இருமொழித்   திட்டம்: கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை!

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தை திணிக்க தவறான வழிமுறையைக்  கையாண்ட துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ப. கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் எங்கள் உயிர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 5.2.2018-இல், ‘வணக்கம் மலேசியா’ என்ற தகவல் ஊடகத்திற்கு கமலநாதன் அளித்த பேட்டியில் அவர் பல தவறான தகவல்களை அளித்துள்ளார். அவர் அளித்த தகவல்கள்  பல தமிழ்ப்பள்ளிகள் இருமொழித் திட்டத்தை தவறான புரிதலுடன் கையாள வழி செய்துள்ளது, என்றார் தமிழ் எங்கள் உயிர் குழுவை சார்ந்த தியாகு லோகநாதன்.

இன்று கோலாலம்பூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விளக்கம் அளித்த தியாகு, மேலும் விளக்கமளிக்கையில், கமலநாதனின் மீது எதற்காக இந்த சட்ட நடவடிக்கை என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டார்.

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் போதிப்பதுதான் இந்த Dual Language Programme (DLP) எனப்படும் இருமொழித் திட்டமாகும். தேசியப்பள்ளிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை சீனப்பள்ளிகள் முற்றாக நிராகரிதுள்ள வேளையில், 47  தமிழ்பள்ளிகள் இத்திட்டத்தை அமுலாக்கம் செய்துள்ளன.

அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன், இருமொழித் திட்டதிற்கு அவரது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறார்.  இதனால் தமிழ்வழிக் கல்வி தமிழ்ப்பள்ளிகளில் பலத்த பாதிப்புக்குள்ளாகும் என்பதை அவர் அறிந்திருந்தும் தவறான அவரது பரப்புரையின் வழி இந்தத் திட்டத்தைத்  திணிக்க அவர் முயன்று வருகிறார்.

அவரது பரப்புரையின்படி, ஆங்கிலத்தில் படித்துக் கொடுக்கும் திறமையும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்கள் இருந்தால்தான் இருமொழித் திட்டம் அமுலாக்கம் செய்யப்படும் என்பதை உணர்துள்ள அவர், இந்த அடிப்படையே இல்லாத 47 தமிழ்ப்பள்ளிகளுக்கு இத்திட்டத்தை பரிந்துரை செய்து நடைமுறைபடுத்தியுள்ளார்.

இந்தத் திட்டதிற்கான நான்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்துள்ள கமலநாதன்,  இந்த 47 தமிழ்ப்பள்ளிகளுமே இந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை அறிந்திருந்தும், இத்திட்டத்தை இந்தப் பள்ளிகளில் திணித்துள்ளார்.

அதோடு, அவரது பரப்புரையில் இந்தத் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் ஆசிரியர்கள் 50 முதல் 80 விழுக்காடு வரை தமிழ்மொழியைப் பயன்படுத்தி  இருமொழித் திட்டத்தை கையாளலாம்  என்றும்  இரு மொழிப் பாடத்திட்டம் என்றால் தமிழ்மொழியிலும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற விளக்கங்களை அவர் வழங்கியுள்ளார்.

கமலநாதன் மஇகாவின் வழி, இந்தியர்களின் ஒரு பிரதிநியாக அரசாங்கத்தில் இருக்கிறார். அதன்வழி அவர் நமது பண்பாட்டுக் காப்பகமாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கவும் அவை மேலும் சிறப்பாக செயல்படவும் துணை புரிய வேண்டும். அதை விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு பலத்த மிரட்டலை உருவாகியுள்ள இருமொழித் திட்டத்தை நன்கு அறிந்திருந்தும்  அவரது தவறான பரப்புரையின் வழி அவர் அதை தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க முற்படுவது குற்றம் என்ற அடிப்படையில் அவர் மீது தொடுக்கப்படும் வழக்கு அமையும்.

மேலும் விவரிக்கையில், இதுவரையில், தமிழ் ஆர்வலர்களும், சமூக இயக்கங்களும்  இருமொழித் திட்டத்தை நிறுத்தக்கோரி இதுவரையில் நான்கு மனுக்களை கடந்த  7.2.2017, 19.5.2017, 18.8.2017 மற்றும் 11.12.2017 ஆகிய நாட்காளில் அரசாங்கத்திடமும் கமலநாதனிடமும் வழங்கி உள்ளன. இவை சம்பந்தமாக கமலநாதனின் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும்  கிடைக்கவில்லை, என்றார் தியாகு.

இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் கணியமுதன், அஞ்சாத்தமிழன், தீபன், ருகேந்திரன், பெருமாள், சிவபுண்ணியம், பெரியசாமி, ஜேன், காரிவேந்தன், அன்பு இதயம், முத்தழகன், ஜெயசீலன் உட்பட இன்னும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.