தமிழும் சைவமும் இரு கண்கள் – ந. தருமலிங்கம்

‘ஞாயிறு’ நக்கீரன்  –  சிவ நெறியான சைவ நெறியைப் பின்பற்றும் தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில்தான் பரம்பொருளை வழிபட வேண்டும். சிந்து சமவெளி நாகரிக சான்றின்படி ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இமயம் முதல் குமரிவரை செழித்து துலங்கிய சைவ நெறியைப் போற்றி வழ்ந்த தமிழர்கள், தமிழையும் சைவத்தையும் தங்களின் இரு விழியெனக் கொண்டு வாழ்ந்த நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நிடித்தது.

அந்த செம்மாந்த நிலை மீண்டும் துளிர்க்க வேண்டும் என்று  தலைநகரில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு விழாவில் நிறைவுரை ஆற்றிய ‘சிவனெறி செம்மல்’ ந.தருமலிங்கம் முழங்கினார்.

அண்மைய ஆண்டுகளாக பொங்கல்-தமிழ்ப் புத்தாண்டு விழாவை எழுச்சியுடன் கொண்டாடி வரும் மலேசிய சைவ நற்பணிக் கழகம், இந்த ஆண்டு சற்று காலம் கடந்து விட்டதால் தமிழ்ப் புத்தாண்டு விழாவை மட்டும் வழக்கமான உற்சாகத்துடன், ஆன்மிக இறைநெறியும் தமிழிய சிந்தனையும் மிளிர பிப்ரவரித் திங்கள் 4-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் கொண்டாடியது.

திராவிட இனத்தினர் மொழி வழியாகப் பிரிந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியினர் என தனித்தனி இனத்தினராக வாழும் இன்றைய சூழலில், தமிழர் மட்டும் திராவிடர் என்று சொல்லிக் கொண்டு தமிழிய சிந்தனையை முனை மழுங்கச் செய்வதும் தமிழர் என்று சொல்லிக் கொள்வோரைத் தாழ்வாகக் கருதுவதும் மாற வேண்டும்.

தமிழர்களுக்கு பாரம்பரிய சமய நெறி உண்டென்பது தொல்காப்பியர் காலத்தில் இருந்தே இலக்கியங்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், தத்தம் வாழ்க்கைச் சுழலுக்கு ஏற்ப பரம்பொருளை வழிபட்டுள்ளனர். அந்த வகையில், மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நிலவாழ் மக்கள் முருகனையும் வள்ளியயையும் வழிபட்டனர்.

பிற்காலத்தில் தமிழரின் பண்பாட்டில் ஆரியக் கலப்பைப் புகுத்தியவர்கள் மலாய் மொழியில் ‘pendatang’  என்று வழங்கப்படும் வந்தேறிகளான பிராமணர்கள் ஆவர். இந்த வரலாற்று உண்மையை தமிழர்கள் ஏன் உணரவும் தெளியவும் மறுக்கின்றனர் என்று சைவ நற்பணிக் கழகத் தலைவருமான தருமலிங்கம் வினாத் தொடுத்தார்.

அதனால், முருகன் என்னும் தமிழ்க் கடவுள் சுப்பிரமணியன் ஆனதுடன், தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவது மனம் புரிந்ததாகச் சொல்லி, முருகனுக்கு பூனூலைப் போட்டு தமிழ்க் கடவுளை பிராமணக் கடவுளாக மாற்றினர். இவ்வாறு, தமிழ் வழிபாட்டையும் சிதைத்து புதிய சமயக் கூறுகளைப் புகுத்தி,  தமிழரின் உருவ  வழிபாட்டைவிட அக்னி வழிபாடும் வேள்வி வழிபாடும் உயர்ந்தது என்னும்  நிலையை ஏற்படுத்தினர். இதனால் பன்னிரண்டு திருமுறைகள், 14 மெய்கண்ட சாத்திரங்கள், சைவ புராணம் ஆகியன பின்தள்ளப்பட்டு ஆரிய முறையிலான நான்கு வேதங்கள், சமஸ்கிருத மந்திரம், வேள்வி முறை எல்லாம் இப்போது நம்மை சூழ்ந்துள்ளன.

தமிழ்க் கடவுளை தமிழில் வழிபடாமலும் தானே வணங்காமலும் இன்னொருவரை தஞ்சம் நாடி அவர் சம்ஸ்கிருதத்தில் தனக்காக ஓதுவதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் தலையாட்டிவிட்டு வரும் அவல நிலைக்கு இன்றைய சைவத் தமிழர்கள் ஆட்பட்டிருப்பது குறித்து தமிழர்கள் சிந்திப்பதில்லை.

சைவ நெறியில் பரிகாரத்திற்கும் தர்ப்பணத்திற்கும் இடம் இல்லவே இல்லை. அங்கிங்கினாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வாழும் காலத்திலேயே திருமுறையால் துதித்து சிவனின் பாதம் பணியும் இறைநெறிப் பண்பைத் தொலைத்து விட்டு, உயிர் பிரிந்து வெற்று உடம்பாக மண்ணில் சரிந்திருக்கும்போது தனக்காக மற்றவர் திருமுறை ஓதுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்பதை சைவத் தமிழர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.

தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினால் மற்றவர்கள் ஏன் மல்லுக்கு நிற்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழரிடையே ஒற்றுமை குறைந்திருப்பது-தான் இதற்குக் காரணம் என்று சொன்ன தருமலிங்கம், பெரியவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மரபையும் சிவ நெறியையும் நம் பண்பாட்டையும் சிறு வயது முதலே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டகத்தில் ‘சிவநெறி செல்வி’ஆதிரை வழி நடத்திய இந்த விழாவில் ‘சிவநெறி செல்வியர்’ ஆரணியும் அம்மணியும் முன்னதாக திருமுறை ஓதினர். தொடர்ந்து ‘சிவநெறி செல்வர்’ ஜெ.ராஜ்குமார் திருமுறை இன்னிசை வழங்கினார். தொடர்ந்து ‘சிவநெறி செல்வி’ உமாதேவி ரகுராமன் திருக்குறள் சிந்தனையுடன் ஆன்மிக உரை நிகழ்த்தினார். செல்வி அமிர்தா பரத நடனமும் திருமதி அல்லி நாட்டுப் புற பாடலையும் வழங்கி அரங்கில் திரண்டிருந்தோரை உற்சாகப்படுத்தினர்.

நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்த தமிழிய – சைவ நிகழ்ச்சி மதிய உணவுடன் நிறைவு பெற்றது.