ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோ மாதிரி மஇகாவா?

ஞாயிறு’ நக்கீரன், பெப்ரவரி 5, 2018 – நாட்டில் உள்ள தேசியப்பள்ளிகளிலும் தாய்மொழிவழிப் பள்ளிகளான தமிழ்-சீனப் பள்ளிகளிலும்  கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் இருமொழிக் கொள்கைக் குறித்த சலசலப்பு, ஆதங்கம், பெற்றோரின் அச்சம், மாணவர்களின் ஐயம் கலந்த தடுமாற்றம், தமிழ்மொழிசார் இயக்கங்களின் போராட்டம், கால்நடைப் பயணம், செய்தித் தாள்களில் அறிக்கைப் போர், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு சில பெற்றோரின் ஆதரவு   என்றெல்லாம் ஆண்டுக் கணக்கில் மலேசிய இந்திய சமுதாயம், குறிப்பாக தமிழ்க் குமுகாயம், குமுறிக் கொண்டிருக்க, மஇகா-வோ ‘தேள் கொட்டியதால் கடுப்பது உனக்குத்தானே? எனக்கென்ன வந்தது?’ என்னும் மனப்பான்மையில் கண்டு கொள்ளாமல் இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் அக்கட்சியின் சார்பில் அதன் முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரும் இந்நாள் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவரும் துணை அமைச்சருமான  டத்தோஸ்ரீ மு.சரவணன் இருமொழிக் கொள்கைக்கு எதிராக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதுவும், ம.இ.கா. தலைமையக நேதாஜி அரங்கத்திலேயே நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில்..!

தாமதமாக வந்தாலும் தரமாக உள்ளது என்பதைப் போல, காலங்கடந்து வெளிப்பட்டாலும் மஇகா-வின் கருத்து நறுக்கென்று இருப்பதைக் கண்டு, இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாட்டாளர்களிடையே இன்பமும் எழுச்சியும் எழுந்துள்ளன.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் கற்றுக் கொடுப்பது என்பதை ஏற்றுக் கொண்டால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியர்கள்தான் அந்தப் பாடங்களை ஆங்கில மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; சீனரோ, மலாய்க்காரரோ நாளை நியமிக்கப்பட்டால், அப்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று  நீட்டி முழக்காமல், நச்சென்று கேட்டு அனைவருக்கும் புரியும்படி செய்திருக்கிறார்.

இத்தகையக் கருத்தை தயவு செய்து சரவணன் இன்னொரு முறை சமுதாய நோக்குடன் ம.இ.கா. மத்திய செயலவைக் கூட்டத்தில் பேசினால், இருமொழிக் கொள்கையைப் பற்றி புரிந்தும், அறிந்தும் அல்லது புரியாமலும், அறியாமலும்  அங்கு உட்கார்ந்து இருப்பவர்களும் அக்கரை எடுக்கக்கூடும். ‘ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ பிடில் வாசித்தான்’ போன்ற குற்றச்சாற்றில் இருந்து இவர்கள் தப்பும் வாய்ப்பும் கிடைக்கும்.