ரஜினிகாந்த் பா.ஜனதா பக்கம் சாய்கிறார் – சீமான், பாரதிராஜா கண்டனம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது அண்ணாசாலையில் திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் செந்தில்குமார் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ரஜினி, சீருடையில் இருந்த போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்முறையின் உச்சம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அவர் கண்டிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலை தளங்களிலும் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை சார்பில் டைரக்டர் பாரதிராஜா மற்றும் மணியரசன், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, டைரக்டர்கள் கவுதமன், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்துவிட்டன. அது வன்முறை அல்ல. ஆனால் அதனை ரஜினிகாந்த் வன்முறையின் உச்சக்கட்டம் என்று வர்ணித்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்பான போராட்டத்தின்போது கர்நாடகாவில் தமிழக லாரி டிரைவர்கள் தாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் கண்டன குரல் எழுப்பினாரா? அது அவருக்கு வன்முறையாக தெரியவில்லையா?

கூடைக்குள் இருப்பது பூ என்று நினைத்திருந்தோம். அது பூ நாகமாக தெரிகிறது. ரஜினி வாயை மட்டும் தான் அசைக்கிறார். அவருக்கு யாரோ டப்பிங் பேசுகிறார்கள்.

ஆந்திராவில் சீருடை அணிந்த போலீசார் தமிழர்களை சுட்டுக்கொன்ற போதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக போலீசார் வாகனங்கள், குடிசைகளை எரித்ததெல்லாம் வன்முறை இல்லையா? அதுபோன்ற சம்பவங்களை ரஜினி ஏன் கண்டிக்கவில்லை.

உணர்வோடு நடந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் ரஜினிக்கு ஏற்பட்டது ஏன்? வன்முறையின் உச்சக்கட்டம் என்கிற அவரது கருத்துக்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை வாழ்த்து சொல்கிறார். இதில் இருந்தே அவர் பா.ஜனதா பக்கம் சாய்வது தெரியவில்லையா? உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊமையாக இருந்தவர்கள் கருத்து சொல்ல தகுதி இல்லாதவர்கள். பொழுது போகவில்லையென்றால் இமயமலைக்கு போய் விட்டு வாருங்கள். ரஜினிகாந்த் முழு அரசியல்வாதியாகி நடக்கட்டும். அப்போது அந்த நடையில் எங்கு ஊனம் உள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்து சொல்கிறோம்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தமிழகத்துக்கு துரோகம் செய்து கொண்டுள்ளனர். சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும். அவரை கைது செய்வதாக இருந்தால் எங்களையும் சேர்த்துதான் கைது செய்ய வேண்டும்.

எங்களது போராட்டம் எதிர்கால சந்ததியினருக்கான போராட்டமாகும். நீர் ஆதாரம் அழிந்தால் இனமும், மொழியும் சேர்ந்தே அழிந்து விடும். தமிழர்கள் உணர்வோடு விழித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் களத்தில் ரஜினியை பா.ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாக பரவலாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக ரஜினியின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிப்பது இல்லை என்கிற புகாரும் இருந்து வருகிறது.

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்ததும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக முதல் ஆளாக ரஜினி குரல் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு இதற்கு முன்னர் ரஜினி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். இந்த நிலையில் காவிரி போராட்டத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்டதை வன்முறையின் உச்சம் என்று ரஜினி விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

-athirvu.com