பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுமாம்!

-கி. சீலதாஸ், பெப்ரவரி 26, 2018. 

 

நாம், ஒரு  வரலாற்று  உண்மையை  அறிந்துகொள்ள வேண்டும்.

சீனமொழிக்கு தொடக்கநிலை,  இடைநிலை,  உயர்நிலைவரை  கற்பிக்கும்  வசதிகள்  கொண்ட  சீனப்பள்ளிகள்  நாடெங்கும்  உள்ளன. அவை  சுமார்  நூறு  ஆண்டுகளாக  தொடர்ந்து  இயங்குகின்றன.  இந்தியர்களில்  பெரும்பான்மயைப்  பிரதிநிதிக்கும்  தமிழர்களின்  பொருளாதார  நிலை  தொடக்கப்பள்ளியோடு  நின்றுவிட்டது.

தொழிலாளர்  சமூகத்தைச்  சேர்ந்த  அவர்களால்  இடைநிலை,  உயர்நிலைப்பள்ளிகளை  எழுப்ப முடியவில்லை.  காலனித்துவவாதிகளும்,   தோட்ட  உரிமையாளர்களும்  தமிழர்களை  ஒரு  வட்டத்திற்குள்  வைத்து  கட்டுப்படுத்தினார்கள்.  தமிழர்களோ  தாய்த்  தமிழகத்திற்குத்  திரும்பிவிடும்  நோக்கத்தோடு  வாழ்ந்து  மடிந்தார்கள்  என்றாலும்  தகும்.  ஆனால்  தமிழர்களின்   கிளைச்   சமூகமான  செட்டியார்கள்  நல்ல  பொருளாதார  நிலையில்  இருந்தார்கள்.  நாடெங்கும்  பிரமாண்டமான  கோயில்களை  எழுப்பினார்கள்.  அந்த  கோயில்கள்  சுதந்திரமாக  இயங்கின.  இன்றும்  சுதந்திரமாக  இயங்குகின்றன.  அவர்களுடைய  தமிழ்ப்  பற்று,  தமிழ்  உணர்வு  மீது  கடுகளவு  சந்தேகம்  ஏற்படவழி  இல்லை.  அவர்களின்  தமிழ்மொழி  பற்றும்,  உணர்வும்,  தமிழகத்திலேயே  நின்றுவிட்டது,  மலாயாவில்  அதைக்  காட்டவும் இல்லை.  பெரும்பான்மையான  தமிழ்க்  குழந்தைகள்  உயர்நிலை  கல்விபெற  உதவவும்  இல்லை.  காலனித்துவ  காலகட்டத்தில்  ஒருவேளை அவர்கள் முயன்றிருந்தால்  உயர்வான  தமிழ்க்  கல்வி  பெறுவதற்கான  வசதிகளை  பெற சட்டத்தில்  வகை   செய்திருக்கலாம்.  சீனர்கள்  காலனித்துவ  கஜானவை  நம்பாமல்   தங்களின்  சீனமொழியைக்  காப்பாற்றினர்.  தமிழர்களால்  அப்படி  செயல்பட முடியவில்லை.  இதுதான்  உண்மையான  நிலவரம்.

பாஸ் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கும்

இப்போது, வரும்  14வது  பொதுத்  தேர்தலில்  இஸ்லாமியக்  கட்சியான  பாஸ்  புத்ராஜெயாவைக்  கைப்பற்றினால்  நாட்டில்  தமிழ்  இடைநிலைப்பள்ளிகள்  அமைக்கப்படும்  என்று  அக்கட்சியின்  தலைவர்  டத்தோ  அவாங்  ஹாடி  உறுதி  அளித்தச்  செய்தி  வெளிவந்துள்ளது.

தேர்தல்  காலம்  எனும்போது  அரசியல்வாதிகளுக்குத்  தாராள  மனப்பான்மை  உதித்துவிடுவது  ஒன்றும்  அதிசயமல்ல.  தேர்தலுக்குப்  பிறகு  கொடுத்த  உறுதிமொழிகளை,  உதறிவிடுவதும்  சர்வசாதரணமாக  நடக்கக்கூடியதாகும்.

சுதந்திரத்திற்கு   முன்பு  கூட்டணிக்  கட்சிகள் – அம்னோ,  மசீச,  மஇகா – நடத்தியப்  பேச்சுவார்த்தையின்போது,  குறிப்பாக  துங்கு  அப்துல்  ரஹ்மான் மற்றும் துன்  ரசாக்,  அம்னோ  சார்பில்  தமிழ்,  சீனமொழிகளுக்குப்  பாதுகாப்பு அளிப்பது  பற்றி  சில  வாக்குறுதிகளைத்  தந்தார்கள்.  சுதந்திரத்திற்குப்  பிறகு  நாடாளுமன்றம்,  சட்டமன்றங்களில்  மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு  சீனம் மற்றும் தமிழ்  ஆகிய  மொழிகளை   ஒரு  குறிப்பிட்ட  காலத்திற்குப்   பயன்படுத்த  துங்குவும்,  ரசாக்கும்   இணங்கினர்.  ஆனால்,  லண்டனுக்குப்  போனதும்  அந்த  இரு  தலைவர்களும்  சீன,  தமிழ்மொழிகள்  குறித்த  தங்களின்  உறுதிமொழியை  மாற்றிக்கொண்டதாக  வரலாறு  கூறுகிறது.  காரணம்  அம்னோவில்  இருக்கும்  தீவிரவாதிகளின்  நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள்  தந்த  வாக்குறுதியைக்  காப்பாற்ற  முடியாமல்  போயிற்று  என்பார்கள்.  வாக்குறுதி  தரும்போது  இருக்கும்   மன  உறுதி,  தைரியம்,  அதை  நிறைவேற்ற  முடியாத  போது  கொடுக்கப்படும்  விளக்கங்கள்  ஏராளம்.  காரணங்களை உருவாக்குவதில்  மனம்  தாராளமாகச் செயல்படும்.  அதுபோலவே,  இதுவரை  தமிழ்  இடைநிலைப்பள்ளி  குறித்து  வாயைத்  திறக்காத  பாஸ்  கட்சி  திடீரென  அதற்கு  ஆதரவு  தரும்  என்று  சொல்வது  எப்படி  இருக்கிறது?

இதுவரை இஸ்லாமியர்கள் அல்லாத குடும்பங்களில் இஸ்லாத்துக்கு மதம் மாறியதால் நிலவுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு முன்மொழியப்பட்ட குடும்பச் சட்டங்களைப் பற்றி பாஸ் கட்சி என்ன சொன்னது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒரு கட்டத்தில் பாஸ் கட்சி   கொண்டுவந்த  இஸ்லாமியக்  குற்றவியல்   சட்டத்  திருத்த மசோதாவை   எதிர்த்தால்  நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக வரும்   குடும்பச் சட்டமான   88A  பிரிவை எதிர்ப்போம் என்று சொன்னதை மறக்க முடியுமா? தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்தால்தானே, தமிழ் வாழும். அந்தக் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சட்டச் சூழலைக்  களைய பாஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததை மறக்கமுடியுமா?

இப்போது பாஸ் கட்சி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க ஆதரவு தருவோம் என்பதானது தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளைக் கவருவதற்காகப் போடப்படும் கண்ணி என்றாலும் தகும்.  நம்மவர்  இதை  புரிந்து  கொள்ளாமல்  செயல்படுவது  விசித்திரமே.  கேழ்வரகில் வெண்ணெய் வடிகிறது என்றால் கேட்பாரின் மதி எங்கே போயிற்று என்று கேட்கத் தோன்றும் அல்லவா?