சுமார் 125 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவற்றின் வகுப்புகளை ஒருங்கிணைக்க கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அப்படி ஒருங்கிணைப்பு செய்தால், பலவீனமாக உள்ள மாணவர்களின் மீட்புக்காக நியமனம் செய்யப்பட்ட விசேச ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மக்கள் ஓசை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில் இந்த வகுப்புகளை ஒருங்கிணைக்கும் திட்டம் கடந்த வருடமே முடிவு செய்யப்பட்டதாகவும், அதன் தாக்கமாக ஏகப்பட்ட ஆசிரியர்கள் வேலை மாற்றம் அடைவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதாக அறிவித்தது தேசிய முன்னணியின் அரசாங்கம். ஆனால், பொதுத்தேர்தல் காலத்தில் வகுப்பு ஒருங்கிணைப்பு அறிவிப்பு தமிழர்களிடையே ஏற்புடையதாக இருக்காது என்ற காரணத்தால் அதை வெளியிடவில்லை.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நிலையில்தான் மற்ற பள்ளிகளும் உள்ளன. அதற்கான காரணம், மக்கள்தொகை வளர்ச்சியில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு கண்டுள்ளதும், அதோடு தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருவதுமாகும்.
எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு பள்ளிகள் மாற்றம் செய்யப்படவேண்டும். தமிழ்ப்பள்ளி கல்வி வழி அடையும் பயன்களை உணர்ந்து அவை மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு அதிகமான பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளியே தங்களின் தேர்வாக கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட மாறுபட்ட சூழல் உருவாக சமூகம் முன்வர வேண்டும். அதைவிடுத்து, நாம் அவசரமாக தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த எந்த முடிவையும் எடுக்க இயலாது.
அரசாங்க மாற்றம் நிகழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், இந்த வகுப்பறைகளை ஒருங்கிணப்பு செய்யும் திட்டத்தை தற்காலிகமாக இரத்து செய்து விட்டு, அதன் சார்பாக இணக்கம் காண தமிழ்ப்பள்ளிகள் சார்புடைய சமூக கல்வி இயக்கங்கள், சமூக ஆர்வலர்களுடன் கலந்தாலோசிக்க புதிய கல்வி அமைச்சர் முன்வரவேண்டும்.
தமிழ்வழிக் கல்வி நமக்கு கிடைத்திருக்கும் ஓர் உரிமையாகும். எனவே, நாம் தமிழ்மொழியை அரசு மொழிகளில் ஒன்றாக உருவாக்க தேவைப்படும் முனைப்புகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, அவசரப்பட்டு இருக்கும் நிலையைப் பறிகொடுத்தால், நாம் இருநூறு ஆண்டுகள் இம்மண்ணில் கட்டிக் காத்த தமிழ்க் கல்வி தோய்வுரும்.