– கி. சீலதாஸ், பெப்ரவரி 8, 2018
நம் நாட்டு பெண்கள் வீட்டு வேலைகாரர்களாக பணியாற்றுவதைத் தவிர்க்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை இழிவானதாகக் கருதுகிறார்கள். கணவன், மனைவி இருவருமே பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும்போது வீட்டு வேலைகளைக் கவனிக்கும் பொருட்டு வெளிநாட்டுப் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. வெளிநாடு எனும்போது பிரத்தியேகமாக இந்தோனேஷியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வேலைக்காரப் பணிப்பெண்கள் நம் நாட்டு குடும்பங்களில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இது, ஒருவகையில் நமது அந்தஸ்தை வெளிப்படுத்துவதுபோலவும் அமைந்துவிட்டது எனலாம். இவ்வாறு வீட்டு பணிகளுக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் பெண்கள் மனிதர்களாகவே நடத்தப்படவேண்டும் என்பது அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வோரின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும். வேலை வாங்குபவரிடம் இருந்து எது எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெளிவாக விளக்கப்படவில்லை என்றாலும், பொதுவாகவே, மனிதர்களை எவ்வித கொடுமையான நிலைக்கும் உட்படுத்தக்கூடாது என்பதை விளக்கும் சட்டவிதிகள் ஏராளமாக உள்ளன.
தண்டனைச் சட்டம் சக மனிதர்களைத் துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு இயற்றப்பட்டதாகும். அந்தச் சட்டத்தில் விவரிக்கப்பட்ட கொடுமைகளைச் செய்தால் எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட பணிப்பெண்களை எல்லா மனித நேய பொறுப்புகளுடன் நடத்தப்படவேண்டும் என்பது நியதியாகும். வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்கள் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்பதுபோல் வீட்டு வேலையைக் கவனித்துக்கொள்வோரும் எல்லா பாதுகாப்புகளுக்கும் உட்பட்டவர்களாவர்.
இதுவரையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களின் பாதுகாப்பை விளக்கும் சட்டம் இல்லை என்பதால் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வோரின் கொடுமையான நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல. மத்திய கிழக்கு நாடுகளிலும் பணியாட்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இதை எல்லாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது வீட்டு வேலைக்கு வருவோரின் சுகாதார நிலையில் கவனம் செலுத்தும் நாம், அவர்களின் மனநிலையையும் மதிப்பாய்வு செய்யவேண்டும், காரணம், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் மனோநிலையை அறிந்துகொள்ளவேண்டும். அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தவறான செயல்களில் இறங்கிவிடுவார்களா? குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமல்ல, அவர்கள் குழந்தைகளை விரும்புகிறார்களா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. அதுபோலவே, பணிப்பெண்கள், பொதுவாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோரின் பண வசதியை மட்டும் கவனத்தில் கொள்வது போதாது. அவர்களின் மனநிலையை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப் படவேண்டும். அவர்கள் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வார்களா? பிறரை, குறிப்பாக தங்களை அண்டி வந்தவர்களை, மனிதத் தன்மையோடு நடத்துவார்களா என்பன போன்ற மனப்பாங்கு உடையவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும். அதோடு வேலைக்கு அமர்த்துபவர்களின் மனநிலையை, அண்டைவீட்டாரிடம் இருந்து அறிந்து கொள்வதும் நல்லது. பொதுவாக வேலை வாங்குவோரின் பொது நடத்தைக் குறித்த நற்சான்று உதவலாம்.
இதுவரை வெளிநாட்டுப் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர் என்பது உலகறிந்த உண்மை. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொள்வோரின் மனநிலை. இதில் கணவன், மனைவி மற்றும் யார், யார் குடும்பத்தில் கூடி வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரின் கல்வி, குணம், மனநிலை யாவும் கருத்தில் கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம். பணம் இருக்கலாம், மனிதனை மனிதனாக நடத்தும் பண்பு, மனோபாவம் தேவை. அது அல்லவா முக்கியம்? முதலாளி என்ற தகுதியை அடைய வேண்டுமானால் மிருகக் குணம் உடையவர்களா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது அல்லவா? காலங்காலமாக அடிமை உணர்வோடு வாழ்ந்த சமுதாயம் கொஞ்சம் பொருள்வசதி வந்ததும் தங்களின் கடந்தகால கொடுமைமிகுந்த வாழ்க்கையை மறந்துவிடாமல் அவர்கள் நடத்தப்பட்ட அதே முறையை பின்பற்றுகிறார்களா என்கின்ற சந்தேகம் எழுகிறது. அதுவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா?