடைமுறைக்கும் வசதிக்கும் ஏற்ப ஒரு சில நாட்கள் அல்லது வாரக் கணக்கில் முன்னோ அல்லது பின்னோ நடைபெறும்படி முடிவெடுக்கலாம்.
ஆனால், தேசிய முன்னணி ஆட்சியில் அப்படியா நடைபெறுகிறது?. இதோ தேர்தல் வருகிறது; அதோ தேர்தல் வருகிறது என்று ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ‘பாய்ச்சல்’ காட்டி வரும் மலேசிய மத்தியக் கூட்டரசு, இந்த விஷயத்தில் அப்பட்டமாக ஒரு தூண்டில்காரனைப் போல நடந்து கொள்கிறது. ஏதாவது முரட்டு மீன் சிக்கினால்தான் தூண்டிலை நீர் நிலையில் இருந்து மேலே உயர்த்துவது; அதுவரை காத்துக் கிடப்பது என்னும் மனநிலையில் செயல்படும் தேசிய முன்னணி அரசு, இதற்காக பல்லூடக தகவல் சாதனத்தையும் நெறி தவறி பயன்படுத்துகிறது.
ஆர்டிஎம் என்பது அரச வானொலி-தொலைக்காட்சி என்றில்லாமல், தேசிய முன்னணியின் வானொலி-தொலைக்காட்சியைப் போல செயல்படுவதுடன், ‘தேர்தல் நெருங்கி வருகிறது’, ‘தேர்தல் நெருங்கி வருகிறது’ என்னும் பிரச்சாரத்தையும் அறிவிப்பையும் மூச்சுக்கு மூச்சு செய்து வருகிறது. ஆர்டிஎம் அகராதியில் ‘தேர்தல் நெருங்கி வருகிறது’ என்பதற்கான கால அவகாசம் என்னவென்று புரியவில்லை.
இதனால், நாட்டில் நிச்சயமற்ற நிலை தோன்றுவதுடன் சுற்றுலாத் துறை, தொழில்-வர்த்தகத் துறைகளிலும் ஒரு தேக்க நிலை ஏற்படுவதை தேசிய அளவில் உணர முடிகிறது. 1957-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் அரசு செலவழிக்கிறது. கடந்த ஆண்டில்கூட சுமார் 59 மில்லியனை இந்த ஆணையம் விழுங்கிவிட்டது. எழுநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை இந்த ஆணையம் கொண்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அதிகாரப் பூர்வமாக ஏன் அறிக்கை வெளியிடமுடியவில்லை?; அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மேற்கொண்டு வரும் பணியைப் பற்றி நாட்டு மக்களுக்கு ஏன் அறிவிக்கக்கூடாது?
2018 சீனப் புத்தாண்டிற்குப் பின் 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என்று ஊகமான தகவலை கடந்த ஆண்டின் நிறைவுப் பகுதியில் துணைப் பிரதமர் அறித்தார். இப்படி அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்ற வகையிலும் அடுத்தப் பொதுத் தேர்தலைப் பற்றி ஆண்டுக் கணக்கில் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் அரச தகவல் சாதனங்களிலும் தகவல் வெளியாகிக் கொண்டிருப்பது தேசிய முன்னணி அரசின் இயலாமையைக் காட்டுகிறது என்று இதன் தொடர்பில் சிவராஜன் செம்பருத்தியிடம் மேலும் சொன்னார்.