தமிழ்ப்புத்தாண்டு

  • கி. சீலதாஸ், மார்ச் 12, 2018.                 

உலகின்  மிகப் பெரும்பான்மையான    சீனர்கள்  ஒரே  தேதியில்  அவர்களின்  புத்தாண்டு  பிறப்பைக்  கொண்டாடுகிறார்கள்.  உலகக்  கிறிஸ்தவர்களும்  ஒரே  நாளில்,   அதாவது  ஜனவரி  முதல்  தேதியை,  புத்தாண்டு  நாளாகக்  கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களும்  குறிப்பிட்ட  ஒரே  தேதியில்தான்  தங்களின்  புத்தாண்டு  நாளைப்  பேணுகின்றனர்.

பொதுவாக,  ஜனவரி  முதல்  தேதியை  புத்தாண்டின்  முதல்  நாளாகாக் கொண்டு  பலநாடுகளில்  விடுமுறையாகப்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  மலேசியாவில்  பினாங்கு,  மலாக்கா,  நெகிரி  செம்பிலான்,  சிலாங்கூர்,  பேராக்,  சாபா  சரவாக்   மாநிலங்களில்   ஜனவரி  முதல்  தேதி  புத்தாண்டு பொதுவிடுமுறையாக  கொண்டாடப்படுகிறது.

இந்தியாவை  எடுத்துக்கொணடால்  பெரும்பான்மை  மாநிலங்கள்  சித்திரை  முதல்  தேதியை  புத்தாண்டாகக்  கொண்டுள்ளன.  தமிழ்  நாட்டை  எடுத்துக்கொண்டால்  தமிழ்ப்புத்தாண்டு  எனும்போது  அரசியல்  கட்சிகளின்   விருப்பப்படி  புத்தாண்டு  நாளைக்  கொண்டாட  வேண்டிய  சங்கடத்தில்  தமிழர்கள்  இருக்கின்றனர்.

முதன்  முதலில்    திராவிட  முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக  1967இல்  பதவி  ஏற்றார்.  தமிழகம்  தனி  அடையாளத்தைக்  காணும்  பொருட்டு  மதராஸ்  மாநிலம்,  தமிழ்  நாடு  என்று  சட்டப்படி  பெயர்  மாற்றம்  கண்டது. பல  சீர்த்திருத்தங்கள்  செய்தபோதிலும்    தமிழ்ப்புத்தாண்டு  குறித்து  எந்த  மாற்றமும்  செய்யப்படாததைக்  கவனிக்க  வேண்டும்.

இருபதாம்  நூற்றாண்டில்  இறுதிவரை  திராவிட  இயக்கங்களான  திமுக,  அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழகம்தான் (அதிமுக)  மாறி,மாறி  தமிழ்  நாட்டு  அரசு  நிர்வாகத்தை  அலங்கரித்தன.  அப்போதெல்லாம்  தமிழ்ப் புத்தாண்டு   தினத்தில்  மாற்றம்  காணவேண்டும்  என்று  எந்த  நடவடிக்கையும்  எடுக்கபப்படவில்லை.   இந்த  நூற்றாண்டில்  ஆரம்பத்தில்  திமுக  ஆட்சியின்போது  தை  மாதத்தின்  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  பிறப்பு  என்று   அறிவிக்கப்பட்டது.

திமுக  ஆட்சியில்  அமலாக்கப்பட்ட  தைமுதல்  தேதிதான்  தமிழப்புத்தாண்டின்  முதல்  நாள்  என்றபோதிலும்  பெரும்பான்மை  உலகத்  தமிழர்கள்  சித்திரை  முதல்  தேதியையே  தமிழ்ப்புத்தாண்டின்  முதல்  நாளாகக்  கொண்டாடினர்.  தை  முதல்  தேதியை  பொங்கல்  விழாவாகக்  கொண்டாடினர்.  அதிமுக  தமிழக  ஆட்சி  பீடத்தில்  அமர்ந்ததும்  சித்திரை  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  முதல்  நாள்  என்று  பழைய  நிலைக்குத்  திரும்பியது.  இதனால்  தைமாத  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  பிறப்பு  என்ற  திமுகழகத்தின்  அறிவிப்பு  இரத்தானது.  இந்த  மாற்றத்தால்  தமிழகத்தில்  புரட்சி  வெடிக்கவில்லை.  மாறாக  கொண்டுவரப்பட்ட   புத்தாண்டு   அவர்களுக்கு  மகிழ்வைத்  தந்தது.  இதுதான்  உண்மை  நிலவரம்.  இந்தப்  புத்தாண்டு  முதல்  தேதி  தகராறு  திமுக  அதிமுக  அரசியல்  கவுரவப்  பிரச்சினையே  அன்றி  மக்களைத்  கவர்ந்ததாகச்  சொல்வதற்கில்லை.

தமிழ் நாட்டில்  காணப்படும்  இந்தப்  புத்தாண்டு  தினப்  பிறப்பைக்  குறித்த  சிக்கல்,  அரசியல்  போட்டாப்போட்டி  பிற  இந்திய   மாநிலங்களில்  கிடையாது.  அதோடு,  பெரும்பான்மை  தமிழர்கள்,  எதிரும்புதிருமாக  இயங்கும்  அரசியல்  கட்சிகள்கூட  ஜனவரி  ஒன்றாம்  தேதியை  வருடப்பிறப்பாக  கொண்டாடுவது  வியப்பல்ல.  அதோடு,  மஹராஷ்திரா,  ஆந்திரா,  தெலுங்கானா,  கர்நாடகா  ஆகிய  மாநிலங்கள்  உகாதியை  வருடப்  பிறப்பாக  கொண்டாடுவதில்  ஒற்றுமை  காண்கிறார்கள்.  கேரளத்தில்  சித்திரை  முதல்  தேதியை,  விஷூ,( பதினான்காம்  தேதி  ஏப்ரல்  மாதத்தில்)  கொண்டாடுகிறது.  எனவே,  அவர்கள்  யாவரும்  ஒரே  தேதியில்  தங்கள்  வருடப்  பிறப்பைக்  கொண்டாடுகிறாகள்.  தமிழர்களோ,  தமிழ்  நாட்டுத்  தமிழர்கள்,  அரசியல்வாதிகளின்  சொந்த  விருப்பத்திற்கு  மதிப்பளிக்க  வேண்டிய  கட்டாயத்தில்  இருக்கிறார்கள்.  இலங்கைத்  தமிழர்கள்கூட  சித்திரை  முதல்  தேதியை  புத்தாண்டாகக்  கொண்டாடுவதில்தான்  மகிழ்ச்சி  என்கிறார்கள்.

தமிழ்  நாட்டிலேயே  தமிழ்ப்புத்தாண்டு  தேதி  குறித்த  குழப்பம்  நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை  இந்த  நாட்டில்  இறக்குமதி  செய்வது  எந்த  வகையில்  நியாயம்?  தமிழர்களின்  அடையாளம்,  தன்மானம்  எந்த  மாதத்தில்  தமிழ்ப்புத்தாண்டு  பிறந்தது  என்ற  வாதத்தில்  அல்ல.  இந்த  நாட்டில்  தமிழர்களின்  அவலநிலை  நாளுக்கு  நாள்  பல்வேறு  மாதிரியான  வடிவம்  பெற்று  நம்மை  துன்புறுத்துவதைக்  கவனிக்காமல்,  தமிழ்  நாட்டு  குழப்பத்திற்கு    இடமளித்து  நம்  தன்மானத்தை  இழந்துவிடக்கூடாது.

எந்த  மாதம்  தமிழ்ப்புத்தாண்டு  பிறக்கிறது  என்பதல்ல  இன்றைய  மலேசிய  தமிழர்களின்  பிரச்சினை.  இந்த  வாதத்தில்  கரிசனம்  காட்டுவோர்  தமிழ்ச்  சமுதாயத்தின்  நலனை  மனதில்   கொள்வது  சிறப்பாக  இருக்கும்.

இந்நாட்டுத் தமிழர்களுக்கு அல்லது பொதுவாக இந்தியர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உண்டு. அது என்னவெனில், தங்களின் அடையாளம் சிறப்புமிக்கதாக இருப்பதோடு, பிறர் மதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவேண்டும். அதுதான் நமது  இலக்காக  இருக்கவேண்டும். தமிழ்நாட்டு அரசியலும்,  அங்குமேவும்  குழப்பமும்,   அங்கு  பரவலாக  தலைவிரித்தாடும்  அநாகரிக அரசியல் போக்கும், அசிங்கமான அரசியல் வழக்கமும்  பின்பற்றுவதற்குத்  தோதானவை  அல்ல.