நம்பிக்கைக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள மகாதீர், முன்னர் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது மீண்டும் பதவிக்கு வந்தால் இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்வேன் என்பதெல்லாம் நம்பக்கூடியதல்ல என்று மஇகா தொடர்ந்து மகாதீரை விமர்சித்து வருகிறது. இதில் முதல் பகுதியில் உண்மை உள்ளது, அதை மஇகா ஒப்புக்கொண்டது பாராட்ட தக்கது. அந்த காலக்கட்டத்தில் அந்த விமர்சனத்தை வழங்காதது அதன் மலட்டுத்தன்மையையே புலப்படுத்துகிறது!
மலேசியாவை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மகாதீர் ஆண்டபோது இந்திய சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனைப் போல இப்போது இந்திய சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டு பேசும் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத்தான் பதவியில் இருப்பேன் என்றும் பின்னர் அன்வாருக்கு வழிவிடுவேன் என்றுக் கூறுகிறார். தொண்ணூறு வயதை தாண்டிய மகாதீர்.
மலேசியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் சுகார்னோ. அவர், ஒரு தலைமுறைக் காலத்திற்கு அந்த நாட்டை தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தவர். அவருக்கு அடுத்த படியாக, குறிப்பாக இந்த ஆசியான் என்னும் தென் கிழக்காசிய மண்டலத்தில் மகாதீர் ஒருவர்தான் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்.
அவருடைய ஆட்சிக் காலத்தில், நிர்வாக அடிப்படையில் கெடுபிடிகள் மிகுதியாக இருந்தன; கருத்துச் சுதந்தம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றெல்லாம் சொல்லப்பட்டன. குறிப்பாக, ‘இசா’ என்னும் அவசர காலச் சட்டம் வகைதொகையின்றி பயன்படுத்தப்பட்டது; அதுவும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அச்சட்டம் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்தெல்லாம் எதிர்க்கட்சிகளின் அரசியல் மேடைகளில் அதிகமாக சொல்லப்பட்டன.
இருந்தாலும், அதைப் பற்றி யெல்லாம் அடுப்படியில் முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு மூக்கைச் சிந்தும் மருமகள் மாமியாருக்கு எதிராக முணுமுணுப்பதைப் போலக் கூட எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல், நாடு விடுதலை அடைந்தது முதல் அதிகார நாற்காலியில் ஒட்டிக் கொண்டு அதிகார சுகத்தையும் மானிய வசதியையும் பயன்படுத்திவரும் மஇகா, இந்த அணுகூலங்களை எல்லாம் இதே மகாதீர் காலத்திலும் அப்படித்தான் செம்மாந்து திளைத்து வந்தது.
மகாதீர் நிருவாகத்தில் இந்திய இளைஞர்கள் எத்தனையோ பேர் போலீஸ் தடுப்புக் காவலில் இறந்தனர். அதுபோன்ற சமயத்தில் ஒரு முறையாவது ம.இ.கா. வாயைத் திறந்துதுண்டா? அரசாங்க வேலை வாய்ப்பில் அநியாயமாக இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டது; ‘கோட்டா’ முறையை நடைமுறைப் பயன்படுத்தி தேசிய முன்னணி அரசு, அதேக் கோட்டா அடிப்படையில் இந்திய சமுதாயத்திற்கு உரிய ஏழு விழுக்காட்டு வேலை வாய்ப்பை ஏன் மகாதீர் அரசு வழங்கவில்லை என்று கேட்டதுண்டா?
சாதனைத் தலைவர், சாதனைத் தலைவர் என்று தன் கட்சிக்காரர்களை விட்டு சொல்ல வைத்த மகாதீர் காலத்து ம.இ.கா. தலைவரும், ஏறக்குறைய மகாதீரைப் போலவே நீண்ட காலம் இந்திய சமுதாயத்தின் சார்பில் ஆட்சிக் கட்டிலில் தொற்றிக் கொண்டிருந்தவர். அவரும் சரி, அவரின் பரிவாரங்களும் சரி, என்றைக்காவது இந்திய சமுதாய்த்திற்கு அரச வேலை வாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை; இதைச் சீர் செய்ய வேண்டும் என்று கேட்டதுண்டா? ஆண்டுக் கூட்டத்தில் அவ்வப்பொழுது ம.இ.கா. நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன் விளைந்தது என்பதைப் பற்றி ம.இ.கா.வே எண்ணிப் பார்க்கட்டும்.
அந்த சாதனைத் தலைவரால் இந்திய சமுதாயத்திற்கென்று கேட்டு வாங்கிய டெலிகோம் பங்குகள், மைக்கா பங்குகளின் பலனாவது இந்திய சமுதாயத்தை அடைந்ததா என்பதைப் பற்றி ஒரு ம.இ.கா.வினராவது வாயைத் திறப்பதுண்டா?
அரசியல் தலைமை மூலம், சுமார் 30 ஆண்டுகளில் அந்தத் தலைவர் அடைந்த வளர்ச்சி என்ன? அதே முப்பது ஆண்டுகளில் இந்திய சமுதாயத்தின் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு வெள்ளிக்கு ஒரு வெள்ளி என்று அதுவும் பலவித போராட்டங்களுக்குப் பின் அதையும் அரையும் குறையுமாக திருப்பிக் கொடுத்து கணைக்கை(?)த் தீர்த்ததுதான் ஒரு தாய்க் கட்சியின்-மூத்த அரசியல் அமைப்பின் பங்களிப்பா?
ஆயிரம் வெள்ளியைக் கொண்டு ஒரு தொழில் தொடங்கினால், முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதே ஆயிரம் வெள்ளி மட்டுமே முதலும் இலாபமும் என்றானால் அதற்குப் பெயர் என்ன? சாதனைத் தலைவர், இந்த நலிந்த சமூகத்திற்கு அளித்த இந்தப் பங்களிப்பு பற்றி ம.இ.கா. வாயைத் திறப்பதுண்டா?
எங்காவது ஆலயம் உடைக்கப்பட்டால், இப்போது ஓடோடி குரல் கொடுக்கும் ம.இ.கா., 2008-க்கு முன் வாரம் ஒரு கோயில் (ஹிண்ராப் தகவல்) உடைபட்ட போது தன் நிலைமை எப்படி இருந்தது என்பதைப் பற்றி கொஞ்சம் நடுநிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளிகளில் கணித-அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று மகாதீர் செய்த ஏற்பாட்டைப் பற்றி ஒரு முறையாவது ம.இ.கா வாய் திறந்ததுண்டா? மாறாக, ஒத்தூதும் பணியை அல்லவா பழுதின்றி செய்தது!
இப்படித்தான், வீட்டுப் பிரச்சினை, கல்வி நிலையங்களில் நம் மாணவர்களுக்கான இடச் சிக்கல், வர்த்தக வாய்ப்பு, மொழி (தமிழ்) வளர்ச்சி என்றெல்லாம் எதைப் பற்றியும் மகாதீர் காலத்தில் வாயைத் திறக்காமல், தங்களுக்குண்டான பங்கைப பற்றியும் அதன் பரிவர்த்தனை குறித்தும் மட்டுமே அக்கறைப் பட்ட ம.இ.கா., மகாதீர் முன் கைகட்டி வாய் பொத்தி நின்ற ம.இ.கா., இன்று அவர் அதிகாரத்தில் இல்லை என்பதால் கொக்கரிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
இருந்தபோதும், மகாதீர் காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பொதுவாக சுமூகமாக இருந்தது; பொருட்களின் விலை யெல்லாம் கட்டுப்பாட்டில் இருந்தது; கண்டபடி வியாபார்கள் பொருளின் விலையை ஏற்ற முடியாது. குடும்பத் தலைவிகள் இப்போது திணறுவதைப் போல அப்போது இல்லை என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
என்வே மகாதீர் பற்றிய விமர்சனத்தை மஇகா-வால் வழங்க இயலாது. மகாதீர் காலத்தில் நமது சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணத பட்சத்தில் அது உண்மை நிலையை உணர்ந்தும் ஊமையாக நாடகமாடியது. இரண்டாவது, தற்போது பிரதமர் நஜிப் அவர்கள் இந்தியர் பெருந்திட்டம் வாயிலாக ஓர் உருமாற்றம் செய்யப்போவதாக 172 பக்கங்கள் கொண்ட ஒரு முழுவண்ண அறிக்கையை வெளியிட்டார்.
இது உண்மையானது, நாடகமல்ல இதன் வழி இந்தியர்களுக்கு ஒரு முழுமையான தீர்வு வரும் என்றார். கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடுபடி பார்த்தால், அப்படிப் பட்ட அமுலாக்கம் மிகவும் மேலோட்டமாக இருப்பதும் அதை கொண்ட உருமாற்றம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதும் திண்ணம். நஜிப் கேட்கிற மாதிரி கொஞ்சம் வாயையை திறந்து சத்தமா மஇகா பேச வேண்டும்!
- மாசற்றான்.
அந்தக் காலத்தில் சாமிவேலு ‘சாமியே’ என்று இருந்ததனால் தான் இன்றும் அவருக்குப் பதவி கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்! இப்போது உள்ள ‘தலை’ களுக்கும் அது தான் வேண்டும் என்பதால் ஆடாமல், ஆசையாமல் இருக்கிறார்கள்!