தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 65 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது . ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது.
தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என கமல் கூறினார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது கமல்ஹாசன் மக்களை சந்தித்து பேசியது தவறு என தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குச் சென்றது தவறு என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர் அவர் கூறும் போது மக்களை தாக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். தூத்துக்குடியில் உடனடியாக அமைதியை உருவாக்க அரசு குழுவை நியமிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும். நடந்த சம்பங்களை வேதனையோடு மக்கள் என்னிடம் விளக்கிக் கூறினார்கள்.
தூத்துக்குடி நகரமே சோக சம்பவத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது என கூறி உள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தூத்துக்குடி வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் இப்போதுதான் பெங்களூரு வந்தடைந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பான சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன் எனக் கூறியுள்ளார். தமிழக மக்களின் துக்கமான நேரத்தில் என்னுடைய பிரார்த்தனைகள் அவர்கள் பக்கம் இருக்கும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று நேற்று கூறியிருந்தார்.
-dailythanthi.com
Tq malaysia kini..for TAMIL