‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 23, 2018 – இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன் பகத் சிங், தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று .. .. மார்ச் 23.
அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போரை நடத்திய மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்த உலகிற்கே ‘சத்தியாகிரகம்’ என்னும் சொற்றொடரையும் அதன் மீதான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர். ஒருவேளை, ஐக்கிய நாட்டு மன்றத்தின் சார்பில் ‘அகிம்சை நாள்’ என்று ஒரு நாள் பன்னாட்டு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டால், அந்த நாளின் அடையாளச் சின்னமாக, நிச்சயம் காந்தியின் உருவம் அறிவிக்கப்படலாம்.
இருபதாம் நூற்றாண்டில் இந்த உலகெங்கும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தொடங்கிய அரசியல் மறுமலர்ச்சியில் அமைதி வழிப்பட்ட அரசியல் போராட்டத்தையும் ஆயுதமில்லா விடுதலைப் போரையும் ஒருசேர மேற்கொண்டவர், மகாத்மா காந்தி அடிகள். விடுதலைப் போர் முனையில்அறப்போராட்டத்தைப் பற்றிய தாக்கத்தையும் சத்தியாக்கிரகம் குறித்த கருத்தாக்கத்தையும் தோற்றுவித்த அண்ணல் காந்தி அடிகள், உலகெங்கும் அதிகாரக் கரங்களை நீட்டியிருந்த இங்கிலாந்து மகாராணியையே ஒரு கட்டத்தில் திடுக்கிட வைத்தார்.
அப்படிப்பட்ட காந்தி, தன்னுடைய அரசியல் பயணத்தில் இரண்டே இரண்டு பேரைக் கண்டு மிரண்டார். அவர்களில் இரண்டாமவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றால் முதலாமவர் ‘தியாக தீபம்’ மாவீரன் பகத் சிங்.
இன்று மார்ச் திங்கள் 23-ஆம் நாள் பகத்சிங்கிற்கு நினைவு நாள். இதே நாளில் 1931-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23-ஆம் நாளில் பகத் சிங் தன் இன்னுயிரை தான் பிறந்த நாட்டிற்காக ஈகம் செய்தார். தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்முன் சிறைஅதிகாரிக்கு எழுதிய மடலில், நான் ஒரு போராட்டக் கைதி என்பதால், என்னை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தார். ஆனால், அதை சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
ஆனால், பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளையும் நேரத்தையும் இர்வின் பிரவுடன் சேர்ந்து உறுதி செய்தது காந்திதான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மார்ச் 24-ஆம் நாள் பொழுது புலரும் வேளையில் காலை 6.00 மணியளவில்தான் பகத் சிங்குடன், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் ஒன்றாக தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்று முடிவாகி இருந்தது. என்ன காரணத்தினாலோ பதினோரு மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது முதல் நாள் பொழுது சாய்ந்த பொழுது 7:00 மணி அளவில் அவசர அவசரமாக மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இதில், காந்தியின் இலக்கு பகத் சிங்குதான்; தவிர்க்க முடியாமல் சுகதேவும் ராஜகுருவும் சேர்த்து தூக்கிலிடப்பட்டனர்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது அவருக்கு 23 வயது; 177 நாட்கள் மட்டுமே; வாழ வேண்டிய வயதில் நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து இரவல் கொடுப்பதைப் போல அவராகவே முன்வந்து ஆங்கிலேய போலீசாரிடம் கைதாகி, வீர பாண்டிய கட்ட பொம்மனைப் போலவும் மருது சகோதரர்களைப் போலவும் தூக்குக் கயிற்றை அரவணைத்தார் பகத்சிங்.
இலட்சக் கணக்கான இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும் வழிகாட்டும் தளபதியாகவும் திகழ்ந்த பகத் சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும் முன், அவரின் முகத்தை கறுப்புத் துணியால் மூட முயன்றவர்களைத் தடுத்த பகத் சிங், என் விழிகளால் கடைசி வினாடிவரை என் தாயகத்தைக் காண விரும்புகிறேன் என்று சொன்னாராம். எத்துணை நெஞ்சுரம் இந்த பகத்சிங்கிற்கு?
பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய குடும்பத்தில் தோன்றிய பகத் சிங்கின் இரத்தத்தில் இயல்பாகவே விடுதலை வேட்கை கலந்திருந்தது. தன் பிறந்த நாளான 1907, செப்டம்பர் 28-ஆம் நாளின் அவரின் அப்பா கிசன் சிங்கும் இரு சித்தப்பாமாரும் விடுதலை அடைந்து வீட்டிற்கு வந்தனர். விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை அனுபவித்த வந்தனர் அம்மூவரும்.
1919-ஆம் ஆண்டில் ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின்போது, பகத் சிங்கிறகு வயது 12. படுகொலைக்குப் பின் இரண்டு நாள் கழித்து அங்கு சென்ற பகத் சிங், இரத்தக் கறையில் சிவந்திருந்த மண்ணை ஒரு கண்ணாடிப் புட்டியில் எடுத்து அடைத்துக் கொண்டு, அதைப் பார்த்து பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக சபதம் புரிந்தாராம்.
ஐரோப்பிய புரட்சி வரலாறுகளையும் புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இடைவிடாமல் படித்துக் கொண்டு, நெஞ்சில் உரமேற்றிக் கொண்டிருந்த பகத் சிங்கிற்கு மணம் முடிக்க அவரின் பெற்றோர் முயன்ற பொழுது, கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாராம் பகத்சிங்.
அந்த நேரத்தில், காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்திலும் ஒத்துழையாமைப் போராட்டத்திலும் தீவிர பங்கு கொண்டிருந்த பகத் சிங், “என் வாழ்க்கை தேச விடுதலைக்காக அர்ப்பணிக்க உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், வேறு எந்த வாழ்வியல் சிந்தனைக்கும் என் சிந்தையில் இடமில்லை” என்று தெளிவாக அம்மடலில் குறிப்பிட்டிருந்தார் பகத் சிங்.
காரல் மார்க்சின் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்த பகத் சிங், நாடு விடுதலை அடைந்து, அதிகாரமும் பண பலமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருக்கும் நிலை தொடருமானால், நாமெல்லாம் போராடி விடுதலையைப் பெறுவதில் பயனில்லை. அதற்கு ஆங்கிலேயரே நீடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார். சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் சக வாழ்வும், சம வாய்ப்பும் பொருளாதார சம நிலையும் பொதுக் கல்வியும் வேண்டும் என்று விரும்பினார் பகத் சிங்.
பஞ்சாபிலும் ஹிந்தி, உருது மொழிகளிலும் தேர்ந்திருந்த பகத் சிங், ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரை எழுதுவதில் தேர்ந்த அவர், பேச்சாற்றலிலும் வல்லவர். பல அமைப்புகளை உருவாக்கி வழி நடத்திய அவரின் பின்னால், இலட்சக் கணக்கான இளைஞர்கள் அணி திரள்வதைக் கண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பகத் சிங்கை எப்படி மடக்குவது, ஒடுக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனராம்.
இந்த சந்தர்ப்பத்தில்தான், அந்த சம்பவம் நேர்ந்தது. ‘சைமன் குழு’வை எதிர்த்து, அமைதி வழியில் போராடிய லாலா லஜ்பதி ராய் என்ற தலைவரை, ஜேட்ஸ் ஏ ஸ்காட் என்ற ஆங்கிலேய அதிகாரி அடித்தே கொன்றிருக்கிறான். அவனைப் பழி தீர்க்க ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை துணை கொண்டு பகத் சிங் களத்தில் இறங்கியபோது, தவறுதலாக அடையாளம் காட்டப்பட்ட சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு மூவரும் தப்பிக்கின்றனர்.
இதே சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிரமாகப் போராடினர். இதை ஒடுக்க ‘தொழில் தகராறு சட்ட வரைவு’ என்ற பெயரில் புதிய கடுஞ்சட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்திய பிரிட்டீஷ் அரசு. தலைமறைவாக இருந்த பகத்சிங், இந்தக் கொடுமையான சட்டத்தை எதிர்க்கவும் இந்திய இளைஞர்களின் சார்பில் கருத்தை நீதி மன்றத்தின் வாயிலாக எடுத்துரைக்கவும் அந்தக் கால நாடாளுமன்றக் கட்டடத்திற்கு (சென்ட்ரல் அசெம்பிளி ஹால்) வெளியே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டு, காவலர்கள் தங்களைக் கைது செய்யும்வரை காத்திருந்தனர்.
இப்படி கைது செய்யப்பட்ட பகத் சிங்கை, முறையாக விசாரிக்காமல் அவரை அழிப்பதிலேயே ஆங்கில ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர். 63 நாட்கள் சிறையில் இருந்த அவரை, அவசர அவசரமாக தூக்கு மேடைக்கு அழைத்தபோது, பகத்சிங் கொஞ்சம் அவகாசம் கேட்டாராம். அப்பொழுது, இரஷ்ய கம்யூனிசத் தலைவர் லெனினைப் பற்றிய போராட்ட வாழ்க்கை வரலாற்று நூலை ஆர்வம் பொங்கப் படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங்.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது சரித்திரம், ஒரு பாடம். இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது பகத்சிங்கின் வாழ்க்கை. விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி அவர். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஓர் இலக்கணம்.