மீண்டும் ஏமாறும் அளவுக்கு நாம் முட்டாள்களா, என்ன? -KEE THUAN CHYE

கருத்துக் கட்டுரை: அரசாங்கம் மலேசியர்களை முட்டாள்களா நினைத்துக்கொண்டிருகிறதோ என்று நான் சிந்திப்பது உண்டு. வேறு என்ன, சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துவிட்டால் அதைச் சீரமைப்பு என்று ஏற்றுக்கொள்வோமா நாம்? ஆனால், ஏற்றுக்கொள்வோம் என்றுதான் அது நினைக்கிறது போலும்.

இரண்டு மாதங்களுக்குமுன், பிரதமர் நஜிப் ரசாக் செய்தித்தாள்கள் இனி ஆண்டுதோறும் அவற்றின் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று அறிவித்தபோது அந்த அறிவிப்பைக் கேட்டு நாமெல்லாரும் ஊடகங்கள் இனிமேல் சுதந்திரத்துடன் செயல்படும் காலம் வந்துவிட்டதாக எண்ணி அகமகிழ்ந்திருப்போம் என்று எண்ணியிருக்க வேண்டும்.

அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நாம்தான் முட்டாள்கள்தான். ஏனென்றால் அதில் மாற்றம் எதுவுமே இல்லை.

ஊடகங்கள் அவற்றின் உரிமங்களை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனால்கூட எந்தவொரு செய்தித்தாளையும் எந்த நேரத்திலும் ரத்துச் செய்யும் அல்லது நிறுத்தும் அதிகாரம் உள்துறை அமைச்சருக்கு இன்னும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே, உரிமத்தைப் புதுப்பித்தால் என்ன புதுப்பிக்காவிட்டால் என்ன. உள்துறை அமைச்சரின் மனம் கோணும்படி நடந்துகொண்டால் உங்கள் செய்தித்தாளுக்கு வந்துவிடும் ஆபத்து. அதற்கென்ன, நீதிமன்றம் செல்லலாமே என்று நினைக்கிறீர்களா. அதுதான் நடவாது. அவரது முடிவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது.

அட, எல்லாம் மோசடி போல் அல்லவா, தெரிகிறது, அரசாங்கம் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது சரிதாங்க. அது அல்லாமல், மைய நீரோட்ட ஊடகங்கள் நினைப்பதுபோல் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டியதில்லை என்பதை ஓர் உண்மையான சீரமைப்புத்தான் என்று நீங்களும் நினைத்தால் பிறகு  மலேசியர்கள் முட்டாள்கள் என்ற அரசாங்கத்தின் நினைப்பு சரிதான் என்றாகிவிடும்.

ஆனால், அப்படிப்பட்ட ஏமாளி மலேசியர்களும் இருக்கிறார்கள். ஆச்சரியமா இருக்கிறதா? அதுதான் உண்மை.

அவர்கள்தான் ஆளும்கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பவர்கள்; அதன் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்; தேர்தல்களில் அதற்குத் தொடர்ந்து வாக்களிப்பவர்கள்.

அவர்கள், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறியாதவர்கள். சிலருக்கு ஏமாற்றப்படுவது தெரியும். தெரிந்தும் தங்களை ஏமாற்றுவோரையே ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அதிமுட்டாள்தனம். 

அப்படிப்பட்டவர்கள், இரண்டு நாள்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட அமைதிப்பேரணி சட்டமுன்வரைவு கூடுதல் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும்,  நஜிப் உறுதிகூறியதுபோல் மலேசியாவை “உன்னத ஜனநாயகத்துக்கு” இட்டுச் செல்லும் என்றும் நினைப்பார்களேயானால்  அவர்கள் தொடர்ந்து முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

தங்களின் மடத்தனத்தால், அது மலேசியர்களை ஏமாற்றும் இன்னொரு முயற்சி என்பதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அது நல்லது, போலீஸ் அனுமதியின்றி மலேசியர்கள் ஒன்றுகூட அது வாய்ப்பளிக்கிறது என்பார்கள்.

மேலோட்டமாக பார்த்தால், போலீஸ் அனுமதி வேண்டியதில்லை என்பது நல்லதாகத்தான் தெரிகிறது. ஆனால், கூடவே உள்ள நிபந்தனைகளைப் பாருங்கள். அங்கேதானே வைக்கப்பட்டிருக்கிறது ஆப்பு. போலீஸ் அனுமதி வேண்டியதில்லை ஆனால், போலீஸ் மறுப்புத் தெரிவித்தால் பேரணி நடத்தவியலாது.

அப்படியானால் அதற்கு என்ன பெயர்?

வில்லங்கத்தைப் பாருங்கள். போலீஸ் அனுமதி தேவையில்லை ஆனால், போலீஸ் மறுப்புத் தெரிவித்தால் பேரணி நடத்த முடியாது. அப்படி என்றால்…?பேரணி நடத்த எப்படியும் போலீஸ் அனுமதி தேவை என்பதுதானே அதன் பொருள்? அப்படியானால், அதில் புதிதாக என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப்போனால் நிலைமை முன்பைவிட மேலும் மோசமாகியுள்ளது. பேரணி நடத்துவதாக இருந்தால் அது பற்றி 30 நாள்களுக்கு முன்னால் போலீசுக்குத்  தெரிவிக்கப்பட வேண்டும். 30 நாள்களுக்கு முன்னால்! அதாவது, மிகவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

சரி, திடீரென்று கூட்டம் நடத்த நினைத்தால்…?அரசாங்கத்தின் அநியாயத்தையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் பிடிக்காத மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த தெருக்களில் உடனடி ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய நினைத்தால்..?

அது சட்டவிரோதமாகக் கருதப்படும். 30-நாள்களுக்குமுன் தெரியப்படுத்தவில்லை என்றால் ரிம10,000 அபராதம் விதிக்கப்படும்.

இளைஞருக்கெதிராக பாகுபாடு

ஆ…ஆ…“தெருக்களில் ஆர்ப்பாட்டம்” என்றா சொன்னேன். புதிய சட்டமுன்வரைவில் தெரு ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் அறவே இடமில்லை.

என்ன? அப்படியானால் ஒன்றுகூடுவதன் நோக்கம் என்ன? நலம் விசாரித்து விட்டு அளவலாவி விட்டுப் பிரிந்து செல்வதா?

புதிய சட்டமுன்வரைவு, மக்களுக்குக் கூடுதல் ஜனநாயக உரிமைகளைக் கொடுப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை அது அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டது என்பது தெளிவு. அது, அரசாங்கத்துக்கு எதிராக குடிமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.

மெய்யாகிலுமே, இப் புதிய சட்டமுன்வரைவு அரசமைப்பு உத்தரவாதமளிக்கும் உரிமைகளை மீறுகிறது.

ஒன்று, 21 வயதுக்குக் குறைந்தவர்கள் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியாது.இது நியாயமா? அவர்கள் குடிமக்கள் இல்லையா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டாமா? இதுதான் ஜனநாயகமா?இதுதான் “உன்னத ஜனநாயகமா?”

இரண்டு, நீங்கள் 15 வயதுக்குக் குறைந்தவரா? பண்பாட்டு அல்லது சமயக் கூட்டங்கள், இறுதிச் சடங்குகள் அல்லது உள்துறை அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்ற நிகழ்வுகளில் மட்டுமே கலந்துகொள்ளலாம்.இங்கும் உள்துறை அமைச்சரின் அதிகாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

மூன்று, எந்தெந்த இடத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடலாம், எந்தெந்த இடங்களில் ஒன்றுகூட முடியாது என்பதெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது. முன்பு இப்படியெல்லாம் செய்யப்பட்டதில்லை.  

போலீசுக்குக் கூடுதல் அதிகாரம்

பெட்ரோல் நிலையங்கள், மருத்துவ மனைகள், பள்ளிவாசல்கள், தீ அணைப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் இப்படி இன்னும் பல இடங்களில் பேரணி நடத்துவது தடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனநாயக உரிமை என்பது மேலும் சுருங்கி விட்டது. குறிப்பிட்ட இடங்களுக்கு 50 மீட்டருக்கு அப்பால்தான் கூட்டங்களை நடத்த முடியும்.

நகர் மத்தியில் குறிப்பிட்ட அந்த இடங்கள் ஒன்றுக்கு மற்றொன்று மிக அருகில் அமைந்திருப்பது கண்கூடு. இந்நிலையில் அங்கு பெரும் கூட்டம்கூடுவதோ ஆர்ப்பாட்டம் நடத்துவதோ எப்படி? ஆக, இந்நிபந்தனை நகர் மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை முற்றாகத் தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளது தெளிவு.

நான்கு, இது போலீசுக்கு முன்பு இருந்ததைவிடக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது. பேரணியில் கலந்துகொள்ளும் ஒருவர் பிரச்னைக்குரியவர் என்று அவர்கள் முடிவு செய்தால் அவரைக் கைது செய்யலாம். அப்படிக் கைது செய்யப்படுகின்றவர்களுக்கு ரிம20,000 அபராதம் விதிக்கவும் இடமுண்டு. கூடுதல் உரிமைகள் என்று கூறப்படுவது இதுதானா? போலீசின் முடிவு நியாயமாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்வது?

எனவே, சக மலேசியர்களே, நாம் என்ன முட்டாள்களாக இருக்கப் போகிறோமா?அரசமைப்பைப் பொருட்படுத்தாமல் நம்முடைய உரிமைகளையும் முடக்கிபோட முயலும் இந்தச் சட்டமுன்வரைவை ஏற்றுக்கொள்ளப் போகிறோமா?

மலேசியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்லபோகிறது. அதனால் இதைச் சட்டமாக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதை நம்பி அதற்கு நன்றி தெரிவிக்கும் ஏமாளிக்கூட்டமாகவே இருக்கப் போகிறோமா? ஏமாற்றப்படுவதை அறியாமலேயே  மீண்டும் மீண்டும் நம்பி மோசம் போகபோகிறோமா?

இப்போதைக்குத் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அபராதம் விதிப்பதற்கு இடமில்லை.ஆர்ப்பாடங்கள் குறித்து 30-நாள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டிய அவசியமும் இப்போதைக்கு இல்லை. ஆனால், இது சட்டமாகி விட்டால் ஒன்றும் செய்ய வியலாது.

=======================================================================================
KEE THUAN CHYE– ‘March 8: The Day Malaysia Woke Up’ என்ற நூலின் ஆசிரியர், வாசகர் தேர்வில் மூன்றாம் பரிசுபெற்ற நூல் அது.