இந்திரா காந்தியின் வழக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதி தேவதையின் அருளைப் பெற்றுள்ளது. இதைப் பாராட்டும் அதே வேளையில் இந்த காலதாமதம் ஏற்புடையது அல்ல. தாமதமாக வரும் நீதி – நீதியல்ல; இதையும் எல்லோரும் உணரவேண்டும் என சாடுகிறார் மூத்த வழக்கறிஞர் சீலதாஸ்
1988 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திருத்தத்தின் வழி, அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு இஸ்லாமிய விவகாரங்கள் உட்படாது எனப்பட்டது.
இதுபல சட்டச்சிக்கல்களை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 1988 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் உயர்நீதிமன்றங்களின் மறுஆய்வு அதிகாரத்தை நீக்கிவிடவில்லை என்றும் கூறினர்.
ஆனால், பிற்காலத்தில் சில உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட உயர்நீதிமன்றங்களின் அதிகாரங்களை வேறுவிதமாக வியாக்கியானம் செய்து இஸ்லாமியர் அல்லாதார் குடும்பச் சட்டத்தில் கடும் குழப்பத்தையும், தீராத சங்கடத்தையும் ஏற்படுத்தின.
அதோடு, பதினெட்டு வயது அடையாத பிள்ளைகளின் இஸ்லாமிய சமய மாற்றம் குறித்தும் சர்ச்சை கிளம்பியது. ஒருதலைப்பட்ச மாற்றம் ஏற்புடையதே என்று சில தீர்ப்புகள் கூறின. இதுவும் பல சிக்கல்களுக்கு காரணமாயின. இவை அன்றி, பதினெட்டு வயது அடையாத பிள்ளைகள் இஸ்லாமிய நிர்வாகச் சட்டத்தின்படி சில நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.
அவற்றை பின்பற்றாதபோது இஸ்லாத்துக்கு மதம் மாறியதற்கானச் சான்று செல்லுபடி ஆகுமா?, என்ற கேள்விக்கும் பதில் தேவைப்பட்டது. இந்த மூன்று பிரச்சினைகளையும் கேள்விகளாக மலேசியாவின் உச்சநீதிமன்றம் தீர ஆலோசித்து இந்திரா காந்தி வழக்கில் 29.1.2018 இல் தீர்ப்பளித்தது.
இதன் வழி பதினெட்டு வயது அடையாத பிள்ளைகளின் மதமாற்றம் குறித்த நீண்ட காலமாக நிகழ்ந்துகொண்டு இருந்த ஓர் அநீதி நீக்கப்பட்டுவிட்டது. நீதி நூல்களில் பவனி வந்த அநீதிக்கு மதிப்பு அளிக்கும் கடந்தகால தீர்ப்புகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதுடன் இந்த நாட்டில் இன்னும் நீதிக்கு இடம் உண்டு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதோடு, 1988 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு உச்சநீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் உயர்நீதிமன்றங்களின் வரம்பற்ற நீதிபரிபாலன அதிகாரத்தை விளக்கின. அவை நியாயமானவை.
ஆனால், ஒரு சிலர் அந்த நியாயமான தீர்ப்புகளை, விளக்கங்களைப் புறக்கணித்தது மட்டுமல்ல சட்டத்தில் இல்லாத, சட்டத்திற்கு புறம்பான, வியாக்கியான மரபுக்குப் புறம்பான விவாதங்களை முன்வைத்து இஸ்லாமியர் அல்லாதார் குடும்ப வாழ்க்கையில், அவர்களின் பிள்ளைகளின் சமய நம்பிக்கையில், கல்வியில் தலையிட்டு பிரச்சினைக்கு வித்திட்டது வேதனைக்குறியதே.
ஷரியா சட்டம் இஸ்லாமிய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டது, அதோடு இஸ்லாமியர்களின் இனமுறைச் சட்டத்தை அது பாதுகாக்கிறது. ஷரியா சட்டத்தை அமலாக்கும் ஷரியா நீதிமன்றங்கள் மாநில அரசால் அமைக்கப்பட்டவை.
அவற்றின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களில் மட்டும்தான் அமலாக்கப்படும். பிற மாநிலங்களில் அதன் செல்வாக்கு பரவ வழியில்லை. ஆனால், பொதுச் சட்டம் எனும்போது அதன் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு; அதன் நீதிபரிபாலன அதிகாரம் மலேசியா முழுவதும் அமலாக்கப்படும் தன்மையைக் கொண்டது. அனைத்துலக ரீதியில் கூட அதன் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படும் அத்தகைய தரம் ஷரியா நீதிமன்றங்களுக்குக் கிடையாது.
அரசு இலாகாக்கள் எடுக்கும் முடிவுகளில் தவறு இருப்பின் அதை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு மட்டும்தான் உண்டு. ஷரியா நீதிமன்றத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கிடையாது.
எனவே, ஷரியா நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே. எனவே, எந்த ஓர் அரசு இலாகாவும் அதன் செயல்முறையில் தவறு தென்படுமாயின் அதாவது சட்டத்துக்கு அப்பாற்பட்டு அல்லது நிர்வாகமுறைச் சட்டத்தைப் பின்பற்றாது நடந்துகொள்ளுமாயின் அந்த முடிவை மறுஆய்வு செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
இறுதியாக, பதினெட்டு வயது அடையாத பிள்ளைகளை ஒருதலைப்பட்ச மதமாற்றம் செய்வதை கூட்டரசு நீதிமன்றம் செல்லுபடி ஆகாது என்று தீர்ப்பளித்துவிட்டது. அதாவது, பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர் மட்டும் தம் பதினெட்டு வயது அடையாத பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மத மாற்றம் செய்ய இயலாது. பெற்றோர்கள், இரு பெற்றோர்களும், பிள்ளைகளின் மதமாற்றத்திற்குச் சம்மதிக்கவேண்டும்.
இந்த வழக்கும் சரி இதுபோன்ற மற்ற வழக்குகளும் சரி அவற்றில் எழுப்பட்ட பிரச்சினைகள் யாவும் தேவையற்றவை. சட்டத்தை, சட்ட வியாக்கியான கருவிகளை முறையே மதக் கண்களோடு பார்க்காமல் நீதி மனசாட்சியோடு பார்த்திருந்தால் இந்திராகாந்தி போன்றோர் அர்த்தமற்ற வேதனைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்.
தவறான வியாக்கியானத்தால் அரசமைப்புச் சட்டம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிள்ளைகளின் மதமாற்றம் குறித்து பலர் வேதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அநீதி நிகழ்ந்துள்ளது. அந்த அநீதி அகற்றப்பட்டுவிட்டது. எனவே, குடும்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து கைவிடப்பட்ட 88A பிரிவை இணைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதை அரசியலாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மனித நேயத்தின் பிரார்த்தனை ஆகும். மற்றுமொரு பிரச்சினையை மனதில் கொள்ளவேண்டியது முக்கியமாகும். இந்திரா காந்தியின் வழக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதி தேவதையின் அருளைப்பெற்றுள்ளது. இந்தக் காலதாமதம் ஏற்புடையது அல்ல. தாமதமாக வரும் நீதி – நீதியல்ல; இதையும் எல்லோரும் உணரவேண்டும்.
சரியான நல்ல விளக்கத்தை தந்துள்ளிர்கள் ஐயா. இந்த வழக்கு 10 ஆண்டுகள் கடந்து நீதி கிடைத்திப்பது மகிழ்ச்சிதான் ஆனாலும் இந்த வழக்கை மனிதாபிமான முறையில் பிரதமர் என்ற நிலையில் அவருக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி இந்த பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்வு கண்டிருக்கலாம் அதை செய்திருந்தால் நஜிப் ஒர் நல்ல சிறந்த பிரதமர் என்கிற பெயரைப் பெற்று மக்கள் வாழ்த்தும் தெரிவித்து இருப்பார்கள்.அவர் எதையும் கண்டுக் கொள்ளமல் போனது நமக்கெல்லாம் வெறுப்பைதான் ஏற்படுத்தியது…