நல்ல ஜனநாயக சகுனம்!

  • கி. சீலதாஸ், ஏப்ரல் 14, 2018.

 

பதினான்காம்  பொதுத் தேர்தல்  நடத்துவதற்கான  ஏற்பாடுகள்  தொடங்குவதற்கு  முன்பு  நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டுவிட்டது.  வேட்பாளர்  நியமனத்  தேதி,  வாக்களிப்பு  நாள்,  வாக்குகளை  எண்ண  வேண்டிய  நாள்  எதுவும்  அறிவிக்கப்படுவதற்கு  முன்பே அறிவியல்  கருவிகளின்  வழி  தேர்தல்   பிரச்சாரம்  ஆரம்பித்துவிட்டது.  முகநூல்,  வாட்ஸ்அப்,  டுவீட்டர்  போன்ற  வசதிகள்  செய்திகளை  வினாடிப்  பொழுதில்  உலகெங்கும்  பரப்பும்  தரத்தைக்  கொண்டிருக்கின்றன.  எனவே,  இந்தத்  தேர்தலும்  இனி  வரக்கூடியத்  தேர்தல்களும்  இப்படிப்பட்ட  வசதிகளை  மட்டுமல்ல  மேலும்   பல  வழிமுறைகளை  மேற்கொள்ளும்  வாய்ப்பு  உண்டு   என்று  சொல்லலாம்.  இந்த  முன்னேற்றமானது,    வெறும்  வானொலி,  தொலைக்காட்சி,  அரசின்  செய்தி  விளம்பரத்துறையின்  செய்திகளை   நம்பாமல்  பொதுமக்களே  தங்களுக்குத்  தெரிந்த  செய்திகளைத்  துரிதமாகப்  பரப்புவதற்கு  வழி  செய்துவிட்டது.  எனவே,  தேர்தல்  பிரச்சாரம்  வெறும்  மேடை  பேச்சோடு  நின்றுவிடாமல்  இடைவிடாத  இதர கருவிகள்  வழியாகவும்  நடக்கும்  என்பது  உறுதி.

 

அம்னோ,  மசீச,  மஇகா  மற்றும்  ஏனையக்  கட்சிகள்  ஒரே  சின்னத்தின்  கீழ்  தேசிய  முன்னணியாக  போட்டியிடுவது  வழக்கம்.  எதிர்க்கட்சிகளோ    ஓர்  உடன்படிக்கையைக்  கண்டு  அவர்களுக்குள்  போட்டி  இடமாட்டார்கள்.  எதிர்க்கட்சிகள்  ஏற்படுத்திக்  கொள்ளும்  தொகுதி  உடன்பாடு,  குறைந்தபட்ச  கொள்கைகளைக்  கொண்ட  தேர்தல்  அறிக்கை  ஆகியவைகளை   உறுதிப்படுத்தி  தேர்தல்  களத்தில்  இறங்கும்.  எதிர்க்கட்சிகள்  தனித்தனி  சின்னங்களில்  போட்டியிடுவது  வாக்காளர்களிடையே  ஒரு  குழப்பத்தை  ஏற்படுத்தியிருக்கலாம்.  எதிர்க்கட்சிகள்  ஒரே  சின்னத்தின்  கீழ்  போட்டியிடவேண்டும்  என்றால்  தனித்தனிக்கட்சிகள்  தங்களின்    கௌரவத்தை,  கட்சியின்  சின்னப்  பற்றுதலை,  தேர்தல்  காலத்தில்  கைவிட்டு,  ஒரு  பொதுச்  சின்னத்தில்  போட்டியிட்டால்  மக்களின்  நம்பிக்கை  வலுக்கும்  என்ற  கருத்து  பரவலாக  இருந்தது.  அது  எளிதான  காரியமா?

 

பதிமூன்றாம்  பொதுத் தேர்தலில்  எதிர்க்கட்சிகள்  ஆளுங்கட்சியைக்  காட்டிலும்  அதிக  வாக்குகளைப்  பெற்றிருந்த  போதிலும்,  தொகுதி  எல்லைத்  திருத்தம்  போன்ற   நடவடிக்கைகளால்  தேசிய  முன்னணி  அதிகமானத்  தொகுதிகளைக்  கைபற்றியது – இதுவே  உண்மை.  இப்பொழுதும்  தொகுதிகளைத்  திருத்தம்  செய்யப்பட்டுள்ளது.  இதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கப்பட்டபோதிலும்  நாடாளுமன்ற  சபாநாயகர்  சட்டவிதிகளுக்கு  மதிப்பளிக்காமல்  நடந்துகொண்டார்  என்ற  குற்றச்சாட்டும்  ஓய்ந்தபாடில்லை.  எனவே,  ஆளுங்கட்சியின்  தேர்தல்  வியூகங்களை  முறியடிக்கும்  பொருட்டும்,  மக்களுக்கு  நம்பிக்கை  ஊட்டும்  வகையிலும்  மலேசியாவின்  பிரதான  எதிர்க்கட்சிகளான,  நீதிக் கட்சி,  ஜனநாயகச்  செயல்  கட்சி,  அமானா,  துன்  மகாதீர்  முகம்மது  ஆரம்பித்துள்ள  புதிய  கட்சி  யாவும்  ஒரே  தேர்தல்  சின்னத்தில்  போட்டியிடத்  தீர்மானித்துவிட்டனர்.  மகாதீரின்  கட்சியானது,  நாடாளுமன்றம்  கலைக்கப்பட்ட  காலகட்டத்தில்  தற்காலிகமாகச்  செயல்படமுடியாமல்  தடுக்கப்பட்டுவிட்டது.  இந்தச்  சம்பவம்  மக்களிடையே  அதிருப்தி   ஏற்படுத்தி இருப்பதையும்  கவனத்தில்  கொண்டிருக்கவேண்டியுள்ளது.   அமைப்புகளின்  பதிவதிகாரி  நியாயமாக  நடந்துகொண்டிருந்தாலும்  தேர்தல்  காலத்தில்   இவ்வாறு  நடந்துகொண்டதானது  மக்கள்  மத்தியில்  சந்தேகத்தையும்,   மக்களின்  அனுதாபம்   எதிர்க்கட்சிகளுக்கு  திரும்ப  வழியுண்டு  என்றும்  கருதப்படுகிறது.

 

இந்த  நடவடிக்கையால்  நாட்டு  மக்களுக்கு  எதிர்க்கட்சிகளின்  மீது  நம்பிக்கை  ஏற்படுத்த  உதவும்  என்பதில்  எந்தச்  சந்தேகமும் இல்லை.  நாடு  சுதந்திரம்  பெற்ற  காலத்திலிருந்து  எதிர்க்கட்சிகளிடம்  காணப்படாத ஓர்  ஒற்றுமையை  இப்பொழுது  காணமுடிகிறது.  இது  ஜனநாயகத்திற்கு  நல்லது.  நாட்டுக்கு  நல்ல  சகுனம்  என்றுதான்  சொல்லவேண்டும்.  சில  சமயங்களில்  அதிகாரத்தில்  இருப்பவர்கள்  எதிரிகளை  முறியடிக்கும்  பொருட்டு  பலவிதமான  வியூகங்களை  கையாளுவார்கள்,  அவை  எதிர்பார்த்த  சாதகமான  முடிவைக்  காட்டிலும்   பாதகமான  விளைவுகளை  ஏற்படுத்திவிடும்  என்பது  அனுபவம்  கற்பிக்கும்  பாடம்.  பாரிமன்னனின்  புகழைப்  பரப்ப  நினைத்த  புலவர்  கபிலர்  மூவேந்தர்களைத்  கேலி  செய்யும்  விதத்தில்  போர்முறையைக்  கைவிட்டு  பஞ்சம்  என்று  வந்தால்  பலன்  கிடைக்கும்  என்று  சொல்லப்போக,  மூவேந்தர்கள்  அதைப்  பயன்படுத்தி  தஞ்சம்  கேட்கப்போய்  பாரியை  வென்றதாகச்  சொல்வார்கள்.   அளவுக்கு  மீறிய  கட்டுப்பாடுகள்,  வியூகங்கள்,  சித்து  வேலைகள்  விபரீத  முடிவுகளைத்  தரும்  என்பதையும் மறந்துவிடக்கூடாது.