“வேலு பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் இல்லை. அவன் மறுஅவதாரமாக வந்திருக்கிறார் சீமான். பிரபாகரனுடைய சீருடையை சீமானுக்குப் போட்டுப் பாருங்க, அப்படியே இருப்பான். அவர் செந்தமிழ் என்று சொல்லுவார்… ஆனால், இவர் கருப்புத் தமிழன். நீங்கள் எல்லாம் 30க்கு கீழே… எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. சரியான பாதையை தேர்ந்தெடுத்துப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்”.
சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று (மே 18) இன எழுச்சி அரசியல் மாநாடு நடைபெற்றது. சீமான் தலைமையில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் நினைவாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இயக்குநனர் பாரதிராஜா பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ளவை.
மேலும் அவர்,
“பல அமைப்புகள் மொழி, இனம் பற்றி பேசுகிறார்கள். பேசலாம், ஆனால் உண்மை பேச வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். அது, இந்த சீமானிடம் உள்ளது. நான் பொய் சொல்லவில்லை. அவனது சமீபமாக அரசியல், இனம், மொழிக்காக கொடுக்கின்ற உத்வேகம், ‘பெரிய இடைவெளிக்குப் பின்னால் ஒரு அக்னி குஞ்சு ஒன்று பிறந்திருக்கிறது’ என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. என்னை சிலர் கேட்டார்கள், ‘நீ இதை கையில் எடுத்திருக்கலாம்’ என்று. அவனுக்கு இருக்கக் கூடிய வீரம், ஆற்றல்… அது வேற. அவனும் கலைஞன் தான் நானும் கலைஞன்தான். ஆனால், நான் கலையில் முழுமையாக ஈடுபட்டேன். எங்கேயாவது பிரச்சனை என்றால் குரல் கொடுப்பேன். ஆனால் அவன் அப்படி இல்லை. அழுத்தமாக ஊன்றி நிக்கிறான். இந்தத் தலைமுறையில் இந்த அக்னி குஞ்சை விட்டால் வேறு வழியில்லை.
சீமான் சமீபகாலமாக மிக தெளிவாக இருக்கிறார். உடம்பில் வெள்ளை சிவப்பு என்று இரண்டு அணுக்கள் இருக்கு. இதில் இரண்டில் ஒன்று குறைந்தால் கூட ஆபத்து. உன் இளைஞர்களுக்கு எல்லாம் இனம், மொழி என்ற வெள்ளை அணு, சிவப்பு அணு சரியான கலவையில் இருக்கு. இங்கு பேசியவர்கள் பொய்மையாகப் பேசவில்லை, உணர்ச்சிவசப்பட்டுப் பேசவில்லை உண்மையாகப் பேசினர். ஆனால் ஒன்று, தனிமனித விமர்சனங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தை தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இது.
இப்ப வந்து 8 வழி சாலை அமைக்க வேண்டும் என்கிறார்கள். அதை போய் நான் பார்த்தேன். அங்க இருக்கிற மலையை எல்லாம் குடைஞ்சு எடுத்துவிட்டார்கள். அந்த மலையில் இருக்கக் கூடிய கனிம வளமெல்லாம் யாருக்கு? எங்கேயோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்தப் போராட்டத்தையும் எடுத்து நடத்துவது சீமானின் கடமை. ‘புலியை முறத்தால் விரட்டிய வீரத் தமிழச்சி’ என்று புறநானூற்றில் பார்த்தோம். அதன் பிறகு, தமிழச்சி தன் பிள்ளையை போருக்கு அனுப்புவாள், போரிலே அவன் மாண்டுவிடுவான், செய்தி வரும், அவள் கேட்பாள் ‘என் பிள்ளை வேல் முதுகில் பாய்ந்ததா அல்லது நெஞ்சில் பாய்ந்ததா? புறமுதுகு இட்டு ஓடியிருந்தால் வேல் அவன் முதுகில் பாய்ந்திருக்கும். அப்படியென்றால் அவனுக்குப் பால் கொடுத்த மாரை வெட்டி எறிவேன்’ என்று சொன்ன தமிழச்சி. அத்தகைய தமிழச்சியை நான் பார்த்தது ஈழத்தில் தான்.
அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய்விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும். நாகரீகமாக ஒவ்வொருவருக்கும் நடுகல் நடப்பட்டு இருக்கிறது. மூத்தகுடி, 3000 ஆண்டுகளுக்கு முன்னாடி, என்று பேசிப் பேசி தோற்றுவிட்டோம். அன்றைக்கு இருந்த மத்திய அரசும் மாநில அரசும் மிகப்பெரிய குற்றவாளிகள். உலக வரலாற்றில் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது. எங்கள் பிள்ளைகள் மறைந்து விடவில்லை. இதோ இங்கு கூடியிருக்கிறார்கள். சரியான பாதையில் நீங்கள் நடைபோட்டால் நாடு உங்கள் வசம். இந்த நாடு உங்கள் வசம் என்றால் ஈழம் உங்கள் வசம்” என்று பேசினார்.
-nakkheeran.in