மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்.!

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழ்கிற விளைநிலங்களை பசுமை வழி சாலைகளுக்காக அரசு கையகப்படுத்துவதை அப்பகுதி மக்கள் துளியும் விரும்பவில்லை. தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் முயற்சியகாகவே இதனை அவர்கள் பார்க்கின்றனர்.

அதே சமயம், சாலைகள் அமைப்பதற்காக பொதுமக்களின் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த அளவெடுத்து வருகிறது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களும், பொதுமக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்ற சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக கூறி, அவரை போலீசார் கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து, 8 வழிச்சாலையை எதிர்த்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பியூஸ் மானுஷ்க்கு மட்டும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து, மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இந்நிலையில், தனது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், 8வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.

-athirvu.in