சென்னை: காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக கர்நாடகா மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என கூறியிருப்பதன் மூலம் அவர்களை போராட ரஜினிகாந்த் தூண்டுகிறாரா? என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அம்மாநில முதல்வர் குமாரசாமியே படத்தை திரைப்படத்தை வெளியிட முடியாது என தெரிவித்திருப்பது ரஜினி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காலா குறித்து மக்களே முடிவு
இதனால் ரஜினிகாந்த் பெங்களூரு விரைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், படம் வெளியாவது குறித்து அம்மாநில மக்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் என கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
காலாவுக்காக கன்னடரை தூண்டுகிறாரா?
மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றால் காலாவை ரிலீஸ் செய்ய கோரி கன்னடர்களை போராட தூண்டுகிறாரா? என கேள்வி எழுப்பப்படுகிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என சாபம் கொடுத்தார் ரஜினிகாந்த்.
விஷக்கிருமிகள் என சாடல்
எதற்கெடுத்தாலும் போராட்டமா? என சலித்துக் கொண்டவர் ரஜினிகாந்த். அத்துடன் தங்களது உயிரைக் கொல்லும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை சமூக விரோதிகள், விஷக் கிருமிகள் என விமர்சித்தவரும் ரஜினிகாந்த்தான்.
அதிருப்தியை சம்பாதித்த ரஜினி
தற்போது சொந்த சுயநலனுக்காக மக்களை போராட தூண்டும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். மக்கள் முடிவெடுக்கட்டும் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்விடத்தை உயிரைக் காக்க போராடியதையே அவர் சரியாக புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக பேசி கடும் கண்டனங்களையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.
சுயலாபத்துக்காக வன்முறையை தூண்டும் ரஜினி?
ஆனால், தற்போது சுயலாபத்துக்காக தனது படத்துக்கு பிரச்சினை என்றதும் மக்களைத் தூண்டும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருப்பதுதான் அப்பட்டமான வன்முறையைத் தூண்டுகிற செயலாக தெரிகிறது என்று மக்கள் முனுமுனுக்கிறார்கள்.