- கி.சீலதாஸ், மே 3, 2018.
ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் வாக்காளர்கள் தெளிந்த, துணிந்த மனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. இதுவே ஜனநாயகம் காட்டும் வழி.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்துச் செயல்படுவார்கள். மக்களிடம் பொய்யுரைக்கும் அவசியம் இருக்காது. ஒரு கட்சி ஆட்சியில் இருந்தபோது அதன் நிர்வாகத்தின் மீது காணப்பட்ட நாணயம், நேர்மை, ஊழற்றத் தன்மை, பேணப்பட்ட நீதிமுறை, பாதுகாக்கப்பட்ட அரசியல் ஒழுங்கு, குற்றவியல் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், இன ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் ஒட்டுமொத்தமாக அவர்களுக்குச் சாதகமாக இருக்கும். இப்படிப்பட்ட நல்ல செயல்களை மேற்கொண்ட ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி வாக்காளர்களைச் சந்திக்க மீண்டும் வரும் போது எந்த ஒரு கவலையையும், சந்தேகத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் நாணயமே அவர்களுக்குக் கைகொடுக்கும்.
மாறாக அவர்கள் மேலே குறிப்பிட்ட அம்சங்களைப் புறக்கணித்தவர்கள் என்றால் பல விளக்கங்களைத் தந்தாக வேண்டும். அதோடு, பணத்தை வாரிவாரி இரைத்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டிவரும்; கரணம், அவர்களின் கடந்தகால ஆட்சி முறையில் நேர்மை நாணயம் கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது.
வாக்காளர்கள் ஜனநாயக மரபை உணர்ந்தவர்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணரவேண்டும். காரணம் வாக்காளர்களுக்குச் சிந்திக்கும் ஆற்றலும், எது உண்மை, எது பொய்மைக்கு உண்மை என்ற முலாம் பூசப்படுகிறது என்பதை அறியும் திறன் வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு. இதை தேர்தல் வியூகங்களில் பழக்கப்பட்டுப்போன அரசியல் கட்சிகள் உணர்ந்து கொள்ளவேண்டும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்தும் அதிகாரம் கொண்டிருக்கும் மக்கள் அதை நீக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் – முதலாம் உலகப்போரின்போது ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தீவிர போராட்டத்தில் இறங்கினர். முடிவு என்னவாயிற்று? எண்ணற்ற மரணங்கள். ரஷ்ய மன்னர் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்படுவதற்கு பலகோடி மக்களின் உயிர் காவு கொடுக்கப்பட்டது. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் கடுமையான உயிர்சேதங்களுக்குப் பின்னர் அட்டூழியத்தை அடிப்படையாகக் கொண்ட, முதாலாளித்துவத்தின் பாசைறையான அமெரிக்காவின் அடிவருடி பதிஸ்தாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. கியூபாவை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு உட்பட்ட நாடாக அறிவித்தார் காஸ்ட்ரோ.
மலேசியாவின் அண்டை நாடுகளான வியட்னாம், கொரியா, கம்போடியா போன்ற முன்னைய ஃபிரெஞ்சு காலனிகளில் கம்யூனிஸ்ட் புரட்சி வெடித்தது. கம்யூனிஸத்தை எதிர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இந்தோ– சீன நாடுகளில் தன் கைவரிசையைக் காட்டிய போதிலும் அந்தந்த நாடுகளின் மக்கள் எடுத்த முடிவே அமெரிக்காவின் தோல்விக்கு காரணமாயிற்று என்பதும் வரலாறு. மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆட்சி மாற்றமானது ஆயுதப் போராட்டங்களால் மேற்கொள்ளப்பட்டது. அங்கே வன்முறை இருந்தது, உயிர்சேதம் இருந்தது; ஆனால் உலக வரலாற்றிலேயே முதன் முதலில் ஜனநாயக மரபுப்படி கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது என்றால் அது இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தி;ல் நிறைவேறியது. மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் மேற்கு வங்காளத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி மிளிர்வதற்கு தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர் மக்கள். ஜனநாயகம் அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு இடம் அளிக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிராஞ்சு, ஜெர்மனி, ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகளில் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் காணப்படுவது கண்கூடு.
ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படும் சக்தியைக் கூட நம்பலாம். ஆனால், ஜனநாயகத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறுபவர்கள் அதற்கு முரணானச் செயல்களில் இறங்குபவர்களை நம்பவே முடியாது. ஊழல் வழி ஜனநாயகத்தின் பேரில் பல முறைகேடுகளைச் செய்துவிட்டு நியாயவாதிகள் போல் நடிப்பவர்கள் நாட்டு நலனில் இம்மியளவும் கரிசனம் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் சுயநலவாதிகள். அவர்களை நம்பினால் ஏமாற்றம் தொடரும். கொடுமையான அரசியல் வாழ்க்கைக்கு நீண்ட ஆயுள் நல்குவதுபோல் அமைந்துவிடும்.
கேரள மாநில மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுத்த போதிலும் அவர்களுக்கு அக்கட்சியின் நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்பட்டபோது வாக்களிப்பின் மூலம் அதை நீக்கினார்கள். நடந்து முடிந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் கேரளத்தை கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியும் மாறிமாறி ஆட்சி புரிந்தன. சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இது எதைக் குறிக்கிறது? ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்புதான் முக்கியம். அவர்கள் மாற்றத்தை விரும்பும்போது சூழ்ச்சிமுறைகளால் அதைத் தோற்கடிக்க நினைப்பது தவறாகும். அவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் மக்களின் கடமை என்பதோடு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும் என்பது அந்த ஆணையத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டுமே அன்றி அது ஒரு கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கக்கூடாது. அப்படிப்பட்ட சந்தேகம் ஏற்படும் வகையில் அது நடந்து கொள்ளக்கூடாது! தேர்தல் ஆணையத்தின் தலைவர் எந்த அரசியல் கட்சியிலும் சேராதவராக இருக்கவேண்டும். இப்பொழுது அதன் தலைவராக இருப்பவர் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இது உண்மை என்றால் அவரின் விசுவாசம் எங்கு இருக்கும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள சிரமம் ஏதும் இருக்காது.