தேசிய முன்னணியின் பிடியிலிருந்தும், இனவாத அரசியலில் இருந்தும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு புத்துணர்ச்சி பெறும்வகையில் விடுதலை பெற்றுள்ளது. இந்த மாற்றம் மகத்தானது. இது மக்களின் உரத்த குரலால் ஒலிக்கப்பட்டுள்ளது.
எதிரக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும், அபார வளர்ச்சி முடக்கப்படும், நாடு திவாலாகும் என்பது போன்ற அச்சுறுத்தல்கள் பலிக்கவில்லை. நாட்டை குத்தகைக்கு எடுத்த வகையில் அரசியல் வலிமையைக் கொண்டு மக்களை எப்படியெல்லாம் அடக்க முடியுமோ அப்படியெல்லாம் அடக்க அரசாங்கத்தின் ஆளுமையில் உள்ள நீதித்துறை, காவால் துறை, அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம், இலஞ்ச ஒழிப்புத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி இப்படியாக ஒட்டுமொத்தமாக அரசாங்க அமைப்புகள் அனைத்துமே தேசிய முன்னணி அம்னோவின் ஆதிக்கத்தில் இருந்தன.
அந்த ஆதிக்கம் மக்களின் சனநாயக எழுச்சியால் வீழ்ந்தது. அந்த ஆதிக்கத்திற்குத் துணை நின்ற மசீச மற்றும் மஇகா போன்ற கட்சிகளும் படுமோசமான நிலையில் தோற்றன.
இந்தியர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு மாபெரும் மாற்றமாகும். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவர்களின் பிடியில் இருந்த அரசாங்கம்தான் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் அதிகப்படியான நிதியை இந்தியர்களின் மேம்பாட்டுக்கும், கல்விக்கும் ஒதுக்கீடு செய்து ஒரு காலங்கடந்த முயற்சியை அறையுங்குறையுமாக முன்னெடுத்தது. கட்சி அரசியல், இலஞ்சம், ஊழல், அதிகாரத்துவம் போன்றவைகளில் ஊறிக்கிடந்ததால் தேசிய முன்னணியில் திறன்பட இருந்தவர்களும் சோரம் போன நிலையில், அதுவால் அதிகமாக எதையும் செய்ய இயலவில்லை.
கடந்த ஆண்டு நஜிப் அவர்கள் வெளியிட்ட இந்தியர்களுக்கான பெருந்திட்டம் இந்தியர்களின் சிக்கலை அழகாகச் சித்தரித்தது. ஆனால், அவர்களின் அல்லலை நீக்க தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை முற்றாக மூடிமறைத்தது. குறிப்பாக 2018-க்கான நாட்டின் பட்ஜெட்டில் பெருந்திட்டம் செயலாக்கதிற்கான நிதி ஒதுக்கீடு அற்பத்தனமாக இருந்தது, அந்தத் திட்டம் ஒரு கண்துடைப்பு மட்டுமே என்பதற்கான அறிகுறியைக் காட்டியது!
தற்போது உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை கூட்டணி ஒரு புதிய அரசியல் முனைப்பாகும். 93 வயதுடைய முன்னாள் பிரதமர் துன் மகாதீரை புதிய பிரதமராகக் கொண்டு மலர்ந்துள்ளது.
இதில் இனவாத வகையில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் இல்லை. அதே போல் சீனர்களுக்கும் கட்சிகள் இல்லை. ஆனால் மலாய்காரர்களுக்கு மட்டும் உள்ளது. இந்த நிலையில் மக்கள்தான் நாட்டின் சமூக, அரசியல் பொருளாதார வளர்சியின் மையம் என்ற உன்னத சிந்தனையின் அடிப்படையில் நம்பிக்கை கூட்டணி தேர்தலில் இறங்கியது. 60 ஆண்டுகளாக பழகிப்போன நடைமுறையில் இந்தச் சிந்தனை ஒரு புதிய திருப்புமுனையாகும்.
தேர்தலுக்கு முன்பாக மக்களின் மேம்பாடு எப்படி அமையும் என்ற வகையில் தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் தங்களின் சிறந்த வெளிப்பாடாக கொள்கை அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அவை மாறுபட்டவையாக இருப்பினும், மக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
ஆனால் தேசிய முன்னணி அதன் 60 ஆண்டுகால நீரோட்டத்தில் இந்தியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருந்திட்ட அறிக்கையின் வழி ஒப்புக்கொண்டது பலத்த விவாதத்தை உண்டாக்கியது. 60 ஆண்டுகாலமாக செய்யத் தவறியதை இன்னும் ஐந்தாண்டுகளில் செய்வோம் என்ற பிரச்சாரம் கேலிக்கூத்தாக அமைந்தது. நஜிப் அவர்கள் தம் மீது நம்பிக்கை வைக்க கோரியது காலங்கடந்த கூவலாக எதிரொலித்தது.
தற்போது மலர்ந்துள்ள நம்பிக்கை கூட்டணி ஒரு பலத்த எதிர்பார்ப்புடன் காலடி வைத்துள்ளது. 60 ஆண்டுகால ஆட்சியை இழந்த தேசிய முன்னணி கட்டுகோப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொண்டது நமது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. 2008ஆம் ஆண்டு தேர்தலில், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது, அதையடுத்து, 2013இல் பெரும்பான்மையான 53 விழுக்காடு வாக்குகளை எதிர்கட்சிகள் பெற்றிருந்தும், தேசிய முன்னணி அதிக இடங்களை வென்றிருந்ததால் ஆட்சியை தற்காத்துக் கொண்டது..
2018ஆம் ஆண்டு ஓர் உச்சத்தை எட்டும் வகையில் அமைந்தது. வாக்காளர்களின் தொகுதிகள் மறுசீரமைப்பு, இன அடிப்படையில் வாக்காளர்களை ஒதுக்கியது போன்ற தேசிய முன்னணியின் கள்ளத்தன வியூகங்களை ஒன்றுபட்ட மக்களின் சக்தி உடைத்தது. ஒரு புதிய அரசாங்கம் அரசியல் முதிர்ச்சி கொண்ட துன் மகாதீரின் தலைமையில் நாட்டை மறுசீரமைக்கப் புறப்பட்டுள்ளது. அனுவமும் ஆற்றலும் கொண்ட துன் அவர்கள், நாட்டை காப்பாற்ற முன்வந்தது ஒரு வரலாற்று திருப்பு முனையாகும்.
இந்த மாபெரும் அரசியல் மாற்றம் ஒரு புதிய புத்துணர்ச்சி கொண்டதாக உள்ளது. இனங்களுக்கிடையிலான வேறுபாட்டை அடிப்டையாக கொண்டு அம்னோ, மசீச, மஇகா என்று இனவாரியாக இயங்கிய அரசியல் சூழல் அகற்றப்பட்டு நம்பிக்கை கூட்டணி என்ற வகையில் இன்று மத்திய அரசாங்கம் அமைக்கப்படுகிறது.
இனி நமது உரிமைகள் காக்கப்படும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை கூட்டணிக்கான முழு ஆதரவை அனைத்து தரப்பு மக்களும் வழங்க வேண்டும். அதே வேளையில் நாட்டு மக்கள் எந்தக் கட்சி அரசியலை பின்னணியாக கொண்டிருந்தாலும் அவர்களையும் உள்ளடக்கிய வகையில் அரசின் திட்டங்கள் பயனளிக்க வேண்டும்.
சனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல. அது நமது அன்றாட வாழ்க்கையாகும், நமது உரிமைகளுக்கான சுவாசமாகும். நம்பிக்கை கூட்டணி அவ்வகையில் பணியாற்றும் என்ற மக்களின் நம்பிக்கையே அதன் வெற்றிக்கான அடிப்படையாகும். இதில் விடிவெள்ளியாக திகழ்பவர்கள் மக்கள்.
Hope the best to all malaysian