சென்னையின் சில திரையரங்குகளில் காலா வெளியாகாதது ஏன்?

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நாளை வெளியாகவிருக்கும் காலா திரைப்படம் சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் உதயம், கமலா ஆகிய திரையரங்குகளில் வெளியாகாதது ஏன்?

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் நடித்திருக்கும் காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் கமலா சினிமாஸ், உதயம் காம்ப்ளக்ஸ் ஆகிய திரையரங்குகளில் காலா நாளை வெளியாகவில்லை.

காலா திரைப்படத்திற்கென அதிகமான தொகையை தயாரிப்பாளர் தரப்பில் கேட்டதால் தாங்கள் அந்தப் படத்தைத் திரையிடவில்லையென கமலா திரையரங்கின் சார்பில் கூறப்பட்டதாக புதன்கிழமை காலையில் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் உண்டர்பார் நிறுவனம் புதன்கிழமையன்று பிற்பகலில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்தது. “பிற திரையரங்குகள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை உதயமும் கமலாவும் ஒப்புக்கொள்ளவில்லை.

பெரிய அளவில் பணம் கேட்டதாகச் செய்திகள் வெளியாவது, முற்றிலும் அடிப்படை இல்லாதது, தவறானது” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

பா. ரஞ்சித்

உண்மையில் நடந்தது என்ன என கமலா திரையரங்கின் உரிமையாளர்களில் ஒருவரான வள்ளியப்பனிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது, “அவர்கள் சொன்ன வர்த்தகரீதியான கோரிக்கைகள் ஒத்துவரவில்லை. அதனால் படத்தைத் திரையிடவில்லை. சமூகவலைதளங்களில் நாங்கள் கூறியதாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. நாங்கள் ஜுராசிக் பார்க் திரைப்படத்தை வெளியிடுகிறோம். அதற்கான முன்பதிவு சிறப்பாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

வுண்டர்பார் நிறுவனம் முன்வைத்த வர்த்தகரீதியான கோரிக்கை என்னவெனக் கேட்டபோது, படத்தை தாங்கள் திரையிடாத நிலையில், அதைப் பற்றித் தான் பேசவிரும்பவில்லையென வள்ளியப்பன் கூறினார்.

“அவர்களுடைய தயாரிப்பு அந்தப் படம். அதற்கு அவர்கள் என்னவிதமான விதிகளையும் விதிக்கலாம். ஏற்றுக்கொண்டு வெளியிடுபவர்கள் வெளியிடலாம். அல்லது வெளியிடாமல் இருக்கலாம். நாங்கள் ஏற்கவில்லை, அவ்வளவுதான்” என்கிறார் வள்ளியப்பன்.

சென்னையின் கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்திருக்கும் உதயம் காம்ப்ளக்ஸில் நான்கு திரையரங்குகள் உள்ளன. வழக்கமாக ரஜினியின் படங்களை வெளியிடும் இந்தத் திரையரங்கிலும் காலா வெளியாகவில்லை.

kala

அந்தத் திரையரங்கின் நிர்வாகியான ஹரிஹரனிடம் கேட்டபோது, தயாரிப்பாளர்கள் விதித்த சில விதிமுறைகளை எங்களால் ஏற்கமுடியவில்லை, அதனால் படத்தை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறியதோடு முடித்துக்கொண்டார். அந்தத் திரையரங்கிலும் ஜுராசிக் பார்க் திரைப்படமே வெளியாகவிருக்கிறது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி திரையரங்கிலும் புதன்கிழமை மாலைவரை முன்பதிவு துவங்கவில்லை. இதனால், அந்தத் திரையரங்கிலும் படம் வெளியாகுமா என்ற கேள்வியிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு திரையரங்கில் காலா படத்தின் பேனர் கட்டப்பட்டு அங்கு படம் வெளியாவது உறுதியானது.

காசி திரையரங்கில் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன் என அந்தத் திரையரங்கின் உரிமையாளர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, “நேற்று இரவுதான் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல் நாளுக்கான டிக்கெட்களை ரசிகர்கள் மொத்தமாக வாங்கிக்கொண்டனர். ஆகவே, முன்பதிவை இன்னும் துவக்கவில்லை. இரண்டாவது நாளுக்கு நேரடி முன்பதிவை துவக்கியுள்ளோம். விரைவில் ஆன்லைனிலும் முன்பதிவு துவங்கும்” என்றார்.

ரஜினி

காலா திரைப்படத்தை வெளியிட “மினிமம் கேரண்டி” பணம் எதையும் தயாரிப்பாளர் கேட்கவில்லையென கூறிய காசி திரைப்படத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன், திரையரங்கில் வசூலாகும் பணத்தை தயாரிப்பாளரும் திரையரங்கங்களும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்வது என்பதில் சிலருக்கு முரண்பாடு இருந்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஏற்புடைய விதிமுறைகளை ஏற்று நாங்கள் இந்தப் படத்தைத் திரையிடுகிறோம் என்றார்.

வழக்கமாக திரையரங்கங்களும் படத்தின் விநியோகிஸ்தரும் வருவாயை 50-50 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வது வழக்கம். விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது விநியோகிஸ்தர்களுக்கு கூடுதல் சதவீதம் அளிக்கும்வகையில், அதாவது 65-35 என்ற வீதத்தில் ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்த வருவாய் பகிர்வில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே சில திரையரங்குகள் காலாவைத் திரையிட முன்வரவில்லையெனத் தெரிகிறது.

வழக்கமாக ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களின் முதல் நாட்கள் காட்சிகளுக்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே முழுவதும் முடிந்துவிடும். ஆனால், காலா திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவுவரை முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை நடந்துவருகிறது. சென்னையில் உள்ள சுமார் 75 சதவீத திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகிறது. -BBC_Tamil