சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போல 70 விழுக்காட்டிற்கும் மேலாக சீன வாக்காளர்கள் நிறைந்துள்ள மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளார் இளம் அரசியல்வாதியான கே. எஸ். பவானி.
மாலிம் நாவார் வட்டாரத்தில் நிலப் பிரச்சினையால்தான் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியக் கூட்டரசும் சரி, மாநில அரசுகளானாலும் சரி; முறையான நிலச் சட்டத்தை இதுவரை வரையறுக்கவில்லை. குறிப்பாக, புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரை அரசுகளின் நிலை என்ன என்பது இதுவரை ஒன்றும் தெரியவில்லை, புரியவில்லை.
சாதாரண மக்கள் விவசாயம் செய்ய முயன்றால் கிடைக்காத நிலம், பெரிய முதலாளிகளுக்கு மொத்தமாக எளிதாகக் கிடைப்பது எப்படி என்று வினா தொடுத்துள்ள செல்வி பவானி, மாலிம் நாவாரில் மட்டுமல்ல; இந்த சட்டமன்ற தொகுதி இடம்பெற்றுள்ள கம்பார் நாடாளுமன்றத் தொகுதி முழுவதிலுமே நிலப் பிரச்சினை ஏராளமாக உள்ளதென்று செம்பருத்தியிடம் விவரித்தார்.
பவானியின் தந்தை கன்னியப்பனும் தாய் சுப்பம்மாளும் ம.இ.கா.வின் தீவிர ஆதரவாளர்கள். 17 ஆண்டுகளுக்கு முன் கன்னியப்பன் மறைந்துவிட, தாயார் இன்றுவரை மல்லிகைப் பூ வியாபாரியாக இருக்கிறார். ஐந்து பிள்ளைகளில் நடுவில் பிறந்த பவானியும் இரு தம்பிகளும் சுப்பம்மாளுடன் வாழ்கின்றனர்.
அண்ணன் தன் குடும்பத்தோடு சிங்கையில் இருக்க, ஆசிரியை அக்காளும் தன் குடும்பத்தோடு தனியாக இருக்க, பவானி தற்பொழுது மலேசிய சோசலிசக் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு முழுநேர அரசியல்வாதியாகி விட்டார்.
கல்வியில் சிறந்த மாணவியான பவானி, அரச நிதி உதவியில்தான் தன் முதல் பட்டப்படிப்பை உளவியல் துறையில் படித்திருக்கிறார். அப்படி, அரச நிதி உதவியுடன் அவருடன் படித்த அத்தனை மாணவர்களுக்கும் அரசாங்க வேலை கிடைத்துவிட, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மட்டும் தனித்து விடப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அப்படி அரசாங்க வேலை கிடைத்திருந்தால், இன்று இந்த பவானியை ஒருவருக்கும் தெரியாமல் போயிருக்கலாம்.
இருந்தாலும், கம்பார் தமிழ்ப்பள்ளி மாணவியான பவானிக்கு ஆரம்பம் முதலே சமுதாய நோக்கம் இருந்திருக்கிறது. அம்மாவின் வேண்டுகோளின்படி சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகாமல், தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்துவிட்டு பிஎஸ்எம் கட்சி மூலம் மக்கள் பணி ஆற்றிய காலக் கட்டத்தில், மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலும் சட்டம் சம்பந்தமாகவும் பெரும்பாலும் வழக்கறிஞரை நாட வேண்டியதாகவும் இருந்துள்ளது.
அப்பொழுதுதான், ஏன் நாமே வழக்கறிஞராகக்கூடாதென்று மீண்டும் வட மலேசியப் பல்கலைக்கழக்த்தில் சட்டம் படித்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில்தான், இரண்டாம் ஆண்டு சட்டக் கல்வியின்போது, ஒரே நாளில் நாளில் நாடு முழுவதும் அறியப்பட்டார் பவானி.
அப்பாவின் பெயரிலும் அம்மாவின் பெயரிலும் உள்ள முதல் எழுத்துக்களை தலையெழுத்தாகக் கொண்டுள்ள பவானி, கடந்த 2013-ம் ஆண்டில் வட மலேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “பல்கலைக் கழக மாணவர்கள் அரசியலோடு நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அரசு இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று பேசி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்
இந்தப் பின்னணியில் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தேர்தலில் இறங்கும்படி இவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ‘புகழுடன் தோன்றுக’ என்னும் வள்ளுவரின் வாக்குப்படியும் முதிர்ந்த பின் வெளிப்பட்டால்தான் முத்துக்கு மதிப்பு; அவசரப்பட்டு வெளிப்பட்டால் மதிப்பிராது என்னும் கருத்தை பொதிய வைத்து ‘முதிரும் வரைக் காத்திரு’ என்ற ஈழத்துப் பாவலர் காசி ஆனந்தன் சொல்படியும் காத்திருந்த பவானி, இப்போது முதிர்ந்து – கனிந்து சமூக வெளியில்-அரசியல் களத்தில் வெளிப்பட்டிருக்கிறார்.
தேர்தலில் இறங்கினால், அந்தத் தொகுதி மக்களுக்கு ஏதாவது பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் படித்துக் கொண்டிருந்த நான் தேர்தலில் களம் இறங்குவது அத்துணைப் பொருத்தமில்லை என்பதால் பதின்மூன்றாவது பொதுத் தேர்தலில் பின்வாங்கிய நான், தற்பொழுது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் முகமாக ஒரு வழக்கறிஞராகி 2016-ஆம் ஆண்டு முதல் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முடிந்த வரை மக்கள் பணி ஆற்றி வருகிறேன்.
மலேசியாவில் என்னதான் அரசியல் முதிர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும் மலேசிய வாக்காளர்களின் உள்ளத்தில், ஆள் பார்த்தும் அணுகூலம் கருதியும் வாக்களிக்கும் எண்ணம் உள்ளது. அப்படி இருந்தும், சீன வாக்காளர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் இந்தத் தொகுதியில் என் சேவையையும் கட்சியையும் நம்பியே களம் காண்கிறேன் என்று பவானி செம்பருத்தியிடம் மனம் திறந்தார்.
போட்டி கடுமையாகத்தான் இருக்கும். சுமார் 29 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்களாகவும் இந்திய வாக்கு வங்கி ஏறக்குறைய 8% என்ற அளவிலும் இருக்கும் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மசீச-வை நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துதான் ஆக வெண்டும். ஆனால், எங்களைப் புறக்கணிக்கும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் களமிறங்கும் ஜசெக-வை மனமின்றி எதிர்கொள்ள வேண்டியுள்ளளது. ஆனாலும், இது தவிர்க்க முடியாது என்றாகி விட்ட நிலையில் போர் வாளை உயர்த்தித்தான் ஆக வேண்டும். இல்லாவிடில களத்தில் புறமுதுகு காட்ட நேரிடும்.
எது எவ்வாறாயினும், மகாபாரதத்து ஏகலைவனைப் போல நான் வெல்வேன். ஆனாலும் ஏகலைவனைப் போல கட் டைவிரலைப் பறிகொடுக்க மாட்டேன். அடுத்தக் களத்திற்கு தேவையல்லைவா என்று போர் முரசம் கொட்டுகிறார் இந்த பவானி!
முப்பதுகளை எட்ட இருக்கும் இந்த மங்கை நல்லாள், வாழ்வின் வசந்த வாசலில் நுழைவதற்குப் பதிலாக தகதகக்கும் அரசியல் களத்தில் நிற்கிறார். அவரை வாழ்த்துவோம்.
-‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 1, 2018.
நம்ம பொண்ணு தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பது எமக்கும் ஆசைதான். ஆனால் அரசியல் கட்சி சார்பாக ஓட்டு போடும் மக்களிடையே கூட்டணிக்கு வித்திடாது பி.எஸ்.எம் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எப்படி?
புந்தோங் சட்ட மன்றத்தில் இரண்டு தவனையாக உட்கார்ந்து கொண்டிருக்கும் திருவளர் சிவசுப்பிரமணியம் தெலுங்கு வம்சாவளி வந்தவர். ஆனால் அரசியலை முன்னிட்டு அவர் பின்னணியை வெளியே காட்டிக் கொள்ளாதவர்.
அவருக்கும் அத்தொகுதி தமிழர் ஓட்டு போட்டு வெற்றி கொள்ள வைப்பது அவரைப் பார்த்து அல்ல அவர் வகிக்கும் கட்சியைப் பார்த்துதான் ஓட்டு போடுகின்றனர்.
இப்படி ஜ.செ.க. கட்சியின் பெயரில் போட்டியிடும் இந்தியரில் தமிழர் எத்தனை பேர் என்று கணக்கெடுத்துப் பாருங்களேன்? அப்புறம் ஜ.செ.க.- யின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும்.
தனிமரம் தோப்பாகாது என்பது பி.எஸ் எம். கட்சி தலைவர்களுக்குத் தெரியாமல் போவது அரசியலில் அவர்தம் முதிர்ச்சியைக் காட்டவில்லை.
பாரதியார் நல்லதோர் வீணை பாடலை மீண்டும் கேளும்மா பவானி, நல்லத்தான் இருந்தீங்க, சிறப்பா ஆரம்பிச்சி-PSM திசை தெரியாமல் போய் கொண்டிருக்கீங்க. உங்களின் மும்முனை போட்டி , நாட்டின் முக்கிய எதிரியின் வெற்றிக்கு வழிவிடும் என்றால். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவாங்க
“புந்தோங் சட்ட மன்றத்தில் இரண்டு தவனையாக உட்கார்ந்து கொண்டிருக்கும் திருவளர் சிவசுப்பிரமணியம் தெலுங்கு வம்சாவளி வந்தவர்.” – என்று தேனீ அவர்கள் எழுதியுள்ளீர்கள் ! திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் , மதிப்பிற்குரிய திரு குலா (DAP) அவர்களிடம் அரசியல் கற்று கொண்டவர். அப்பொழுது நானும் அங்கு இருந்து இதை நேரடியாக பார்த்தவன். நானும் தமிழன்தான் ஆனால் எனக்கு திரு. சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்த தொகுதி தர படத்தில் பொறாமையில் இல்லை ! திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் திரு குலா (DAP) அவர்களின் நம்பிக்கையை பெற்றதனால் அவருக்கு அந்த சட்ட மன்ற தொகுதி வழங்க பட்டது ! இதில் என்ன குற்றம் காண முடியும் ? நான் தமிழனாக இருந்தும், இவர்கள் பக்கத்தில் இருந்தும், சோம்பேறியாக இருந்ததினால் தர பட வில்லை ! திரு குலா அவர்களுடன் இருந்தும் நான் ஒரு வேலையை ஒழுங்காக செய்ததில்லை அரசியலில். திரு. சிவசுப்பிரமணியம் மற்றும் அனைவரும் ஒழுங்காக வேலை செய்ததினால் தர பட்டது. அந்த காலத்தில் நான் மறந்தும் ஜனநாயகத்துக்கு ஒரு குச்சியை கூட நகர்த்தியது இல்லை காரணம் நான்தான் அதில் இளைஞன் என்ற முறுக்கு ! வெறும் தமிழன் என்ற ஒன்றை மட்டும் பார்த்திருந்தால், ஒரு ஆணியையும் அடிக்க முடியாது ! இது என் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது. மதிப்பிற்குரிய திரு குலா (DAP) அவர்கள் என்னையும்தான் சட்டம் படி என்றார் . நான் மாட்டேன் என்று பொறியியல் ஆராய்ச்சி படிப்பிற்கு சென்று விட்டேன். இதனால் திரு. சிவசுப்பிரமணியம் அவர்களின் தெலுங்கு இனத்தின் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும் ? தேனீ அவர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் , இதோ தமிழ் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆலோசனைகளை விமர்சிக்கட்டும். இதோ “பிரித்து வைக்கப்பட்ட பள்ளிகள் ஒற்றுமைக்கு நல்லதல்ல, நஜிப் கூறுகிறார்” https://www.semparuthi.com/159133
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து திரு. குலாவிற்கு பாடம் கற்பித்தவர்தான் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் ஓட்டுப்போடுவது அவருக்காக அல்ல மாறாக அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு என்பதை விளக்கவே அவர்தம் பின்னணியை குறிப்பிட்டது.
பவாணி,உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.முயற்சி திருவினையாக்கும்.துணிந்து நில்
ஐயா தேனீ அவர்களே , “ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து திரு. குலாவிற்கு பாடம் கற்பித்தவர்தான் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்.” என்று எழுதி உள்ளீர்கள் ! திரு. குலா அவர் என்னை அரசியலில் ஏட்றி விடவே இல்லை , தமிழனாக நான் அவர் பேச்சை கேட்க்காமல் ஒதுங்கி கொண்டு வர விளையா ? சம்பளம் வாங்கும் அன்று இருக்கும் மனோ பாவம் , மாச கடைசியில் இருப்பதில்லை ! உங்களுக்கு விளங்கிய பாஷயில் சொல்ல வேண்டும் என்றல் கவுண்ட மணி வசனம் தான் சரிப்பட்டு வரும் : “அமைச்சர் வீட்டுல அமைச்சர் பொண்டாடி அவருக்குத்தான் ஓட்டு போடறாங்கலான்றதே சந்தேகம் தான் ! அப்படி இருக்க ….”