ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 30, 2018.
நாட்டில் நூற்றுக் கணக்கான தமிழ் தொடக்கப்பள்ளிகள் இருக்கும் நிலையில், ஒரேவோர் இடைநிலைப்பள்ளிகூட தமிழ் மொழிக்காக அமைவதில் தேசிய முன்னணி அரசு ஏன் இப்படி தடை போடுகிறது என்று தெரியவில்லை!
வெகு அண்மைக் காலம்வரை, இந்தச் சிக்கல் நாட்டின் வடபுலத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது இந்தப் பிரச்சனை நாட்டின் மையப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
ஹிண்ட்ராஃப் எழுச்சியைத் தொடந்து, இந்திய சமுதாயத்தினருக்கு துணை முதல்வர் பதவி, சட்டமன்ற அவைத் தலைவர் பதவிகள் எல்லாம் கைகூடினானும், தமிழ் இடைநிலைப்பள்ளி மட்டும் இன்றைய நாள்வரை எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது.
இதற்காக மாநில அரசுகள் என்னதான் பாடாற்றினாலும், அது குறித்து இறுதி முடிவெடுப்பதும் கிடப்பில் போடுவதும் மறுப்பதும் மத்திய அரசிடம் இருப்பதால்தான், தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான கட்டமைப்பு குறித்து மாநில அரசால் ஒரு கட்டத்திற்கு மேல் நகரமுடியவில்லை.
இடமும் கொடுத்து, கட்டடமும் கட்டித் தருகிறோம். எங்களுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான உரிமமும் அங்கீகாரமும்தான் வேண்டும் என்று பினாங்கு மாநில அரசின் சார்பில் பல முறை சொல்லிப் பார்த்தனர். கண்டுகொள்ளாத, மத்திய கூட்டரசின் கல்வி அமைச்சர் ஒரு கட்டத்தில் நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மலேசிய அரசியல் சாசனம் இடம் தராது என்று சொல்லிவிட்டார்.
அரசியல் சாசனம் என்னவோ சுயம்புவாகத் தோன்றியதைப் போலவும் அதில் மாற்றமோ திருத்தமோ செய்ய முடியவே முடியாது என்பதைப் போலவும் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் சொன்னதில் இருந்து, தேசிய முன்னணி அரசுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைவதில் கடுகளவும் விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது.
தற்பொழுது, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிலாங்கூர் மாநில அரசு சார்பில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை ஆளும், எதிர்க்கட்சி அரசு இப்போழுது தேர்தல் நெருங்கி வரும் தருவாயில் இதைப் பற்றி பேச முற்படுவது, அரசியல் காரணமாகவும் இருக்கலாம்.
இருந்தாலும், தேசிய முன்னணி அரசு இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் மலேசியாவாழ் தமிழ்ச் சமுதாயத்திர்கு வேதனையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ம.இ.கா.வினரும் தமிழ் இடைநிலைப்பள்ளியைப் பற்றி எந்நாளும் வாய்த் திறப்பதில்லை என்பதும் அது ஏன் என்பதுமே கேள்விக் குறியாக உள்ளது.
காலமும் நாளைய அரசியலும் இதற்கெல்லாம் விடை சொல்லக்கூடும். பொறுத்திருப்போம்.
‘இவர்கள்’ இருக்கும் வரை இது ஓர் பகல் கனவு. வாருங்கள் எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணி பகல் கனவு காண்போம்.
தமிழ் இடைநிலைப்பள்ளி?!
எதிர்கட்சியினர் அரசியல் நோக்கத்திற்காக இதனைப் பயன்படுத்துகின்றனரேயொழிய தமிழ் மொழி வளர வேண்டுமென்ற ஆர்வத்தினால் அல்ல.
தேசிய இடைநிலைப் பள்ளி என்றாலே அதில் அரசாங்க கல்விக்கொள்கைக்கு உட்பட்ட பாட திட்டங்கள் இருக்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கைக்கு அப்பாற்பட்ட சீன தனியார் பள்ளிகள் போன்ற அமைப்பு என்றால் அப்பள்ளிகளில் கொடுக்கப்படும் கல்விச் சான்றிதழ்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாது. இத்தகைய கல்வி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு நம் மாணவர் பட்டம் மட்டும்தான் விட முடியும்; வேலை கிடைக்காது.
இவ்விரண்டில் எதிர்கட்சியினர் முன் வைக்கும் இடைநிலைத் தமிழ் பள்ளி என்பது நடுவண் அரசாங்க கல்வி அமைச்சு ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டிய தேசிய தமிழ் இடைநிலைப் பள்ளியாகும்.
இன்றைய நிலையில் ஆரம்பத் தமிழ் பள்ளியில் படித்த இந்திய மாணவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரே தேசிய இடை நிலைப்பள்ளியில் ஆட்டு மந்தையைப் போன்று போட்டு அடைக்கின்றனர் மாவட்ட கல்வி இலாக்காவினர். அத்தகைய இடைநிலைப் பள்ளிகளில் 90 முதல் 95% மாணவர் இந்திய மாணவரே படித்தும் வருகின்றனர். அத்தகைய சில தேசிய பள்ளிகளில் தலைமையாசிரியர் தமிழர். நம் மாணவரிடையே தனிப்பட்ட முறையில் பேசும்பொழுதும் தமிழிலும் பொதுவில் பேசும்பொழுதும் மலாய் மொழியிலும் பேசுகின்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமும் பகுதி தமிழில் நடத்தப்படுகின்றது.
இத்தகையப் பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு பாடமாக பள்ளி நேரத்திலேயே போதிக்கப் படுகின்றது. பயிற்சிப்பெற்ற தமிழ் ஆசிரியர்தான் மாணவரைப் பயிற்றுவிக்கின்றார். ஆனால் PT 3 & SPM தேர்வில் தமிழ்மொழியை ஒரு தேர்வு பாடமாக எடுப்பவர் 30 மாணவர்களுக்கு மேல் போவதில்லை! ஏன் இந்நிலை?
இடைநிலைப் பள்ளிக்குச் சென்றவுடன் ஆரம்பத் தமிழ்ப்பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர் மட்டும் தமிழ் மொழியை மேற்கூறிய தேர்வுகளில் ஒரு பாடமாக எடுத்தால் போதுமென்று இடைநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியரே எழுதாத சட்டம் போடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? இப்படி நன்கு படித்து தேர்ச்சி பெறக்கூடிய மாணவர் மட்டும் தேர்வில் அமர்ந்தால் அந்தப் பள்ளியில் தமிழ்பாட தேர்ச்சி விகிதம் 100% காட்டும். இதனால் அப்பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் கிட்டும்!
தமிழ் பள்ளியிலிருந்து சென்ற 95% மாணவர்களும் மேற்கூறிய தேர்வில் தமிழை ஒரு தேர்வு பாடமாக எடுக்காததின் காரணம் என்ன?. இப்பெற்றோரில் பெரும்பாலோரின் தமிழ்ப் பற்று என்பது ஆரம்பப் பள்ளியோடு முடிந்து விடுகின்றது. அதற்கு மேல் தத்தம் பிள்ளைகள் தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமென்ற நல்மனத்தோடு நின்று விடுகின்றனர். தமிழ் மொழி இலக்கண இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டுமென்பது இப்பெற்றோருடைய விருப்பமாகத் தெரியவில்லை. அப்புறம் எதற்கு பொய்யாக தமிழ் இடை நிலைப்பள்ளியை வேண்டுகின்றீர்?
சும்மா எழுதத் தெரியுமென்பதால் எழுதுவதல்ல கட்டுரையோ அல்லது கருத்தோ. அவ்வாறு எழுதும்பொழுது செயல்முறையில் என்ன நடக்கின்றது என்பதையும் கீழ் மட்டத்திற்குச் சென்று அறிந்து கொண்டு எழுதுவதானது நம் மக்களுக்கு நன்மை தரும்.
ம.இ.க. அரசியல் கட்சி. ஆளும் கூட்டணியில் ஊறுகாய் போன்றது. வேண்டும்பொழுது அமீனோவினர் நக்கிக் கொள்ளவார். அப்புறம் தள்ளிவிடுவார். இந்த ஊறுகாய் கட்சியும் வேறுவழியின்றி மானமிழந்து பெயர் போட்டு வருகின்றது. அப்புறம் அந்த கட்சி தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியும்? அந்த கட்சியில் உள்ள பெரும்பாலான தமிழருக்கே இன்று தமிழ் பேச்சு மொழியே ததிகினத்தோம் போடுகின்றது. அப்புறம் இக்கட்சியா தமிழை வளர்க்கப் போகின்றது? இந்நாட்டில் தமிழை வளர்க்க வேற்று வழிகளைக் கண்டு எழுதவும். அதைப்பற்றி சிந்தித்து நல்லதொரு கருத்தாடலாம்.
தமிழ் இடைநிலை பள்ளி என்பது வெறும் அரசியல் தலைவர்கள் முடிவு செய்வது மட்டுமல்ல ! மாறாக ,கல்விமான்களும் தெரிந்தவர்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய விஷயம் ! தமிழில் உயர்நிலை பாட திட்டங்கள் தேவை எனவே ஆசிரியர் பெருமக்களும் இந்த விஷயத்தில் அக்கறை கொள்ள வேண்டும். இந்தவிஷயத்தில் தமிழ்நாட்டு தமிழர்கள் நமக்கு வழிகாட்டலாம். சரி உதாரணங்கள் தருகிறேன் புரிந்து கொள்ள! இயற்பியல் என்பது உயர்நிலை பள்ளிகளுக்கு இரண்டாக பிரியும் . முதலாவதாக theoretical physics மற்றும் experimental physics . மலேசியாவில் இந்த experimental physics தான் SPM மற்றும் STPM பாடத்திட்டங்களில் உள்ளது ! இருப்பினும் experimental physics எல்லாப்பள்ளிகளிலும் நடத்த முடியாத காரணங்களால் , experimental physics சையே நாம் theoretical physics சொல்லி தருகிறோம் . நான் கூட காஜாங் ஸ்ரீமுருகன் நிலையத்தில் , இந்த experimental physics சை பொம்மை பொருளாக்களை வைத்து செய்து காட்டி 10 வாரம் MIND MAPPING வகுப்புக்கள் எடுத்துள்ளேன் ! இதில் ஒளி கதிருகளை வளைப்பது , எப்படி இரண்டு வெவ்வேறு இடைகொண்ட பந்துக்களை ஒரே அளவில் புவியீர்ப்பு கொண்டு ஒரே நிலையில் இயங்க செய்வது , சூரியனை சுற்றும் பூமியை எப்படி நிலவு சுற்றுகிறது, காந்தவியல் மற்றும் மின்னியல் தொடர்புடைய காற்றலைகளை செய்து அதன் தன்மைகளை கண் கூடாக பார்ப்பது என்று நிறைய செய்து மாணவர்களுக்கு சொல்லி தருவோம் . இவ்வகை பாடங்கள் நிறைய தமிழில், தமிழ் நாடு தொலைக்காட்சியிலே காட்டுவார்கள் . இருப்பினும் நிறைய கடினமான சொற்கள் நமக்கு இந்த அறிவியலில் இல்லாததனால் , இரண்டு மொழி , அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயில வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி பயிலும் மாணவர்கள் , மேற்கல்வி பயில செல்லும் பொழுது பொறிரியல் துறையில் சுலபமாக புரிந்து கொள்ளலாம் ! இப்படி நிறைய TECHNICAL PROBLEM இருப்பதால் , ஒரு 2 ஆண்டு இவைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து விட்டு , பிறகு ஆரம்பிக்கலாம் ! மேலும் கடினமான பாடங்களை சொல்லி தரும் ஆசிரியர்களும் , தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் ! எனவே இதனை செயல் படுத்த கால தேவை உள்ளதால் , இதனை வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் பேசாமல் , ஒரு BLUEPRINT செய்தால் , முதல் செயல் நிலை அடைவு கிடைத்து விடும் !